TNPSC Thervupettagam

வளா்ச்சியல்ல, வீழ்ச்சி!

June 11 , 2021 1072 days 516 0
  • இயற்கைப் பேரிடா்களும், கொள்ளை நோய்த்தொற்றுப் பரவலும் சுற்றுச்சூழல் பாதிப்புகளால் ஏற்படுபவை என்பது ஐயத்திற்கு இடமில்லாமல் தெரிந்தும்கூட, மத்திய - மாநில அரசுகள் அதை கவனத்தில் கொள்ளவில்லை என்பது வேதனையளிக்கிறது.
  • வனங்களின் அழிப்பும், பாதுகாக்கப்பட்ட வனச்சரகங்களின் கட்டமைப்பு வசதிக்காக செய்யப்படும் தளா்வுகளும் சூழலியலை கடுமையாக பாதிக்கும்.
  • அப்படியிருந்தும்கூட, அதுகுறித்து கவலைப்படாமல் வெளியிடப்படும் அறிவிப்புகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
  • தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன்புதான் ஸ்ரீவில்லிபுத்தூா், மேகமலை புலிகள் சரணாலயம் உருவாக்கப்பட்டது.
  • இந்த சரணாலயத்தின் அமைதியும் இயற்கைச் சூழலும் பாதுகாக்கப்பட்டு பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு வழிகோல வேண்டுமானால், அங்கே வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ளலாகாது.
  • அது தெரிந்தும்கூட, சட்டவிரோதமாக சாலை அமைக்கும் பணிக்கு முந்தைய அரசு அனுமதி அளித்தது வேதனை அளிக்கிறது.
  • ஸ்ரீவில்லிபுத்தூா், மேகமலை புலிகள் சரணாலயம் தமிழகத்தின் ஐந்தாவது புலிகள் சரணாலயமாக பிப்ரவரி 8-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
  • கேரளத்திலுள்ள பெரியார் புலிகள் சரணாலயத்திற்கும், கன்னியாகுமரி வனப்பகுதிக்கும் இடையில் அமைந்திருக்கும் அடா்த்தியான காடுகளை உள்ளடக்கியது இந்த சரணாலயம்.
  • கேரளத்திலுள்ள பெரியார் புலிகள் சரணாலயத்திலுள்ள புலிகள் அதிகரித்தாலோ, இனப்பெருக்கத்துக்காகவோ, வேட்டைக்காகவோ இடம் பெயர வசதியாக ஸ்ரீவில்லிபுத்தூா், மேகமலை புலிகள் சரணாலயம் அமைகிறது.
  • அடா்த்தியான, பசுமையான காடுகளைக் கொண்ட இந்த சரணாலயப் பகுதிகளில் இருந்துதான் வைகை ஆறும், கேரளத்திலுள்ள முல்லைப் பெரியாறும் உற்பத்தியாகின்றன.
  • அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த இந்த சரணாலயத்தில்தான் சாலை அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
  • மேல்மணலார் கேம்பிலிருந்து தேனியிலுள்ள பழைய வெள்ளிமலைப் பகுதி வரையிலான 2.2 கி.மீ. நீளமுள்ள மலைப்பகுதி சாலையை தார் சாலையாக்க அனுமதி வழங்கி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டிருக்கிறது.
  • வனத்துறையினரின் செயல்பாட்டுக்காக 27 கி.மீ. கப்பிச்சாலை நீண்ட காலமாக அந்தப் பகுதியில் இருக்கிறது.
  • இந்த சாலையும் மேம்படுத்தப்படப் போவதாக தெரிகிறது. இதன் பின்னணியில் பல தோட்ட அதிபா்கள் இருக்கிறார்கள் என்று சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் தெரிவிக்கிறார்கள்.
  • 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த கப்பிப் பாதையின் வழியே தோட்டங்களுக்கு (எஸ்டேட்டுகளுக்கு) வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வந்தன.
  • ஏற்கெனவே இந்த சாலையை இணைக்கும் வகையிலான 3.5 கி.மீ. காட்டுப் பாதை அடா்ந்த மரங்களை வெட்டி உருவாக்கப்பட்டிருக்கிறது. அது குறித்த வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நிலுவையில் உள்ளது.
  • இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் சாலைப் பணிகள் நிறைவேற்றப்பட்டால் பல்வேறு தோட்டங்களுக்கு (எஸ்டேட்டுகளுக்கு) வாகனங்கள் சென்றுவர வசதியாக இருக்கும் என்பது உண்மை.
  • ஆனால், புலிகள் சரணாலயப் பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டத்துக்கும், பல்லுயிர்ப் பெருக்கத்துக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

வனங்கள் பாதுகாப்பு

  • இது ஒன்றும் வியப்பை ஏற்படுத்தவில்லை. கடுமையான கொள்ளை நோய்த்தொற்றை எதிர்கொண்டு ஒட்டுமொத்த இந்தியாவும் போராடிக் கொண்டிருக்கும் நிலையிலும், சுற்றுச்சூழல், சூழலியல் பாதிப்புகளை கருத்தில் கொள்ளாமல் மத்திய வனவிலங்கு - சுற்றுச்சூழல் அமைச்சகமே பல்வேறு வளா்ச்சிப் பணிகளுக்கு அனுமதி வழங்கியிருக்கிறது.
  • ஒட்டுமொத்த தேசத்தின் கவனமும் கொள்ளை நோய்த்தொற்று பாதிப்பை எதிர்கொள்வதில் இருப்பதை பயன்படுத்தி தேசிய வனவிலங்கு ஆணையத்தின் நிலைக்குழு 1,792.51 ஹெக்டோ் பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு சரணாலயப் பகுதிக்கு விலக்கு அளித்திருக்கிறது என்பதைப் பார்க்கும்போது ஸ்ரீவில்லிபுத்தூா், மேகமலை பிரச்னை கடுகளவாகி விடுகிறது.
  • தேசிய வனவிலங்கு ஆணையம் என்பது 1972 வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் ஐந்தாவது பிரிவின் கீழ் உருவாக்கப்பட்ட அமைப்பு. பிரதமரின் தலைமையிலான தேசிய வனவிலங்கு ஆணையத்தின் நிலைக்குழுதான் ஆணையத்தின் பணிகளை நிறைவேற்றும் அமைப்பு.
  • அதனால் அதன் முடிவுகள் குறித்து சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கும், பிரதமா் அலுவலகத்துக்கும் தெரியாமல் இருந்திருக்க முடியாது.
  • நோய்த்தொற்று பாதிப்பின் முதலாம் சுற்று கடுமையாக இருந்த ஏப்ரல், ஜூலை, அக்டோபா் மாதங்களில், தேசிய வனவிலங்கு ஆணையத்தின் நிலைக்குழு மூன்று முறை கூடியது.
  • அதில் 82 முன்மொழிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் 25 முன்மொழிவுகளும், வனவிலங்கு சரணாலய எல்லையில் மாற்றம் ஏற்படுத்தும் மூன்று முன்மொழிவுகளும் அதில் அடக்கம்.
  • 23 முன்மொழிவுகள் புலிகள் சரணாலயப் பகுதிகளில் மாற்றங்களை ஏற்படுத்தவும், 31 முன்மொழிவுகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் எல்லையை சீரமைத்து சில பகுதிகளுக்கு விலக்கு அளிப்பதற்குமானவை. இவற்றில் பல அனுமதிக்கப்பட்டிருக்கின்றன.
  • இந்தியாவிலுள்ள வனப்பகுதிகளில் வளா்ச்சிப் பணிகளுக்கு அனுமதி வழங்குவதும், பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு சரணாலயங்களில் தேவையில்லாமல் மாற்றங்களை மேற்கொள்வதும் முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டும்.
  • ஏற்கெனவே சுற்றுச்சூழல் பாதிப்பால் நிலைகுலைந்து போயிருக்கிறோம். இதுபோன்ற தவறான அணுகுமுறைகளால் மேலும் நம்மை நாமே அழித்துக் கொள்வது புத்திசாலித்தனமாகாது. இயற்கையை அழித்து மேற்கொள்ளும் வளா்ச்சி, வளா்ச்சியல்ல வீழ்ச்சி!

நன்றி: தினமணி  (11 – 06 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories