TNPSC Thervupettagam

வரிவிதிப்பும் மாநில வேறுபாடும்

July 3 , 2021 1030 days 1121 0
  • இந்தியாவில் வருமான வரியும், கார்பரேட் வரியும் நேரடி வரிகளாக வகைப்படுத்தப் பட்டிருக்கின்றன.
  • அமெரிக்காவில் மத்திய, மாகாண அரசுகள் தனிநபர்களிடம் இருந்தும், பெரு நிறுவனங்களிடம் இருந்தும் இந்த வரிகளை வசூலிக்கின்றன.
  • இதே நிலைதான் ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது. ஆனால், இந்தியாவில் நேரடி வரிகள் அனைத்தும் மத்திய அரசுக்கே செல்கின்றன.
  • மத்திய அரசு அதன் மொத்த வரி வருவாயில், 41%-ஐ மாநில அரசுகளுக்குப் பகிர்ந்தளிக்கிறது.
  • ஜம்மு - காஷ்மீர் தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்படுவதற்கு முன்னர் இது 42% ஆக இருந்தது. ஆனால், அமெரிக்காவில் 15% வரி வருவாயை மாகாணங்களுக்கு கூட்டாட்சி அரசு விநியோகிக்கிறது.
  • இந்தியாவில், நிதிக்குழு பரிந்துரையின் பேரில், மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுகள் நிதியைப் பெறுகின்றன.
  • இதுதான் அடிப்படை என்றாலும், அரசியல் குறுக்கீடு காரணமாக சில மாநிலங்களுக்கு சொற்ப வரிவீதமும், சில மாநிலங்களுக்கு கூடுதல் வரி வருவாயும் அளிக்கப்படுவதும் உண்டு.
  • பொதுவாக, மத்திய அரசு அதன் இலக்கான 41% வரியை மாநிலங்களுக்கு முறையாகப் பகிர்ந்தளிப்பதே கிடையாது.
  • மேலும், பல்வேறு பொருள்களின் மீதான செஸ் வரி காரணமாக மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ. 3.5 லட்சம் கோடி வரிவருவாய் கிடைக்கிறது. இதை மாநில அரசுகளிடம் மத்திய அரசு பகிர்ந்து கொள்வது கிடையாது.
  • இதனால் பல மாநிலங்கள் நீதிமன்றத்தை நாடுவதும், மத்திய அரசிடம் மோதல் போக்கை கடைப்பிடிப்பதும் வாடிக்கையாகி விட்டன.

காலத்தின் கட்டாயம்

  • மாநில அரசுகள், மது விற்பனை, சொத்துவரி, சாலைவரி, வாகனங்கள் மீதான வரி ஆகியவற்றின் மூலம் மட்டுமே நிதி திரட்டுகின்றன.
  • அகில இந்திய அளவில், மாநில அரசுகள் தங்களின் வருவாயில் 26%-ஐ மட்டுமே மத்திய அரசிடம் இருந்து பெறுகின்றன.
  • வளர்ச்சியில் பின்தங்கிய ஒரு சில மாநிலங்கள் மட்டும் தங்கள் வருவாயில், 50%-ஐ மத்திய அரசிடம் இருந்து பெற்று, எந்த வளர்ச்சி திட்டத்தை முன்னெடுப்பதாக இருந்தாலும் மத்திய அரசையே சார்ந்திருக்கும் நிலையில் இருக்கின்றன.
  • இது மத்திய அரசுக்கு கூடுதல் பொருளாதார சக்தியை அளிப்பதோடு, பின்தங்கிய மாநிலங்களின் மீது அரசியல் ரீதியிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பாக அமைகிறது.
  • இன்னொரு பிரச்னை மாநில ஏற்றத்தாழ்வு. மத்திய அரசுக்கு அதிகப்படியான வரிவருவாயை ஈட்டித்தரும் மாநிலங்களாக மகாராஷ்டிரம், தில்லி, கர்நாடகம் ஆகியவை இருக்கின்றன.
  • தமிழகம், குஜராத் போன்ற மாநிலங்களுடன் சேர்த்துக் கணக்கிட்டால், மேற்கண்ட ஐந்து மாநிலங்களும் மத்திய அரசுக்கு 72% வரி வருவாய் அளிக்கின்றன.
  • நம் நாட்டில் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தர பிரதேசம் (2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 19.98 கோடி) வெறும் 3.12% வரியை மட்டுமே அளித்து, 17%-க்கும் மேற்பட்ட வரி வருவாயை மத்திய அரசிடம் இருந்து பெறுகிறது.
  • மக்கள்தொகை பெருக்கத்தையும், வறுமையையும் அளவீடாகக் கொண்டு வரிவருவாய் விநியோகம் செய்யப்படுவதே இதற்குக் காரணம்.
  • இன்னொரு புறம், வட மாநிலங்களில் அதிகப்படியான மக்களவைத் தொகுதிகள் இருப்பதால், அரசியல் அதிகாரம் அனைத்தும் அங்கேயே குவிகின்றன.
  • ஒவ்வொரு மாநிலத்திலும் மக்கள்தொகை உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில், வரும் 2026-ஆம் ஆண்டில் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட வாய்ப்பிருப்பதால், தென்மாநிலங்கள் மேலும் புறக்கணிக்கப்படாது என்று கூறவும் இயலாது.
  • மத்திய அரசுக்கு மாநில அரசுகள் அளிக்கும் ஒவ்வொரு 100 ரூபாயிலும் தென்னிந்திய மாநிலங்கள் 51% மட்டுமே பெறுகின்றன. ஆனால், பிகார் போன்ற மாநிலங்கள் 200 சதவீதத்தைப் பெற்றுக் கொள்கின்றன.
  • எனவே, மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே நிகழும் உரசல்களுக்குத் தீர்வு காணப்பட வேண்டியது அவசியம்.
  • கட்சிகளின் அரசியல் நிலைப்பாடு காரணமாக அனைத்து மாநிலங்களுக்கும் நியாயமான வீதத்தில் வரியைப் பகிர்ந்தளிப்பது என்பது இயலாததாகி விட்டது.
  • ஆனால், மாநிலங்களுக்குக் கூடுதல் பொருளாதார அதிகாரம் அளித்து, அவை நேரடியாக வரியை வசூலிக்கவும், மத்திய அரசை அதிக அளவில் சார்ந்திருக்க தேவையில்லாமலும் செய்யலாம். இதன் மூலம் மத்திய - மாநில உறவுகள் வலுப்பெறும்.
  • ஏனெனில், யுகோஸ்லாவியா, இலங்கை, பாகிஸ்தானின் கிழக்கு மற்றும் மேற்கு மாகாணங்களில், பிராந்திய ஏற்றத்தாழ்வுகள் வன்முறைக்கு வித்திட்டிருக்கின்றன. நம் நாட்டில் அதிர்ஷ்டவசமாக அதுபோன்ற சூழல் எழவில்லை.
  • நாடு சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் தேச ஒற்றுமையைக் காப்பது அன்றைய தலைவர்களுக்கு சவாலாக இருந்தது. காரணம், திருவிதாங்கூர், ஹைதராபாத், ஜோத்பூர், போபால், ஜுனாகத் ஆட்சியாளர்கள் தங்கள் பகுதி தனி தேசமாக நீடிக்க வேண்டும் என்றே விரும்பினர்.
  • மேலும், காஷ்மீரை எப்படியாவது பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்ற முடிவுடன் பாகிஸ்தான் ராணுவம், கடந்த 1947-ஆம் ஆண்டு அக்டோபர் 22-ஆம் தேதி காஷ்மீருக்குள் படையெடுத்தது.
  • இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை நிகழ்ந்த இரண்டே மாதத்தில் இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் மேற்கொண்டது. கோவா, போர்த்துகீசியர்களிடம் இருந்து 1961-இல் விடுதலை பெற்று நம் நாட்டுடன் இணைந்தது.
  • இவ்வாறு அரும்பாடுபட்டு பெற்ற சுதந்திரத்தைப் பேணி காப்பது நம் கடமை. இன்றைக்கு எல்லையில் சீனா, இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது.
  • ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கத் துருப்புகள் வெளியேறி விட்டன. நமது பிராந்திய வேறுபாடுகளால்தான் மேற்காசியா மற்றும் பிரிட்டிஷ்காரர்களால் நம் நாட்டில் தடம்பதிக்க முடிந்தது என்பதை வரலாறு உணர்த்துகிறது.
  • எனவே, வரிவிதிப்பில் நிலவும் மாநில வேற்றுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது காலத்தின் கட்டாயம்.

நன்றி: தினமணி  (03 - 07 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories