TNPSC Thervupettagam

வாக்குவங்கியாக மாறிவிட்ட ஜாதியும் மதமும்

November 12 , 2021 919 days 416 0
  • தமிழ்நாடு அரசு 2020 டிசம்பர் 22-ஆம் தேதியன்று ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒரு கமிஷனை அமைத்தது.
  • அதன் தலைவராக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் மாண்பமை ஏ. குலசேகரனை நியமித்து கமிஷன் தனது அறிக்கையை ஆறு மாத காலத்தில் அரசுக்கு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
  • தமிழ்நாட்டில் ஜாதிவாரி மக்களின் சமூக, கல்வி, பொருளாதார மற்றும் அரசியல் நிலைகளைப் பற்றித் தேவையான தரவுகளைத் திரட்டி அரசுக்குத் தருவதற்காகவே இந்த கமிஷன் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
  • இந்த கமிஷன் அளிக்க உள்ள தரவுகளின் அடிப்படையில், ஒவ்வொரு ஜாதியிலும் உள்ளவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் பொருளாதார, கல்வி நிலைகளைச் சேகரித்துத் தரப்பட்டால் உரிய இடஒதுக்கீடு செய்வதற்கு இது உதவும் எனக் கருதியே இந்த கமிஷன் அமைக்கப்பட்டது.
  • உச்சநீதிமன்றம் ஏற்கெனவே இட ஒதுக்கீடு 50 சதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டுமென்று வரம்பு நிர்ணயித்துள்ளது கவனத்தில்கொள்ளத் தக்கதாகும்.
  • இந்தியாவிலுள்ள அனைத்து மக்களும் ஒரே தரத்தில் இல்லை. பல்வேறு ஜாதிகளாகப் பிரிந்துள்ளனர் என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். அதனால்தான் இட ஒதுக்கீடு என்ற கொள்கை முடிவு எடுக்கப்பட்டது.
  • முதன் முதலாக விடுதலைக்கு முன்பேஜாதிவாரி இட ஒதுக்கீடு தமிழ் மாகாண அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஜாதிகள் சம்பந்தமாக நான்கு பிரிவுகளை நாம் வரையறுத்துள்ளோம்.
  • முதலாவதாக முன்னேறிய ஜாதியினர்; இரண்டாவதாக பிற்படுத்தப்பட்ட ஜாதியினர்; இதிலேயே உள்ஒதுக்கீடாக மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் உள்ளனர்; நான்காவதாக தாழ்த்தப் பட்ட ஜாதியினரான பட்டியல் இனத்தவர்.
  • இந்த நான்கு பிரிவுகளில், பட்டியல் ஜாதியினருக்கான இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்தை உருவாக்கிய போதே நிர்ணயிக்கப்பட்டு விட்டது.
  • பிற்படுத்தப்பட்ட ஜாதிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 50 சதத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளுக்கு என 20 சதம் உள்ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனால் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளுக்கு 30 சதம் மட்டுமே மிச்சமாகியது.
  • இந்த 20 சதவிகித உள்ஒதுக்கீட்டை நீதிமன்றம் ஒப்புக் கொண்டுவிட்டதால் தொடர்ந்து அது இருந்து வருகிறது.
  • இதற்கிடையில் வன்னியர்குல சத்திரியர், தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் தாங்கள் இருப்பதாகக் கூறி, தங்களுக்கு மட்டுமே 20 சத இடஒதுக்கீடு தேவை எனக் கோரிக்கை வைத்துப் போராடி வந்தனர்.
  • இக்கோரிக்கையை வலியுறுத்திப் பெற, சென்ற 2021 மே மாதத் தேர்தலை நல்ல தருணமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.
  • அதனால் தமிழகத்தில் இதற்கு முன் ஆட்சிப் பொறுப்பிலிருந்த கட்சி, வன்னியர்களுக்கு 10.5 சத இட ஒதுக்கீட்டை சென்ற மார்ச் மாதம் செய்து அறிவித்தது. 2021 மே மாதம் அமைந்த புதிய ஆட்சியும் அதனையே ஒப்புக்கொண்டு விட்டது.
  • ஆனால், இந்த இட ஒதுக்கீடு சமத்துவமில்லாதது என 25-க்கும் அதிகமான பொதுநல வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கலாயின.
  • அதனை விசாரணை செய்து வந்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, இட ஒதுக்கீட்டை ரத்து செய்து 1.11.2021-இல் தீர்ப்பளித்தது.

ரத்தான இட ஒதுக்கீடு

  • வன்னியர்குலச் சத்திரியர்களுடன் ஏழு பிரிவுகள் சேர்க்கப்பட்டே எண்ணிக்கையை அதிகமாகக் காட்டப்பட்டதாகத் தீர்ப்புக் கூறியது.
  • அதனால் 10.5 சத இட ஒதுக்கீடு அதிகமாக உள்ளது. மிச்சமுள்ள 9.5 சதம் மிகவும் பிற்படுத்தப்பட்ட 155 ஜாதிகளுக்கு என்பது சமத்துவமற்றது என்று நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது.
  • அது மட்டுமல்லாமல், ஜாதிவாரி எண்ணிக்கையை நிர்ணயிக்க அரசு அமைத்துள்ள கமிஷனின் அறிக்கை வருவதற்கு முன்பே, இந்த 10.5 சத இடஒதுக்கீடு செய்ததையும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
  • எப்படி இருந்தபோதிலும், ஜாதிவாரி இட ஒதுக்கீடு செய்ய வேண்டுமானால், அதற்குத் தேவை ஜாதிகளில் உள்ளவர்களின் எண்ணிக்கைதான்.
  • இதனுடன் பொருளாதார, கல்வி, சமுதாய நிலைகளையும் கணக்கில் கொண்டுதான் இடஒதுக்கீடு அளவு நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது தெளிவாக்கப்பட்டுள்ளதை யாரும் மறுக்க முடியாது.
  • அரசியல் ஆதாயத்துக்காக செய்யப்படும் இட ஒதுக்கீடுக்கு ஏற்பட்டுள்ள கதி இதுதான் என்பதற்கு பல்வேறு மாநில அரசுகள் செய்த முயற்சிகள் முடியாமல் போன செய்திகள் பலருக்கும் தெரியும்.
  • இட ஒதுக்கீடு என்பது பின்தங்கிவிட்ட ஜாதியினரையும் முன்னேற்றுவதற்கான இடைக் கால நடவடிக்கைதான் என 1950-இல் 10 ஆண்டுகளுக்கு மட்டுமே இது அறிமுகமானது.
  • ஆனால், அரசியல் சக்திகளாக ஜாதிகள் உருமாறிவிட்டதால், இட ஒதுக்கீடு 70 ஆண்டுகளாகத் தொடர்வது மட்டுமல்ல, அது நிரந்தரமானாலும் ஆச்சரியப்பட வேண்டாம்.
  • இட ஒதுக்கீடுக்கு எண்ணிக்கைதான் முக்கியம். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, பிற மாநிலங்களிலும் இதே நிலைதான். ஐக்கிய ஜனதா தளம், சமாஜவாதி கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய மூன்று கட்சிகளும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு தேவை என கூறி வருகின்றன.
  • "ஜாதிவாரி கணக்கெடுப்பு இல்லாவிட்டால், எரிமலை வெடிக்கும்' என ஐக்கிய ஜனதா தள முன்னாள் தலைவர் சரத் யாதவ் எச்சரித்துள்ளார். லல்லு பிரசாத் யாதவ் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.
  • காங்கிரஸýம் இதனை ஆதரித்து வருகிறது. இடதுசாரிகளிலும் மாநில அளவில் இதனை எதிர்ப்பதில்லை.
  • இதனால் ஜாதிகளற்ற சமுதாயத்தை உருவாக்கும் உன்னத நோக்கம் உருக்குலைந்து போய் விட்டது. ஆனாலும் மேடை முழக்கமாக அரசியல் கட்சித் தலைவர்கள் உதட்டளவில் இதனை உரக்க உச்சரிக்கத் தவறுவதில்லை.
  • ஜாதிகளை ஒழிக்க விரும்பாமல் ஒப்புக் கொண்டுவிட்டோம். அநேகமாக அனைத்து மாநிலங்களிலும் கூட்டணிக் கட்சி ஆட்சிகள் நடப்பது காட்சிகளாகத் தெரிந்தாலும், உற்றுக் கவனித்தால் உள்ளே ஜாதி ஆட்சிதான் நடக்கிறது என்பதை மறைக்க முடியாது.
  • இட ஒதுக்கீட்டில் எண்ணிக்கையை முக்கியமாக எடுத்துக்கொண்டதுபோல, எல்லைப்புற மாநிலங்களுக்குள் பிரவேசிக்கிற பிறநாட்டுப் பிரஜைகளை எதனை முக்கியமாக வைத்து தடுப்பது?

சரியானதா? இல்லையா?

  • வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று அண்டை நாடுகளில் துன்புறுத்தப் பட்டவர்கள் உயிருக்கு பயந்து தப்பி வந்தவர்கள். அவர்கள் அந்நாடுகளில் உள்ள சிறுபான்மை மதத்தினர்.
  • அவர்களுக்கு இஸ்லாமிய தேசங்களில் உரிய பாதுகாப்பு இல்லை. அதனால் இந்தியாவுக்குள் பிரவேசித்தனர்.
  • அவர்களில் சீக்கியர், பார்ஸிகள், பெளத்தர்கள், ஜைனர்கள், ஹிந்து பண்டிட்டுகள், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களும் உள்ளனர்.
  • முஸ்லிம்களுக்கு அந்நாடுகள் தாய்நாடுகள். மற்ற மதத்தினருக்கு அங்கு வாழ்வுரிமை இருந்தாலும், உயிருக்குப் பேராபத்து உள்ளது.
  • முஸ்லிம்கள் பக்கத்து அஸ்ஸாமில் அத்துமீறி பிரவேசிக்கிறார்கள். அங்குள்ள இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை அபகரித்துக் கொள்கின்றனர்.
  • அதனால் அங்கு பிரச்னை. அவர்களை அவர்களின் தாய்நாடுகளுக்குத் திருப்பி அனுப்புவது தார்மிக ரீதியிலும் தவறானது அல்ல என்றாலும், அதனை மனிதாபிமானமற்ற செயலாக இந்தியா கருதுகிறது.
  • மற்ற மதத்தினரை அகதிகளாகவும், முஸ்லிம்களை ஊடுருவியவர்களாகவும் பேதப்படுத்துவது மனிதாபிமானமாகாது என அரசியல் கட்சிகளும் விமர்சிக்கின்றன.
  • அஸ்ஸாமைத் தாண்டி அவர்கள் மேற்கு வங்கத்தில் பிரவேசித்தால் வாக்கு வங்கிகளாகவே அவர்கள் பயன்படுத்தப்படுவதால், அரசியல் லாபத்துக்காக அவர்கள் ஆதரிக்கப்படுவதையும் கவனிக்கத் தவறக் கூடாது.
  • ஆனாலும், மத்திய அரசு அவர்களுக்கும் குடியுரிமை வழங்க ஒரு கால வரையறையை அறிவித்தது.
  • 31.12.2014-க்கு முன்பு இந்தியாவில் தஞ்சமடைந்த முஸ்லிம்களுக்கும் குடியுரிமை தர ஒப்புக் கொள்ளப் பட்டது. அத்துடன், முன்பு 12 வருடங்களாக இருந்த அகதிகளின் வாழ்நாளை ஆறு வருடங்களாகக் குறைக்கவும் செய்தது. இந்தியாவில் 18 கோடி முஸ்லிம்கள் வாழ்ந்து வருவதை மறந்துவிடக் கூடாது.
  • ஆனால், வங்கதேச முஸ்லிம்களின் எண்ணிக்கை 16 கோடிதான். ஆப்கானிஸ்தானின் ஜனத்தொகையே நான்கு கோடிதான். பாகிஸ்தானின் ஜனத்தொகை மட்டும்தான் 22 கோடி.
  • இந்திய முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இருந்தாலும் அவர்கள் குடியரசுத் தலைவராக முடியும். அப்படியிருக்க முஸ்லிம்களுக்கு இந்தியா பாரபட்சம் காட்டுவதாகக் கூறுவது நியாயமாகுமா? வாக்குவங்கி அரசியலுக்காகத்தான் முஸ்லிம்கள் பயன்படுத்தப் படுகிறார்கள் என்பதை மறுக்க முடியுமா? அதனாலேயே தேசிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை இந்திய அரசியல் கட்சிகள் தீவிரமாக எதிர்த்து வருகின்றன.
  • ஜாதிகளுக்கு இட ஒதுக்கீடு தர, எண்ணிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளதைப் போல, அகதிகளுக்குக் குடியுரிமை தருவதற்கு எதை ஏற்றுக்கொள்வது?
  • அண்டை நாடான வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்குள்ளும் முஸ்லிம்களைப் போல இந்தியர்கள் பிரவேசிக்க முடியுமா? குடியுரிமைப் பதிவேடு என்பது அத்து மீறுபவர்களைத் தடுப்பதற்கான சாதனமே தவிர, மத துவேஷமாக இதனை மலினப்படுத்துவது சரியா?
  • இட ஒதுக்கீடு நீட்டிப்பும், குடியுரிமைப் பதிவேடு நிராகரிப்பும் ஜாதிகளையும் மதங்களையும் வாக்கு வங்கிகளாக்கி விட்டுள்ளதாகச் சொல்வது சரியானதா? இல்லையா?

நன்றி: தினமணி  (12 - 11 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories