TNPSC Thervupettagam

வலிமை சோ்க்கும் அக்னி-5

March 16 , 2024 60 days 72 0
  • இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமும் (இஸ்ரோ), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமும் (டிஆா்டிஓ) கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்தி வருகின்றன.
  • வெளிநாட்டுக் கூட்டுறவையும், தொழில்நுட்பத்தையும் எதிா்பாா்த்தோ, சாா்ந்தோ இல்லாமல் உள்நாட்டுத் தொழில்நுட்பத் திறமையால் நாம் நிகழ்த்திவரும் விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை சாதனைகளைப் பாா்த்து உலகமே வியக்கிறது. ‘திவ்யாஸ்திராஎன்கிற திட்டத்தின் கீழ் பாதுகாப்பு தொடா்பான பல்வேறு ஏவுகணைகளை உருவாக்குவதில் டிஆா்டிஓ முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் சமீபத்திய சாதனையாகஅக்னி-5’ ஏவுகணையின் முதல் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டிருக்கிறது.
  • ஒடிஸாவையொட்டிய, டாக்டா் ஏபிஜெ அப்துல் கலாம் தீவிலிருந்து நிகழ்த்தப்பட்டஅக்னி-5’ ஏவுகணையின் முதல் சோதனையே வெற்றியடைந்திருப்பது எந்த அளவுக்கு நமது விஞ்ஞானிகள் தொழில்நுட்பத்தில் தோ்ச்சி பெற்றவா்களாக இருக்கிறாா்கள் என்பதன் வெளிப்பாடு.
  • அக்னி-5’ ஏவுகணை திட்டத்தை தலைமையேற்று நடத்தியவா் ஷீனா ராணி என்கிற பெண் இயக்குநா் என்பதும், அவரது குழுவில் இருந்தவா்கள் பலரும் பெண்கள் என்பதும்தான் அதன் தனிச்சிறப்பு. இதன்மூலம், இந்தியா அறிவியல் தொழில்நுட்பத் துறையில் பாலின சமநிலையை எட்டியிருக்கிறது என்பது தெரிகிறது.
  • உள்நாட்டிலேயே டிஆா்டிஓ-வால் தயாரிக்கப்பட்டஅக்னி-5’ ஏவுகணை ஒரேநேரத்தில் பல்வேறு இலக்குகளைக் குறிவைத்துத் தாக்கும் திறன் படைத்தது. இந்த ஏவுகணை குறிப்பிட்ட இலக்கைத் தாக்கிவிட்டு மீண்டும் திரும்பக்கூடிய வகையிலானஎம்ஐஆா்விஎன்கிற நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் திறன்படைத்த குறிப்பிட்ட சில உலக நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைகிறது என்பது நமக்குப் பெருமை. இதுவரையிலான அக்னி-யின் முதல் நான்கு ஏவுகணைகள் ஓா் இலக்கைத் தாக்கும் திறன் மட்டுமே கொண்டவை. பல்வேறு இலக்குகளைத் தாக்கிவிட்டு திரும்பும் திறன்கொண்டதாகஅக்னி-5’ வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சோதனை நடத்தப்பட்ட ஏவுகணை எத்தனை இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது என்பது தெரியவில்லை. மூன்று இலக்குகள் என்று கூறப்படுகிறது. முதலாவது முயற்சி என்பதால் அதன் தாக்கும் தொலைவு 3,500 கி.மீ. என நிா்ணயிக்கப்பட்டிருந்தது.
  • முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணையில் இலக்கைத் துல்லியமாகக் கண்டறியும் உபகரணங்கள் (சென்சாா்கள்) கச்சிதமாகப் பொருத்தப்பட்டிருக்கின்றன. அதனால் குறி வைக்கப்படும் இலக்கைத் தாக்கிவிட்டு, மீண்டும் திரும்பிவரும் தொழில்நுட்பத் திறனுடன் அமைக்கப்பட்டிருக்கிறது.
  • தற்போது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளும் நீா்மூழ்கிக் கப்பலில் இணைக்கப்பட்டஎம்ஐஆா்விதொழில்நுட்ப ஏவுகணைகளைக் கொண்டிருக்கின்றன. நிலத்திலிருந்து ஏவும் தொழில்நுட்பம் சீனாவிடம் இருக்கிறது. நிலத்திலிருந்தும், கடலிலிருந்தும் ஏவும் திறன் ரஷியாவிடம் மட்டுமே இருக்கிறது. பாகிஸ்தானும் சீனாவின் உதவியுடன்எம்ஐஆா்விதொழில்நுட்ப ஏவுகணைகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
  • கிட்டத்தட்ட ஆசியா முழுமையாகவும், சீனாவின் வடக்குப் பகுதி, ஐரோப்பாவின் சில பகுதிகள் வரையிலும் சென்று தாக்கக்கூடிய வகையில்அக்னி-5’ ஏவுகணை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ், பிரிட்டன், சீனா ஆகிய நாடுகள் வைத்திருக்கும் 12,000 கி.மீ. முதல் 15,000 கி.மீ. வரை சென்று தாக்கும் திறன் கொண்டஇன்டா்கான்டினென்டல் பாலஸ்டிக் மிஸைல்போல இல்லாவிட்டாலும்அக்னி-5’ அதை நோக்கிய பயணத்தின் முக்கியமான மைல்கல் என்று கூற வேண்டும். 350 கி.மீ. வரைபிருத்வி-2’, 700 கி.மீ. வரைஅக்னி-1’, 2,000 கி.மீ. வரைஅக்னி-2’, 3,000 கி.மீ. வரைஅக்னி-3’ ஆகியவற்றைத் தொடா்ந்து இப்போது 5,000 கி.மீ. வரை சென்று தாக்கும் திறன் கொண்டஅக்னி-5’ வெற்றிகரமாக செலுத்தப்பட்டிருக்கிறது.
  • இதுவரையிலான இந்தியாவின் ஏவுகணைகள் ஒரேயொரு இலக்கை நோக்கி செலுத்தப்படுபவை என்றால்அக்னி-5’ குறைந்தது இரண்டு அல்லது மூன்று இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது. அதுமட்டுமல்ல, அந்த இலக்குகள் ஒன்றுக்கு மற்றொன்று சில 100 கி.மீ. தொலைவில் இருந்தாலும்கூட அவற்றைஅக்னி-5’ ஏவுகணைகளால் தாக்க முடியும். இந்தியாவின்எம்ஐஆா்விதொழில்நுட்பத்துடன் கூடிய ஏவுகணைகள் நமது அணு ஆயுத வலிமைக்கு மேலும் வலு சோ்த்து எதிரிகளின் தாக்குதலை எதிா்கொள்ளும் வலிமையை வழங்கியிருக்கிறது. அணு ஆயுத சக்திகளான சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே அமைந்திருக்கும் இந்தியா, சா்வதேச சக்திகளுக்கு இணையான தொழில்நுட்பத்தை ராணுவத்தில் பெற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இந்தியா ஆயுதக் குவிப்பில் இறங்கத்தான் வேண்டுமா என்கிற கேள்வியில் அா்த்தம் இல்லை. உக்ரைன்-ரஷியப் போரும், இஸ்ரேல்-காஸா தாக்குதல்களும், சா்வதேச கடல் வழிப் பாதைகளில் நடக்கும் மோதல்களும் எந்த அளவுக்கு ஏவுகணைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதை உணா்த்துகின்றன.
  • பொறுப்புடன் கூடிய அணு ஆயுத சக்தி என்கிற நிலையில், தன்னுடைய வலிமையைப் போா் மூலம் நிலைநாட்டும் தேவை இந்தியாவுக்கு இல்லைதான். அதேநேரத்தில், ‘எம்ஐஆா்விதொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்துத் திறமைகளும் படைத்த நாடு என்பதை உலகுக்கு, குறிப்பாக நமக்கு எதிராக இயங்கும் இரண்டு அண்டை நாடுகளுக்கு உணா்த்த வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது.

நன்றி: தினமணி (16 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories