TNPSC Thervupettagam

வள்ளலார் 200 நிறைவு சத்திய தரும வாழ்வின் பேரொளி

October 5 , 2023 227 days 312 0
  • பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ்த் தத்துவ மரபில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியவர் வள்ளலார். வரையறையற்ற மானுட நேயத்தை முன்வைத்த அவரது கருத்துகள் அன்றைய சூழலில் தேவையும் நியாயமும் கொண்டவையாக இருந்தன. அதன் வீச்சு இன்றளவும் தாக்கம் செலுத்திக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, அவரது செயல்பாட்டின் அடர்த்தியைப் புரிந்து கொள்ளலாம்.

பிரிட்டிஷ் இந்தியாவில் சீர்திருத்தம்

  • இந்தியாவில் பிரிட்டிஷ் அரசு தன்னைச் சட்டரீதியாகத் திடப்படுத்திக்கொள்ளத் தொடங்கியிருந்த காலத்தில், மக்களின் உணர்வுகளை ஓரளவு புரிந்துகொண்டிருந்தது. மக்களின் நம்பிக்கை, பழைய மரபுகளின் மீது கை வைக்கக் கூடாது என்பதில் உறுதியான நிலைப்பாட்டை வைத்திருந்தது.
  • அதனால், பிராந்திய அளவில் உருவான சபை, சங்கங்களை ஆதரித்து அவர்களின் நகர்வுக்கு ஊக்கம் அளித்தது. இந்தப் பின்னணியில் பல சமூகச் சீர்திருத்த இயக்கங்கள் நாடு முழுவதும் உருவாயின. அதுவரை இருந்துவந்த சமூகக் கட்டுப்பாடுகளை அவை புனரமைத்தன. காலத்துக்குத் தேவையான மாற்றங்களைச் சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தின.
  • தென்னிந்தியாவிலும் சமூகத்தின் பழைமைவாதத்துக்கு மாற்றாகப் பல இயக்கங்கள் தோன்றின. ஒவ்வொன்றுக்கும் தனித்த நோக்கம் இருந்தது. சில இயக்கங்கள் அரசியல், பண்பாட்டு உரிமைகள் தொடர்பாகக் குரல் எழுப்பின. சில ஆன்மிகத்தில் நெகிழ்வாக்கம் செய்தன. அனைத்துச் சீர்திருத்த இயக்கங்களிலும் அதுவரை ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த கருத்தியல்கள் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டன. பிரிட்டிஷ் அரசு உருவாக்கிக் கொண்டிருந்த நவீன நிர்வாக முறையை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கான வேலையையும் சில இயக்கங்கள் செய்தன.

வள்ளலார் காலத்துப் புலவர் மரபு

  • 1823 அக்டோபர் 5இல் கடலூருக்கு அருகேயுள்ள மருதூரில் பிறந்த வள்ளலார், ஓரிடத்தில் நிலையாகத் தங்கி வாழ்ந்தவர் அல்லர். சென்னை, கருங்குழி, வடலூர், மேட்டுக்குப்பம் என்று புலம்பெயர்ந்து வாழ்வை அமைத்துக்கொண்டவர். அந்த இடங்களிலும்கூட நிலையாக இல்லாமல் பக்கத்துக் கிராமங்களுக்குப் போய் மக்களைச் சந்தித்துப் பேசுவதை வழக்கமாகக்கொண்டிருந்தவர்.
  • சுவடிகளைப் பிரதி எடுத்தல், மனனம் செய்தல், பொருள் விளக்கம் செய்தல், படித்ததைக் கதையாகவும் பாடலாகவும் பிரசங்கம் செய்தல், ஊருக்குப் புதிதாக வரும் வித்துவான்களைக் கொண்டு உள்ளூர் மாணவர்களின் கல்வியறிவைப் பரிசோதித்துக்கொள்ளுதல் என்பதுதான் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்த தமிழ்க் கல்வி மரபு. உ.வே.சா. உள்ளிட்டவர்கள் இந்தக் கல்வி மரபில்தான் வேர்பிடித்து வளர்ந்தார்கள்.
  • ஒவ்வொரு புலவர் குழுவும் மூத்த வித்துவான் ஒருவரின் தலைமையில் இயங்கியது. குழுக்களுக்குள் முரண்கள் இருந்தபோதும் பாடநூல்களாக இருந்த சுவடிகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. சிற்றிலக்கியம், புராணம், இலக்கணம் ஆகியன அதிக அளவில் படிக்கப் பட்டன. ஒவ்வொரு புலவர் குழுவுக்கும் சமயப் பின்புலமும் சமூக ஏற்பும் இருந்தன. ஒரு புலவருக்கு அவரது குழுவின் பெயர் சார்த்திச் சொல்லப்பட்டது.
  • இந்த மாதிரியான புலவர் மரபுச் சூழல் இருந்த காலத்தில், ‘இந்தப் புலவர் மரபைச் சார்ந்தவர் தான்’ என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாத வகையில், தனித்துவத்தோடு தமிழ் இலக்கிய, இலக்கண அறிதலில் தேர்ந்தவராகத் திகழ்ந்தவர் வள்ளலார். குறிப்பாக, யாப்பு இலக்கணம் சொல்லும் விருத்தக் கட்டமைப்பில் அதீத திறமை பெற்றிருந்தார் அவர்.
  • பெரும்பாலான தமிழறிஞர்கள் போதிப்பதிலும் சுவடிகளைப் பதிப்பிப்பதிலும் கவனம் செலுத்திக் கொண்டிருந்தபோது, பொதுச் சமூகத்தின் பசியைத் தீர்ப்பதில் வள்ளலார் குறியாய் இருந்தார். மறுமை இன்பத்தைவிட வாழும் காலத்தில் மனிதன் பசியற்று இருக்க வேண்டும் என்கிற வள்ளலாரின் உள்ளார்ந்த தெளிவு, அவர் கால மத நிறுவனங்களிலிருந்து அவரை விலக்கிவைக்கக் காரணமாக அமைந்தது.
  • ஆனால், அந்த அம்சம்தான் எளியோர் பக்கம் அவரை நெருக்கமாகக் கொண்டுவந்து சேர்த்தது. அதைத்தான் அவர் ஆன்மிகம் என நம்பினார். இது ஒருவகையில் வெகுஜன அறம். இந்த மாதிரியான வெகுஜன அறத்தை பெளத்த இலக்கியங்களில், குறிப்பாக ஜென் கதைகளில் நிறையப் பார்க்க முடியும்.

உயிர்களின் துயரில் பங்கெடுத்தல்

  • 1878இல் தாது வருடப் பஞ்ச நிவாரண நிர்வாகக் குழுவின் கெளரவச் செயலாளராகப் பணியாற்றிய வில்லியம் டிக்பி, ‘தென்னிந்தியாவில் பஞ்ச பிரச்சாரம்’ என்னும் தனது நூலில் தாது வருடப் பஞ்சத்தின் கொடுமைகளை நேரில் பார்த்து எழுதியவர். பஞ்ச நிவாரணத்தில் இருந்த குறைகளைக் கண்டித்தவர். குறிப்பாக, நிவாரணம் வழங்குவதில் சாதி எந்த அளவுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது என்று வெளிப்படையாக எழுதியவர்.
  • 1876 முதல் 1878 வரை தாது வருடப் பஞ்ச காலமாகக் குறிப்பிடப்பட்டாலும் பஞ்சத்தின் அறிகுறிகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியப்பகுதி முதலே தெரியத் தொடங்கி விட்டன என்பார் டிக்பி. சிறுசிறு பஞ்சங்கள் அந்த நூற்றாண்டில் வந்துபோனதைப் பற்றி வேறு சிலரும் எழுதியிருக்கின்றனர். பஞ்சத்துக்குப் பிறகான கொடுந்துயரை ‘தாது வருஷத்துக் கரிப்புக் கும்மியும்’ விவரிக்கும்.
  • இந்தச் சூழலில் 1874 வரை வாழ்ந்த வள்ளலாருக்கு மக்களின் பசித் துயரில் பங்கெடுப்பது சவாலாகவே அமைந்தது. ‘புன்மையரிடத்திவ் வடியனேன் புகுதல் / பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் / சின்மயப் பொருள்நின் தொண்டர்பால் நாயேன் / சேர்ந்திடத் திருவருள் புரிவாய்’ என்னும் திருவருட்பா வரிகள், பொது நலத்துக்காக வள்ளலார் எதிர் கொண்ட உளரீதியான சிக்கலைப் பேசும். இதையெல்லாம் தாண்டித்தான் மக்களின் துயரில் அவர் பங்கெடுத்தார்.
  • அதன் விளைவாக, 1867இல் சத்திய தரும சாலையை நிறுவினார். ஆன்மிகத் தளத்தில் இருந்துகொண்டு சாதி, மதம் கடந்த பொது நலத்துக்காகச் செயல்படும்போது வருகின்ற இடர்பாடுகளைக் கண்டு, தன்னைத் தானே நொந்துகொள்ளுதல் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வள்ளலாரிடம் மட்டுமே தென்பட்ட தனித்த குணம்.

பசி தீர்க்கும் தருமம்

  • முருகன் – நடராசர் - ஜோதி என்று வள்ளலாரிடம் அவரது பக்திமையின் வரிசை அமைந்திருந்தாலும், உள்ளுக்குள் எளியோர் – பசி – உணவு என்கிற வரிசைதான் இருந்தது என்பதற்கு அவரது பாடல்களில் நிறைய இடங்களில் சான்றுகளைப் பார்க்க முடியும். உலகத்தில் ஒருவரின் பசியைப் போக்கும் வல்லமை பெற்றவர், பசித்தவர்களில் பெரியவர் - சிறியவர் என்ற பேதம் பார்க்கக் கூடாது. புலால் உண்பவர் நம்மவர் ஆகார்.
  • என்றாலும் பசி என்று நம்மிடம் அவர் வந்தால் உணவளிக்க வேண்டும் என்பதான கருத்துகளை திருவருட்பா ஆறாம் திருமுறையில் நிறையக் காணலாம். இதில் பசி பற்றிப் பேசும் போதெல்லாம் தன்னுடைய பசி அனுபவங்களையும் இணைத்தே பேசும் வள்ளலார், உணவை இறைவனாகப் பாவித்திருப்பது தெரிகிறது. பசியைப் போக்கும் பொருள் எதுவோ அதுதான் ‘இறைவன்’ என்பது ஆன்மிகத் தளத்தில் மிக முக்கியமான மாற்றுப் பார்வை ஆகும்.
  • பசி பற்றிப் பேசும் குரல்கள் தமிழில் ஏற்கெனவே உண்டென்றாலும் வள்ளலாரின் பிற்காலப் பாடல்களில், அவருடைய இளமைக் காலப் பசித் துயரை நினைத்து அதைப் பிறரின் பசியோடு இணைத்துப் பொதுவாக்கி, அதைப் போக்கிக்கொள்ள இறைவனிடம் முறையிடுதல் என்கிற ‘வழிபாட்டுக் கட்டமைப்பு’ இருக்கிறது. இது தமிழின் தத்துவ, இலக்கிய உலகுக்குப் புதியது. இதைப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் நிகழ்ந்த சாதி, சமய பேதமற்ற வாழ்வை நோக்கிய ஒருவித ஆன்மிக அரசியல் செயல்பாடு என்றுகூட அடையாளப்படுத்தலாம்.
  • விதவிதமான அளவுகோல்களைக் கொண்டு மனிதர்களை வகைப்படுத்திப் பிரிக்கும் இன்றைய சூழலில், அனைவரையும் ஒரே நேர்க்கோட்டில் நிறுத்தி, சக மனிதரின் துயரில் பங்கெடுத்துப் பசி களைதலை ஓர் ஆன்மிகச் செயல்பாடாகச் செய்துகாட்டிய வள்ளலாரைப் பேசுவதும் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்வதும் நல்ல பயனை அளிக்கக்கூடும். பேதமற்ற மானுட வாழ்வை வாழ்ந்தும் வாழச் சொல்லியும் சென்ற வள்ளலாரைச் சத்திய தரும வாழ்வின் பேரொளி எனச் சொல்லுதல் சாலப் பொருந்தும்.

நன்றி: இந்து தமிழ் திசை (05 - 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories