TNPSC Thervupettagam

வழி தவறிய காட்டு யானைகளின் பயணம்

May 27 , 2023 357 days 287 0
  • ஏலகிரி மலையின் அடிவாரம் காடுகள் அடர்ந்த ஒரு பகுதியாக இருந்த காலத்தில் புலி, சிறுத்தை, யானை உள்ளிட்ட விலங்குகள் வாழ்ந்ததாக என் சிறு வயதில் பெரியவர்கள் சொன்னபோது நம்ப முடியவில்லை. ஏலகிரி மலையில் திருப்பத்தூர் தூய நெஞ்சகக் கல்லூரியின் பேராசிரியர்களால் ‘புலிக் குத்தி' நடுகற்கள் உள்படப் பல்வேறு விதமான வரலாற்று எச்சங்கள் கண்டறியப்பட்டதாகச் சமீபகாலமாகச் செய்திகளில் வாசிக்கக் கிடைத்தபோது, அவை வாழ்ந்திருக்கலாம் என்கிற நம்பிக்கை துளிர்த்தது.
  • காட்டு விலங்குகள் வாழும் அளவுக்கு ஏலகிரியிலும் அதன் அடிவாரத்திலும் அடர்த்தியான காடுகள் ஒரு காலத்தில் பரந்துவிரிந்து இருந்திருக்க வேண்டும். இந்தக் காடுகள் பிற்காலத்தில் விறகுக்காகவும் பிறகு விளைநிலங்களுக்காகவும் மனிதர் களால் அழிக்கப்பட்டன. இதன் காரணமாக, காலப்போக்கில் பெரும்பாலான விலங்குகளும் அழிந்திருக்க வேண்டும். கடைசியாக ஒரு சில செந்நாய்கள் மட்டுமே அங்கே வாழ்ந்ததைப் பார்த்திருக்கிறேன்.

கோடையில் நெருப்பு

  • ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல், மே மாதக் கோடைக் காலத்தில் ஏலகிரி மலையில் அடர்ந்து வளர்ந்திருக்கும் மஞ்சு என்றழைக்கப்படும் மஞ்சம்புற்கள் காய்ந்துவிடும். அந்தக் காய்ந்த புற்கள் காட்டுக்குள் மேயச் செல்லும் ஆடு மாடுகளுக்கு வழியடைத்துக் கொள்கின்றன; கால்நடைகளை ஓட்டிச் செல்லும் மனிதர்களின் உடலில் சிராய்ப்பையும் எரிச்சலையும் ஏற்படுத்துகின்றன.
  • இதற்காக மலைக்காடு நெடுக ஆங்காங்கே நெருப்பு வைத்து இவற்றை எரித்து அழிப்பது தற்போதுவரை வருடாவருடம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விஷமிகள் சிலர் தீ வைத்ததாகவும், கோடை வெய்யிலின் தாக்கத்தால் காய்ந்த புற்களில் தீப்பற்றியதாகவும் அவை செய்திகளில் இடம்பெறும். இத்தகைய காரணங்களால் அந்தக் காட்டில் மிச்சம் மீதி இருந்த காட்டுப்பன்றிகள், மலைப்பாம்புகள், முயல்கள், குள்ளநரிகள், மயில்கள், பல்வேறு விதமான பறவைகள் என அனைத்தும் எளிதில் அடையாளம் காண முடியாத அளவுக்குக் குறைந்துவிட்டன; பல முற்றிலும் அழிந்தேவிட்டன.

ஊருக்குள் வந்த யானைகள்

  • தண்ணீருக்காகவும் உணவுக்காகவும் காட்டிலிருந்து வெளியேறி மக்கள் வாழும் சில ஊர்களுக்கு காட்டு யானைகள் வரும் தகவலை அங்கொன்றும் இங்கொன்றுமாக செய்திகளில் வந்ததை வாசித்திருக்கிறேன். இருப்பினும், இதுவரை காட்டு யானைகள் வராத ஊர்களாக திருப்பத்தூர் மாவட்டத்தின் நாட்றம்பள்ளி, ஜோலார்பேட்டை, ஏலகிரியின் மலையடிவாரப் பகுதிகள் இருந்துவந்தன.
  • இந்நிலையில், தற்போது ஆந்திர - கர்நாடக எல்லைப்புறக் காடுகளிலிருந்து உணவும் தண்ணீரும் தேடி வழி தவறித் தங்க நாற்கர நெடுஞ்சாலைக்கு இரண்டு காட்டு யானைகள் வந்தன. அதைக் கடந்து ஜோலார் பேட்டைக்குள் நுழைந்து ஏலகிரி மலையடிவாரப் பகுதிக்குள் வந்துவிட்ட இரண்டு யானைகள் குறித்த செய்தி ஊடகங்களில் வெளியானது. இந்தச் செய்தி சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு வெளியில் வாழும் மக்களுக்கு வழக்கமான ஒரு சாதாரணச் செய்தியாக மட்டுமே இருந்திருக்கும்.

விரட்டப்பட்ட யானைகள்

  • பெருமளவு உணவுக்காகவும் தண்ணீருக் காகவும் ஓரிடத்தில் நிலையாக நிற்காமல் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கும் வழக்கமுள்ள யானைகள், இப்பகுதிக்குள் நுழைந்தது முதல் இரவும் பகலுமாக தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்தன. அவற்றை வேடிக்கை பார்க்கவும் ஒளிப்படம், செல்ஃபி, காணொளி எடுக்கவும் ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள், புரிதல் எதுவுமின்றி பின்தொடர்ந்தனர். இது போதாது என்று குடிபோதையிலும் பல்வேறு மனநிலைகளிலும் திரிந்த விஷமிகள் சத்தமிட்டும் கல்லெறிந்தும், பட்டாசுகள் வெடித்தும் இரவும் பகலுமாக அந்த யானைகளை விரட்டினர்.
  • வழி தவறி வந்திருக்கும் யானைகளைத் தயவு செய்து யாரும் தொந்தரவு செய்யாமல் அவை மீண்டும் காட்டுக்கே செல்ல உதவுங்கள்; மாவட்ட நிர்வாகமும் வனத்துறையும் எடுக்கும் முயற்சிகளுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு கொடுங்கள்’ என மாவட்ட ஆட்சியர் விடுத்த வேண்டுகோள் காணொளியாகவும் குரல் பதிவாகவும் சமூக ஊடகங்களில் அதிகம் பகிர்ந்துகொள்ளப்பட்டன. இருப்பினும், அவை எந்த விதத்திலும் பயன்படவில்லை என்பதே யதார்த்தம்.

நமக்கும் ஏற்படலாம்

  • ஒரு வழியாக அந்த யானைகள் ஏலகிரியின் இடது புற அடிவாரமான ஜலகம்பாறை வரை சென்றுவிட்டன. மனிதர்களின் விரட்டலுக்குப் பயந்து செங்குத்தான அந்த மலை மீதுகூட அவை ஏற முயன்றன. ஆனால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததால், மீண்டும் வந்த வழியே திரும்பத் தொடங்கின. இருப்பினும், மலையடிவாரம் முழுக்க மது வெறியர்கள் குடித்துவிட்டு வீசியிருந்த ஏராளமான மதுக்குப்பிகளால், யானைகள் பாதுகாப்பாக சொந்தக் காட்டைச் சென்று சேர முடியுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
  • அவற்றின் வாழிடமும் தண்ணீரும் உணவும் நம்மால் பறிக்கப்பட்டன என்பதே உண்மை. இதே நிலை நமக்கும் ஏற்படுவது தள்ளிப் போகலாம்; முற்றிலும் வராமல் தடுக்க முடியாது. நாடு இல்லாமல் காடுகள் உயிர் வாழ்ந்துவிடும். ஆனால், காடுகள் இல்லாமல் நாடுகளால் உயிர் பிழைக்க முடியாது.

நன்றி: தி இந்து (27 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories