TNPSC Thervupettagam

முன்னுதாரண நாடுகளின் கதை

May 25 , 2021 1075 days 521 0
  • தினந்தோறும் கரோனா மரணங்கள், தொற்றுகள் தொடர்பான செய்திகளே அதிகம் வருகின்றன. உலக நாடுகள் பலவும் தங்களுக்கே உரிய வழிகளில் கரோனாவை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருக்கின்றன. அவற்றுள் பிற நாடுகளுக்கும் முன்னுதாரணமாக அமையும் வெற்றிக் கதைகள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

தைவான்

  • சீனாவுக்கு அருகில் இருக்கும் தைவான் 2.36 கோடி மக்கள்தொகையைக் கொண்டது. இங்கே இதுவரை தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 4,322; உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23.
  • வூஹானில் ஆரம்பக் கட்டத் தொற்றுகள் கண்டறியப்பட்டதுமே தைவான் விழித்துக் கொண்டது. வூஹானிலிருந்து வரும் பயணிகளை தைவான் தனிமைப்படுத்தியது.
  • 2003-ல் சார்ஸ்வைரஸால் கடுமையாகப் பாதிப்புக்குள்ளாகியிருந்த தைவானுக்கு அந்த முன்னனுபவம் கைகொடுத்தது. மருத்துவக் கட்டமைப்பை தைவான் வலுப்படுத்தியது. குடிமக்களை அதிக அளவில் பரிசோதனைக்கு உள்ளாக்கியது.
  • உலகத்தில் பல நாடுகளையும் முந்திக்கொண்டு தைவான் முகக்கவசங்களைப் பயன்படுத்த ஆரம்பித்தது. பொதுமுடக்கத்தை அமல்படுத்தாமலேயே கரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறது.

நியூசிலாந்து

  • 2020 ஜூன் மாதமே கரோனாவுக்கு எதிரான போரில் வெற்றியை அறிவித்த நாடு நியூஸிலாந்து. இதுவரை அங்கே ஏற்பட்டிருக்கும் தொற்றுகளின் எண்ணிக்கை மொத்தமே 2,668. இவர்களில் 26 பேர் கரோனாவால் உயிரிழந்திருக்கிறார்கள்.
  • கரோனா பரவலானது பெருந்தொற்று என்று அறிவிக்கப்பட்டதும் சர்வதேச நாடுகளிலிருந்து வரும் பயணிகளை இரண்டு வாரம் தனிமைப்படுத்த உத்தரவிட்ட நியூஸிலாந்து பிரதமர் நிலவரங்களை மக்களிடம் தெளிவாக எடுத்துக்கூறினார்.
  • அரசு ஒளிவுமறைவின்றிச் செயல்பட்டது. மக்களும் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். ஒவ்வொரு தொற்றாளரின் தொடர்பு வளையமும் கடுமையான கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டது. வெளியிலிருந்து தொற்று உள்ளே வர முடியாதஅளவிலும் சமூகப் பரவல் ஏற்படாத அளவிலும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.
  • விளைவு,தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கு முன்பே நியூஸிலாந்து கரோனாவை வெற்றி கொண்டது. இரண்டாம் அலையிலும்கூட இப்போது அங்கே தொற்று மிகக்குறைவாகவே காணப்படுகிறது. மே 23 அன்று 6 பேருக்கு மட்டும் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.

அமெரிக்கா

  • கரோனா தொற்றை மிக மோசமாகக் கையாண்ட நாடு அமெரிக்கா. இதற்குக் காரணம் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்.
  • பொது முடக்கங்களுக்கு எதிராகப் பேசியதில் ஆரம்பித்துமுகக்கவசம் போடாமல் பத்திரிகையாளர் சந்திப்புகளில் பங்கேற்றது வரை ஒரு மோசமான முன்னுதாரணமாக அவர் செயல்பட்டார். “தடுப்பூசி இல்லாமலேயே கரோனா போய்விடும்” என்றார்.
  • அமெரிக்காவில் இதுவரை 3,38,96,660 பேருக்குத் தொற்று ஏற்பட்டிருக்கிறது; 6,04,087 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
  • ஜோ பைடன் ஆட்சிக்கு வந்தபோது தனது ஆட்சியின் முதல் நூறு நாட்களுக்குள் 10 கோடி டோஸ்கள் தடுப்பூசி போடப்படும் என்று அவர் உறுதியளித்தார். ஆனால், அந்தக் கால அளவில் 22 கோடி டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.
  • இதன் விளைவாகத் தொற்றுகள், இறப்புகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருக்கிறது. ஜனவரி 8 அன்றுஒரு நாளில் உச்ச அளவாக 3,04,214 பேருக்குத்தொற்று ஏற்பட்டது; மே 22 அன்று 20,425 பேருக்குத் தொற்று ஏற்பட்டது.
  • ஜனவரி 12-ல்ஒரு நாளில் உச்ச அளவாக 4,468 பேர் உயிரிழந்தார்கள் என்றால் மே 23-ல் இறப்புஎண்ணிக்கை 228-ஆகக் குறைந்திருக்கிறது. இதுபைடன் அரசுக்குக் கிடைத்த வெற்றி.
  • அதன்விளைவாகத்தான் முழுமையாகத் தடுப்பூசிபோட்டுக் கொண்டவர்கள் முகக்கவசம் அணிந்து கொள்ளத் தேவையில்லை என்று அமெரிக்கா அறிவித்திருக்கிறது.

இஸ்ரேல்

  • தன் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 60%பேருக்கு ஒரு டோஸும் 57% பேருக்கு இரண்டு டோஸ்களையும் செலுத்திய இஸ்ரேல் கரோனாவுக்கு எதிரான போரில் கிட்டத்தட்ட வெற்றியை நெருங்கியிருக்கிறது.
  • முழுவதும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு அது ‘பச்சைக் கடவுச்சீட்டு’ (Green Passport) வழங்கியது. அந்தக் கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் திருவிழாக்கள், மணவிழாக்கள், உடற்பயிற்சிக் கூடம், நீச்சல் குளம் போன்றவற்றுக்குச் செல்லலாம்.
  • வெற்றிகரமான தடுப்பூசி இயக்கத்தின் காரணமாக மக்கள் முகக்கவசம் இல்லாமல் வெளியில் வரலாம் என்று இந்த ஆண்டு ஏப்ரல் 18 அன்று இஸ்ரேல் அரசு அறிவித்தது.

பிரிட்டன்

  • அமெரிக்கா, இந்தியாவைப் போலவே கரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளுள் பிரிட்டனும் ஒன்று.
  • தொற்றுகளைப் பொறுத்தவரை 44,62,538 தொற்றுகளுடன் உலகிலேயே 7-வது இடத்திலும்; இறப்புகளைப் பொறுத்தவரை 1,27,721 இறப்புகளுடன் உலகிலேயே 4-வது இடத்திலும் இருக்கும் நாடு அது. எனினும், கடுமையான பொதுமுடக்கம், தடுப்பூசி இயக்கம் போன்றவற்றை அந்நாடு முடுக்கிவிட்டது. கிட்டத்தட்ட 50% மக்களுக்குத் தடுப்பூசி போடப் பட்டிருக்கிறது. 50 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 95% பேருக்குத் தடுப்பூசி போட்டிருக்கிறது.
  • ஜனவரி 8 அன்று ஒரு நாள் உச்சமாக 67,928 என்று இருந்த தொற்றுகள் மே 23 என்று 2,235-ஆகக் குறைந்தது; ஜனவரி 20 அன்று ஒரு நாள் உச்சமாக 1,823 என்று இருந்த இறப்பு எண்ணிக்கை மே 22 அன்று 6-ஆகக் குறைந்தது. ஆகஸ்ட் மாதத்தில் கரோனாவிடமிருந்து விடுபட்டு விடுவோம் என்று துணிச்சலுடன் பிரிட்டன் அறிவித்திருக்கிறது.

சீனா

  • கரோனா வைரஸ் தோன்றிய இடமான சீனாவை வெகு காலமாக உலகமே அச்சத்துடன் பார்த்துவந்தது. ஆரம்பக் கட்ட தடுமாற்றங்கள், அதிகரித்த தொற்றுகள், இறப்புகளை அடுத்து சீனா சுறுசுறுப்பாகச் செயல்பட ஆரம்பித்தது.
  • மருத்துவக் கட்டமைப்பை மிக விரைவாக வலுப்படுத்தியது; புதிய மருத்துவமனைகளை விரைந்து உருவாக்கியது. கடுமையான பொதுமுடக்கத்தை அமல்படுத்தியது.
  • இவற்றின் விளைவாக, தடுப்பூசி போடப்படுவதற்கு முன்பே கரோனா தொற்றை சீனா வெகுவாகக் கட்டுப்படுத்தியது. தடுப்பூசியைப் பொறுத்தவரை இதுவரை 51.1 கோடி டோஸ்கள் தடுப்பூசி போட்டிருக்கிறது. சீனா தினமும் 1.4 கோடி பேருக்குத் தடுப்பூசி போடுகிறது.
  • அச்சத்துடன் பார்க்கப்பட்ட நிலையிலிருந்து இன்று முன்னுதாரணமாகப் பார்க்கப்படும் நிலைக்கு சீனா உயர்ந்திருக்கிறது.
  • கரோனா வைரஸ் புதுப் புது வடிவம் பெற்றுவருவதாலும் அதன் வீரியம் அதிகரித்துவருவதாலும் அதற்கு எதிராகப் பெறும் வெற்றிகளெல்லாம் தற்காலிகமானவையே என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
  • கரோனா பெருந்தொற்றை சில நாடுகள் மட்டும் வெற்றிகரமாகக் கையாண்டால் போதாது. முன்னுதாரண நாடுகளைப் பின்பற்றி அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து போரிட்டால்தான் இந்தப் போரை வெல்ல முடியும்.

நன்றி: இந்து தமிழ் திசை (25 - 05 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories