TNPSC Thervupettagam

ரஷிய விவகாரத்தில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை குறித்த தலையங்கம்

April 7 , 2022 752 days 373 0
  • பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அண்மையில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைப் பாராட்டிப் பேசியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
  • "குவாட்' நாற்கரக் கூட்டணியில் இருந்தபோதும், அமெரிக்காவுக்கு எதிராக இந்தியாவால் ரஷிய விவகாரத்தில் நடுநிலையாகச் செயல்பட முடிகிறது; சர்வதேசப் பொருளாதாரத் தடைகளை மீறி, ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்கிறது - என்றெல்லாம் இந்திய அரசியல்வாதிகள் வெளிப்படையாகச் சொல்லத் தயங்கும் உண்மைகளை இம்ரான் கான் தெரிவித்திருக்கிறார்.
  •  ரஷியாவிடமிருந்தான இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி அளவு மொத்த எண்ணெய் இறக்குமதியில் இப்போதைக்கு சுமார் ஒரு சதவீதம் மட்டுமே.
  • ஆனால், மாறிவரும் உலகச் சூழலுக்கு ஏற்ப இந்தியாவும் தனது வர்த்தகக் கொள்கையை இந்திய நலனை மையப்படுத்தி வடிவமைக்க முற்பட்டிருக்கிறது.
  • அதன் தொடர்ச்சியாக, வரும் வாரங்களில் சுமார் 15 மில்லியன் (150 லட்சம்) பீப்பாய் கச்சா எண்ணெய்யை ரஷியாவிடமிருந்து இறக்குமதி செய்ய இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.
  •  உக்ரைன் மீதான ரஷிய ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து அந்நாட்டுக்கு எதிராக உலக நாடுகள் பலவும் பொருளாதாரத் தடை விதித்துள்ள சூழலில்தான் இந்த இறக்குமதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடப்பட வேண்டிய செய்தி.
  • அதுமட்டுமல்ல, இதற்காக சலுகை விலையில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்கவும் ரஷியா முன்வந்துள்ளது.
  •  இந்த வாய்ப்பு இந்தியாவின் நடுநிலைக் கொள்கையால் கிடைத்ததாகும். உக்ரைன் மீதான ரஷியாவின் போரை இந்தியா ஆதரிக்கவில்லை என்றபோதிலும், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நேட்டோ நாடுகள் திணித்த ரஷியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா ஏற்கவில்லை.
  • ஐ.நா.சபையில் ரஷியாவுக்கு எதிராக நேட்டோ நாடுகள் கொண்டு வந்த தீர்மானங்களுக்கு ஆதரவோ எதிர்ப்போ தெரிவிக்காமல் நடுநிலை வகித்து, வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.
  • அதேசமயம், உக்ரைனுக்கு ஆதரவாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதினிடம் பேசவும் பிரதமர் மோடி தயங்கவில்லை.
  •  மேலும், உலகின் நான்காவது பொருளாதார சக்தியாக வளர்ந்துவரும் இந்தியாவைப் புறக்கணிக்கவோ எதிர்க்கவோ பிற நாடுகள் தயங்கும் நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது.
  • எனவேதான், "இந்தியா ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது சர்வதேச பொருளாதாரத் தடையை மீறும் செயலல்ல' என்று சமாதானம் கூறி இருக்கிறார், அமெரிக்க அதிபரின் சர்வதேச பொருளாதார விவகாரங்களுக்கான தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் தலீப் சிங்.

முடிவில் தவறில்லை!

  • இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 84 சதவீதம் இறக்குமதி வாயிலாகவே நிறைவு செய்யப்படுகிறது.
  • 2020- 21 நிதியாண்டில் சுமார் 11 பில்லியன் டாலர் மதிப்புள்ள 239 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை பல நாடுகளிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்திருக்கிறது.
  • உலக அளவில் 42 நாடுகளிடமிருந்து கச்சா எண்ணெய்யை வாங்கினாலும், வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள், தென் அமெரிக்க நாடுகளிலிருந்து மட்டும் சுமார் 80 சதவீதம் இறக்குமதி நடைபெறுகிறது.
  • குறிப்பாக, இராக், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகளின் பங்களிப்பு இதில் மிகுதி. இந்தப் பட்டியலில் ரஷியா இதுவரை முக்கிய இடம் வகித்ததில்லை. இந்நிலை தற்போது மாறத் தொடங்கி இருக்கிறது.
  •  இப்போதைக்கு இந்தியாவைப் பகைத்துக் கொள்ள அமெரிக்கா தயாராக இல்லை என்றாலும், ரஷியாவுடனான இந்திய வர்த்தகத்தை அந்நாடு பதற்றத்துடன்தான் பார்க்கிறது.
  • தற்போது உலக வர்த்தகத்தில் பொதுச் செலாவணியாக உள்ள அமெரிக்க டாலருக்கு மாற்றாக பிற நாட்டு நாணயங்கள் உருவாகிவிடக் கூடாது என்பதே அந்நாட்டின் தற்போதைய கவலை.
  •  இதுகுறித்து அண்மையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் பேசிய அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் ஜினா ராய்மேண்டோ, ரஷியாவும் இந்தியாவும் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் டாலரைப் புறக்கணித்து ரூபாய்- ரூபிள் செலாவணி மாற்றத்தைப் பயன்படுத்திவிடக் கூடாது என்று எச்சரித்தார். இது ஒருவகை ஏகாதிபத்தியமே எனில் மிகையல்ல.
  •  ஆனால், இப்போது காலச்சூழல் அமெரிக்காவுக்கு சாதகமாக இல்லை. சென்ற ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலிபான்களிடம் ஆட்சியை ஒப்படைத்துப் பின்வாங்கியபோதே அந்நாடு தனது பலவீனத்தை ஒப்புக் கொண்டது.
  • இப்போது அமெரிக்காவையும் நேட்டோ நாடுகளையும் நம்பி முஷ்டி உயர்த்திய உக்ரைன் நாடு ரஷியத் தாக்குதலில் நிலைகுலைந்து போயிருக்கிறது; வெற்று மிரட்டல்களுடன் அமெரிக்கா வேடிக்கை பார்க்கிறது.
  •  அதுமட்டுமல்ல, ரஷியா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கக் காரணமான அமெரிக்காவே, அந்நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை 43 சதவீதம் அதிகரித்திருக்கிறது.
  • இத்தகவலை, ரஷிய பாதுகாப்பு கவுன்சிலின் துணைச் செயலாளர் மிகயில் போபோவ் அம்பலப்படுத்தி இருக்கிறார்.
  • தினசரி ஒரு லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை ரஷியாவிடமிருந்து இறக்குமதி செய்யும் அமெரிக்கா, பிற நாடுகள் ரஷியாவுடன் வர்த்தகம் செய்யக் கூடாது என்று மிரட்டுவது ஒரு நகைமுரண்.
  •  மாறி வரும் புவி அரசியல் சூழலில், வேகமான மாற்றங்களை உலகப் பொருளாதாரம் சந்தித்து வரும் வேளையில், தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய செயல்முறையே ஒவ்வொரு நாட்டுக்கும் தேவை.
  • அந்த வகையில் நட்பு நாடுகளின் நிர்ப்பந்தத்துக்குப் பலியாகாமல், உணர்ச்சிகளுக்கு இடம் கொடாமல், நடுநிலை பேணுவது இந்தியாவின் பலம் மட்டுமல்ல, நலமும் கூட.

நன்றி: தினமணி (07 – 04 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories