TNPSC Thervupettagam

ருவாண்டா நிலமெங்கும் ரத்தம்

October 8 , 2023 224 days 187 0
  • அது 2004ஆம் வருடமா அல்லது 2005ஆம் வருடமா என்று நினைவில்லை. ‘ஹோட்டல் ருவாண்டா’ என்னும் ஹாலிவுட் திரைப்படத்தை டிவிடியில் பார்க்க நேர்ந்தது. அன்றுதான், 1994இல் ருவாண்டாவில் நிகழ்ந்த இன அழிப்பைப் பற்றிய ரத்தமும் சதையுமான ஒரு பக்கத்தைப் பார்க்க நேர்ந்தது. 1990களில் நடந்து முடிந்த ருவாண்டா மற்றும் போஸ்னியா இன அழிப்புகள் வெறும் செய்திகள், புள்ளி விவரங்கள் எனக் கடந்து சென்றிருப்பதை அப்போதுதான் உணர முடிந்தது.
  • கிட்டத்தட்ட 1 லட்சம் உயிர்களைக் காவுகொண்ட போஸ்னிய கலவரம் பேசப்பட்ட அளவுக்கு, அதைவிட பத்து மடங்கு உயிர்கள் மடிந்த ருவாண்டாவின் பிரச்சினை பேசப்படவில்லை. ஏனெனில், கருப்பு ரத்தத்தின் விலை மலிவு.

படத்தின் பின்னணி

  • ருவாண்டா அதிபர் ஹப்யாரிமனாவும், புருண்டி அதிபரும் கொல்லப்பட்ட ஏப்ரல் 6ஆம் தேதி மாலையில், க்ரைஸிஸ் கமிட்டி என்னும் ஒரு குழு அமைக்கப்பட்டது. ருவாண்டா ராணுவ அதிகாரிகள் மேஜர் ஜெனரல் அகஸ்டின் நடிண்டிலியிமனா (Augustin Ndindiliyimana) மற்றும் கர்னல் தியோனெஸ்டே பகோசோரா (theoneste Bagosora) போன்ற உயர் அதிகாரிகளைக் கொண்ட குழு அது. அதிசயமாக, பல உயர் அதிகாரிகள் இருக்க, ஜூனியரான பகோசோரா இந்தக் குழுவுக்குத் தலைமை வகித்தார்.
  • இதிலிருந்து, ருவாண்டா அரசு ராணுவத்தின் உண்மையான அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்பது புலப்படுகிறது. பகோசோரா, ஹப்யாரிமனாவின் மனைவி மற்றும் தீவிரவாதத் தலைவர்களுடன் மிக நெருக்கமான தொடர்புகொண்டவர். அன்று மாலை, ஐக்கிய நாடுகளின் அமைதிப்படைத் தலைவரான ரோமியோ டலேர், பகோசோராவைச் சந்தித்து, ருவாண்டா அதிபர் மரணமடைந்த நிலையில், அடுத்து இடைக்கால அரசின் பிரதமராக நியமிக்கப்படவிருந்த, மிதவாதத் தலைவர் அகாத்தே விலிங்கியிமனா (Agathe Uwilingiyimana) சட்டப்படி தலைமைப் பொறுப்பில் நியமிக்க வேண்டும் எனக் கோருகிறார்.
  • அகாத்தே மக்களின் நம்பிக்கையைப் பெற்றவர் அல்ல எனச் சொல்லும் பகோசோரா, அவருக்கு ஆளும் தகுதிகள் இல்லை என்றும் கூறி அகாத்தேவுக்குத் தலைமைப் பொறுப்பைத் தர மறுத்துவிடுகிறார்.  அதிபரின் மரணத்தால், கட்டுமீறிச் சென்றிருக்கும் அதிபரின் காவலர்களை அடக்கி அமைதியை நிலைநாட்டுவதே தமது குழுவின் நோக்கம் எனவும், அமைதி திரும்பியவுடன், ஆருஷா ஒப்பந்ததை நிறைவேற்றுவதே தமது நோக்கம் எனவும் கூறுகிறார்.
  • அதை நம்பாத, டலேர், அகாத்தே, ரவாண்டா வானொலியில் மக்களுக்கு உரையாற்ற ஏற்பாடுகள் செய்கிறார். அவரின் பாதுகாப்புக்காக பத்து பெல்ஜிய வீரர்களை அனுப்புகிறார். ஆனால், அதற்குள் ருவாண்டா வானொலி நிலையத்தை அதிபரின் காவல் படையினர் கைப்பற்றிவிட, அகாத்தே உரையாற்ற முடியாமல் போகிறது.
  • அதிபரின் காவல் படை, ஏப்ரல் 7ஆம் தேதி காலை, அகாத்தேயின் வீட்டை முற்றுகையிட்டு, அவருக்குக் காவலிருந்த பெல்ஜிய வீரர்களைச் சரணடைய வைக்கிறது. அதன் பின்னர் அகாத்தேயின் வீட்டுக்குள் பலவந்தமாக நுழைகிறார்கள். தங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பாக ஒளித்துவிட்டு, அவர்களைக் காக்க அகாத்தேயும் அவர் கணவரும் தங்களை வெளிப்படுத்திக்கொள்கிறார்கள்.  அவர்களே அங்கேயே கொல்லப்படுகிறார்கள்.
  • அவர்களுக்குக் காவலாக இருந்த பெல்ஜிய வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டு, அவர்கள் பிறப்புறுப்புகள் அறுக்கப்பட்டு வாயில் திணிக்கப்பட்ட நிலையில் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்படுகிறார்கள்.  பெல்ஜியத்தை, அமைதிப்படையில் இருந்து பின்வாங்கச் செய்யும் உத்தி. அந்த உத்தி வெற்றிபெறுகிறது. அகாத்தேயின் குழந்தைகள் பின்பு பத்திரமாக மீட்கப்பட்டு ஹோட்டல் மில் காலின்ஸில் சேர்க்கப்படுகிறார்கள். (‘ஹோட்டல் ருவாண்டா’ திரைப்படம் இந்த ஹோட்டலைப் பற்றியதுதான்).

வன்முறைக் களம்

  • இந்தச் சமயத்தில், ருவாண்டா தேசபக்த சக்தியின் பால் ககாமே, டலேருக்கு ஓர் இறுதி எச்சரிக்கை அனுப்புகிறார். ஏப்ரல் 7ஆம் தேதி மாலைக்குள் அமைதி திரும்பவில்லை எனில், போரைத் துவக்குவேன் என்று. தேவைப்பட்டால், கட்டுமீறிப்போன அதிபரின் காவல் படைகளை வழிக்குக் கொண்டுவர, ருவாண்டா ராணுவத்துக்குத் துணையாக தமது படைகளை அனுப்புகிறேன் என்று செய்தியும் அனுப்புகிறார். ஆனால், அதைப் பகோசோரா மறுத்துவிடுகிறார்.  சுற்றி வளைத்துப் பார்க்கையில், ருவாண்டா ராணுவமே அதிபரின் காவல் படையின் பின்னணியில் இருந்து இயக்குவது டலேருக்குப் புரிகிறது. ஆனால், ஒன்றும் செய்ய முடியாத நிலை.
  • ஏப்ரல் 7ஆம் தேதி மதியத்துக்குள், ஹப்யாரிமனா இறந்த 24 மணி நேரத்துக்குள் ருவாண்டாவின் மிதவாதத் தலைவர்கள் பெரும்பாலும் கொல்லப்பட்டுவிடுகிறார்கள்.
  • அரசமைப்பு நீதிமன்றத் தலைவர் ஜோஸஃப் கவுருகண்டா (Joseph Kavruruganda), வேளாண்மை அமைச்சர் ஃப்ரடெரிக் சமுரம்பஹோ (Frederic Nzamurambaho), ஆளுங்கட்சியின் மிதவாதத் தலைவர் லாண்ட்வால்ட் ந்டசிங்வா (Landwald Ndasingwa), ஆருஷா ஒப்பந்தப் பேச்சு வார்த்தையாளரும், லாண்ட்வால்டின் கனடிய மனைவியான போனிஃபேஸ் ந்குலின்சிரா (Boniface Ngulunzira).  ஃபாஸ்டின் ட்வகிராமுங்கு (faustin Twagiramungu) என்னும் முக்கிய மிதவாதத் தலைவர் மட்டுமே தப்பிக்கிறார்.
  • நாட்டின் மிதவாதத் தலைமை ஒரே நாளில் அழிக்கபட்டது, தீவிரவாதிகளின் முக்கியத் திட்டம். இதனால், மக்களின் நடுவே ஒரு பீதியை ஏற்படுத்த முடிந்தது. நடுநிலைவாதத் தரப்பில் நின்று பேச எவருமில்லை.
  • ஹப்யாரிமனா கொலை செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே, பல்வேறு பிராந்தியங்களில் இருந்த ராணுவ அதிகாரிகள், மக்களைக் கூட்டி, “அதிபர் ஹப்யாரிமனாவை டூட்ஸிகளின் ராணுவமான ருவாண்டா தேசபக்த சக்தி கொன்றுவிட்டது. எனவே, அனைவரும் கிளம்பி, எதிரிகளை அழிக்கத் துவங்குங்கள்” என அறிவிப்பு வெளியிட்டனர்.  அழிப்பதற்கான பட்டியல்கள் உள்ளூர் தலைவர்களிடம் இருந்தது.
  • அவர்களுக்கு ஆயுதமும், பயிற்சியும் ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்தது. எனவே கற்பழிப்பு, சித்திரவதை, கொலை, கொள்ளை என அனைத்தும் மின்னல் வேகத்தில் துவங்கின.  புட்டாரே என்னும் பிராந்தியத்தில் பாப்டிஸ்ட் ஹப்யாரிமனா என்னும் டூட்ஸி கவர்னர் இருந்ததால், அங்கு, இதுபோன்ற திட்டமிட்ட கொலைகள் நடக்கவில்லை. மே மாதத்தில் அவர் கைதுசெய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். பின் அங்கும், இன அழிப்பு மிகத் தீவிரமாக நடைபெற்றது.

தொடர் கொலைகள்

  • கொலைகள் கிராமங்களில், மிக எளிதாகச் செய்யப்பட்டன. பெரும்பாலான ஹூட்டுக்களுக்கு, கிராமத்தில் யார் யார் டூட்ஸிகள் என்பது தெரிந்திருந்தது. அவர்களின் பட்டியல் ஏற்கெனவே இருந்ததால், கொலை செய்வது எளிதாக இருந்தது. கிகாலி போன்ற நகர்ப்புறங்களில், டூட்ஸிகளை அடையாளம் காண்பது கொஞ்சம் சிரமமாக இருந்தது. எனவே, சாலைகளில், அரண்கள் அமைக்கப்பட்டிருந்தன.
  • அதைத் தாண்டிச் செல்லும் மக்கள் தங்கள் அடையாள அட்டைகளைக் காண்பிக்க வேண்டியிருந்தது. டூட்ஸிகள் உடனே கொல்லப்பட்டனர்.  அது மட்டுமில்லாமல், அடையாள அட்டைகள் இல்லாதவர்கள், டூட்ஸிகள் போலத் தோற்றம் இருப்பதாக நம்பப்பட்டவர்கள், பத்திரிகையாளர்கள் என, அந்த அரணில் நிற்கும் தீவிரவாதிக்கோ / ராணுவ வீரருக்கோ சந்தேகம் வந்தால், அவர்களும் கொல்லப்பட்டனர்.
  • கொலைகள் நிகழ்த்தப்பட்ட விதம் ரத்தத்தை உறைய வைத்தவிடும். பெண்கள் பெரும்பாலும் கற்பழித்துக் கொல்லப்பட்டனர். அவர்கள் உறுப்புகள் சிதைக்கப்பட்டன. கர்ப்பிணிகளின் வயிற்றில் இருக்கும் குழந்தைகள், கிழித்து எடுக்கப்பட்டுக் கொல்லப்பட்டன. சிறு குழந்தைகள் வானில் எறியப்பட்டு, கீழே விழுந்ததும், சிதைக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.  சிறைகளிலும், மருத்துவமனைகளிலும் இருந்து விடுவிக்கப்பட்ட எய்ட்ஸ் நோயாளிகள், டூட்ஸிப் பெண்களைக் கற்பழிக்குமாறு பணிக்கப்பட்டனர். இவ்வாறு எய்ட்ஸ் தொற்றிய பெண்கள் இன்று பல ஆயிரம் இருக்கின்றனர்.
  • பெரும்பாலும் பெண்கள் அவர்கள் குடும்பத்தின் கண் முன்னே கற்பழிக்கப்பட்டனர்.  கொலைகளைச் செய்ய ஹூட்டு இன மக்கள் யாரும் தயங்கினால், அவர்களும் கொல்லப்பட்டனர். ஆண்கள் பலத்த சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, கை கால்கள் வெட்டப்பட்டு, மெல்லச் சாகும்படி விடப்பட்டனர். ஆண்களின் பிறப்புறுப்புக்கள் வெட்டப்பட்டு, அவை வெற்றிக் கோப்பைகள் போல ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்பட்டன.
  • இந்தப் பயங்கரங்களைக் கண்ட ஐநா அமைதிப்படையில் பெரும்பான்மையான வீரர்கள் மனநலம் பாதிக்கப்பட்டனர்; தீவிர மனநல சிகிச்சைக்குப் பின்னரே சாதாரண மனநிலைக்குத் திரும்ப முடிந்தது. அதில் ஐநா அமைதிப்படை தளபதி டலேரும் ஒருவர். இதைக் கண்காணித்த குழுவுக்கே இந்நிலை எனில், பாதிக்கப்பட்ட மக்களின் நிலையைக் கேட்கவே வேண்டாம்.
  • இந்தப் படுகொலை துவங்கிய முதல் ஆறு வாரங்களில் கிட்டத்தட்ட 8 லட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள். இது நாஜிக்கள் யூதர்களைக் கொன்று குவித்ததைவிட ஆறு மடங்கு அதிக வேகம். ஏன் இந்த வேகம்?  ஹூட்டு அடிப்படைவாத ருவாண்டா அரசுப் படைகள் (Rawanda Government Forces - RGF), பால் ககாமேயின் ருவாண்டா தேசபக்த சக்தியை (Rwanda Patriotic Forces - RPF) அஞ்சின என்பது ஒரு காரணம்.
  • முழுமையான போர்க்களத்தில் ககாமேயின் படைகளை எதிர்த்து வெல்லும் என்னும் நம்பிக்கை ருவாண்டா அரசுப் படைகள் தளபதிகளுக்கு இல்லை. எனவே, ககாமே கைப்பற்றும் முன், முடிந்த வரை டூட்ஸிகளைக் கொல்வோம் என்பது ருவாண்டா ராணுவத்தின் நிலையாக இருந்தது.  ருவாண்டா அரசுப் படைகளின் இந்த போர்த் தந்திரத்தை, பால் ககாமே தமக்கு மிகச் சாதகமாக பயன்படுத்திக்கொண்டார். ருவாண்டா அரசுப் படைகள் டூட்ஸிகளைக் கொல்வதில் மும்முரமாக இருக்க, பால் ககாமே, ரவாண்டாவைக் கைப்பற்றுவதில் மும்முரமாக இருந்தார்.

ஆப்பரேஸன் டர்க்யோஸ்

  • ஒரு கட்டத்தில், ருவாண்டா அரசுப் படைகள், பால் ககாமே தன் முயற்சியில் பின்வாங்கவில்லை எனில், மில் காலின்ஸ் (ஹோட்டல் ருவாண்டா)வில் இருக்கும் டூட்ஸிகளை அடியோடு அழித்துவிடுவதாக மிரட்டல் விடுகிறது.  இதை டலேர், ககாமேயிடம் சொல்கிறார். ககாமே, இந்த மிரட்டலை, புறங்கையால் தள்ளிவிடுகிறார். “இது ஒரு பழைய தந்திரம். அவர்களால், முடிந்தால் செய்யட்டும்” என அலட்சியமாகப் பதில் அளிக்கிறார். இதை டலேர் தமது சரிதையில் பதிவுசெய்திருக்கிறார்.
  • வெற்றி ஒன்றே இலக்கெனப் பாயும் ஒரு போர்த் தளபதியின் பதில் இது. மிகக் கடின சித்தம் இருந்தால் ஒழிய இதுபோன்ற முடிவுகளை எடுப்பது கடினம். (இறுதி வரை, மில் காலின்ஸ் விடுதியில் இருந்த டூட்ஸிகளுக்கு ஒன்றும் ஆகவில்லை என்பது, பால் ககாமேயின் உளவியல் போர் வெற்றியைக் குறிக்கிறது).
  • பால் ககாமேயின் மூர்க்கம் பற்றிய இன்னும் ஒரு சம்பவமும் இருக்கிறது. அவரின் கெரில்லா யுத்தம் பலத்த சேதத்தை ஏற்படுத்த, வேறு வழியின்றி, அதிபர் ஹப்யாரிமனா, பேச்சு வார்த்தைக்கு ஒப்புக்கொண்டு, ஆருஷா பேச்சு வார்த்தைக்கு வருகிறார். பேச்சு வார்த்தைகளில், இடைக்கால அரசு ஒப்புக்கொள்ளப்படும்போது, ஹூட்டு அடிப்படைவாதிகள் மற்றும் ஹப்யாரிமனா சார்ந்த சக்திகள், தங்கள் மீது, போர்க் குற்றங்கள் எதுவும் சுமத்தப்படக் கூடாது என்றும் முடிந்தால் அமைதியாக வெளியேறும் வாய்ப்பு வேண்டும் என்றும் கேட்கிறார்கள்.
  • பேச்சு வார்த்தை மேசையில், பலமான இடத்தில் அமர்ந்திருந்த ககாமேயின் குழு இதை மூர்க்கமாக மறுக்கிறது. குற்றங்களைப் புரிந்தவர்கள், நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டு, தண்டிக்கப்படுவார்கள் என்னும் தம் ஷரத்து ஆருஷா ஒப்பந்தத்தில் இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறார் ககாமே.
  • ஜூலை 4ஆம் தேதி, கிகாலியைக் கைப்பற்றிய ருவாண்டா தேசபக்த சக்தி, ஜூலை இறுதியில், ருவாண்டா நாட்டின் பெரும் பகுதிகளைத் தன் அதிகாரத்தின் கீழ்க் கொண்டுவருகிறது.  இந்த வெற்றியின் முக்கிய காரணம் பால் ககாமே என்னும் தலைவரின் உளவியல் போர் தந்திரங்கள்தான் என்கிறார் டலேர். தோல்வி நிச்சயம் என்ற நிலை வந்தபோது, ருவாண்டா ராணுவம் மற்றும் ஆட்சியரின் நண்பரான, ஃப்ரான்ஸ், ‘ஆப்பரேஸன் டர்க்யோஸ்’ (operation turquoise) என்னும் பெயரில், அமைதியை நிலைநாட்டும் சாக்கில், உள்ளே நுழைகிறது.
  • நாட்டின் தென்மேற்கே, தப்பி ஓடும் ருவாண்டா அரசுப் படைகளுக்குப் பாதுகாப்பாக மூக்கை நுழைக்கிறது. (ருவாண்டா அரசுப் படைகளின் தளவாடங்கள் பெரும்பாலும் ஃப்ரான்ஸிடம் இருந்து பெறப்பட்டதால், படைத் தளபதிகளுக்கும், ஹப்யாரிமனாவின் குடும்பத்துக்கும், ஃப்ரான்ஸ் ராணுவத்துக்கும் நல்லுறவு இருந்தது).

வெளியுலகுக்குத் தெரியாதவை

  • ககாமேயின் படைகளுக்கும் ருவாண்டா அரசுப் படைகளுக்கும் இடையில், ஃப்ரான்ஸ் படைகள், ஒரு அரண் அமைக்கின்றன. இத்தோடு, நாட்டின் பெரும் போர் முடிவுக்கு வந்து, அடுத்த நடவடிக்கைகள் துவங்குகின்றன.  முதலில் ருவாண்டாவின் அதிபராக பிஸிமுங்கு ஆகிறார். பால் ககாமே துணைத் தலைவராகப் பதவியேற்கிறார். உண்மையான அதிகாரம் ககாமேயிடம்தான்.  2000ஆம் ஆண்டில், பிஸிமுங்கு பதவி விலக, ககாமே தலைவராகிறார். இதேசமயத்தில், பனிப்போர் முடிந்துவிட, அமெரிக்கா, ஆப்பிரிக்காவின் புதிய தலைமுறைத் தலைவர்கள் எனப் பால் காகாமேயை ஆதரிக்கத் தொடங்குகிறது.
  • ருவாண்டா, தீவிர காவல் / ராணுவக் கண்காணிப்பில், மீண்டெழுகிறது. ககாமே, ஹூட்டு / டூட்ஸி என்னும் பேதங்களுக்குத் தடை விதித்து, அனைவரும் ருவாண்டர்கள் என அறிவித்து நாட்டை ஆளத் தொடங்குகிறார்.  இன்று கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில், மிக நிலையான முன்னேற்றம் கொண்ட பொருளாதாரம், மிகக் குறைவான ஊழல், சுத்தமான நாடு எது எனில் ருவாண்டாதான். இந்நிலைக்கு மிக முக்கிய காரணம் பால் ககாமேயின் நிர்வாகம் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள்.
  • அரசின் இணையதளம், ககாமேயின் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்ததாகப் பல சாதனைகளை, முன்வைக்கிறது. சராசரி ஆயுள்காலம் 2000இல், 51 ஆண்டுகளாக இருந்தது, 2012இல் 65ஆக உயர்ந்திருக்கிறது. 96% குழந்தைகள் பள்ளியில் படிக்கின்றன. நாடாளுமன்றத்தில் 65% பெண்கள்.   ப்ளாஸ்டிக் பைகள் தயாரித்தலும், இறக்குமதியும் தடைசெய்யப்பட்டிருக்கின்றன.  75% மக்களுக்கு மருத்துவக் காப்பீடு உள்ளது. இது பல முன்னேறிய நாடுகளை எட்டும் புள்ளி விவரங்கள்.

இங்கு ஜனநாயகம் எவ்வாறு உள்ளது

  • சமீபகாலத்திய வாக்கெடுப்பையே நோக்குவோம். 98% மக்கள் ககாமே 2034 வரை, தேர்தலில் போட்டியிட ஆதரவாக வாக்களித்துள்ளார்கள். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தை நடத்தி, சுதந்திரம் வாங்கிய காங்கிரஸ் கட்சி ஒருமுறைகூட 60% வாக்கை எட்டியதில்லை. 98% ஆதரவு என்பதே இங்குள்ள சுதந்திரமின்மையைக் குறிக்கிறது எனச் சொல்லலாம்.
  • மாலை மயங்கியவுடன், நாட்டைச் சூழ்ந்து நிற்கும் போலீஸ் என்பது மக்களின் அடிமனதில் ஒரு பீதியை உருவாக்கக்கூடிய விஷயம். அவரை எதிர்த்துப் போட்டியிட முயன்ற தலைவர்கள் சிலர் சிறைப்படவும், சிலர் சில சதவீத ஓட்டுக்களே பெற்றதும், இங்கு முழுமையான ஜனநாயகம் இல்லை என்னும் உண்மையைச் சொல்கின்றன. ஆனால், பொருளாதார முன்னேற்றம், நிலையான ஆட்சி, சரியான சட்ட ஒழுங்கு என்னும் நேர்மறை நிகழ்வுகள் அதை வெளியுலகுக்கு அதிகம் தெரியாமல் மறைத்து நிற்கின்றன.

நன்றி: அருஞ்சொல் (08 - 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories