TNPSC Thervupettagam

விமான நிலையக் காவல்

January 27 , 2023 426 days 252 0
  • தமிழ்நாட்டு விமான நிலையங்களில் பணியாற்றும் ஒன்றியத் தொழிலகக் காவல் படையைச் சேர்ந்த (சிஐஎஸ்எப்- CISF) காவலர்களுக்குத் தமிழ் தெரிவதில்லை, ஆங்கிலமும் தெரிவதில்லை, அவர்கள் இந்தியிலேயே பேசுகிறார்கள். இதனால் பயணிகள் சிரமப்படுகிறார்கள். இது சமீபத்தில் சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. இந்த விவாதத்தைத் தொடங்கிவைத்தவர் திரைக் கலைஞர் சித்தார்த்.
  • ஆனால், பல சமூக வலைதளச் சர்ச்சைகள் போல, பேசுவதற்கு அடுத்த விஷயம் கிடைத்தும் இதுவும் கரைந்துபோனது. இந்த விவாதத்தை மீண்டும் இங்கே முன்னெடுப்பதற்கு இரண்டு காரணங்கள். முதலாவது, இது சித்தார்த் தொடர்பானது மட்டுமல்ல, இது மாநிலங்களின் உரிமை சார்ந்தது. இரண்டாவது, கடந்த வாரம் சென்னை விமான நிலையத்தில் நான் கண்ணுற்ற சிறிய மாற்றம்.
  • நாம் சித்தார்த்திலிருந்தே தொடங்குவோம். டிசம்பர் கடைசி வாரத்தில் அவருக்கும் அவரது வயது முதிர்ந்த பெற்றோருக்கும் குடும்பத்தினருக்கும் மதுரை விமான நிலையத்தில் ஏற்பட்ட அனுபவம் கசப்பானது. அவர்கள் சிஐஎஸ்எப் காவலர்களால் கடுமையாக நடத்தப்பட்டார்கள். ஆங்கிலத்தில் பேசுமாறு கேட்டுக்கொண்ட பிறகும், காவலர்கள் இந்தியிலேயே பேசினார்கள். இப்படிச் சொல்லியிருந்தார் சித்தார்த்.

சோதனை மேல் சோதனை

  • சிஐஎஸ்எப் காவலர்கள் பிரதானமாக இரண்டு இடங்களில் சோதனை மேற்கொள்வார்கள். முதலில் விமான நிலையத்தின் நுழைவாயிலில் பயணிகளின் அடையாளத்தைச் சோதிப்பார்கள். அடுத்தது பாதுகாப்புச் சோதனை. பயணிகளையும் அவர்தம் கைச் சுமைகளையும் சோதிப்பார்கள். இந்த இரண்டு இடங்களிலும் தன்னையும் தன் குடும்பத்தினரையும் சிஎஸ்ஐஎப் காவலர்கள் சிரமத்திற்கு உள்ளாக்கியதாக சித்தார்த் குற்றஞ்சாட்டி இருந்தார்.
  • நுழைவாயிலில் இருந்த காவலர் அடையாள அட்டையில் இருக்கிற படம் உங்களுடையது மாதிரியில்லை என்று அடாவடி செய்ததாகச் சொன்னார் சித்தார்த். பாதுகாப்புச் சோதனையின்போது பயணிகள் தங்களது மணிபர்ஸ், சாவிக்கொத்து, செல்பேசி முதலானவற்றைக் கைச் சுமைக்குள் வைத்தோ அல்லது திறந்த மரவையில் (ட்ரே) வைத்தோ அலகீட்டுச் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். இந்தச் சோதனையின்போது தனது தாயாரின் மணிபர்ஸில் இருந்த நாணயங்களைக் காவலர்கள் கொட்டிக் கவிழ்க்கச் சொன்னார்கள் என்றார் சித்தார்த்.
  • மேலும் செல்பேசிகளையும் செவிப்பொறிகளையும் பைக்குள் வைக்கக் கூடாது என்றும் மரவையில்தான் வைக்க வேண்டும் என்று நிர்பந்தித்ததாகவும் சொல்கிறார். காவலர்களது உடல்மொழியும் வாய்மொழியும் கடுமையாக இருந்ததாகவும் சொல்கிறார். பர்ஸுக்குள் இருக்கும் நாணயங்களையும் பைக்குள் இருக்கும் மின்னணுச் சாதனங்களையும் அலகீட்டுக் கருவி தெளிவாகக் காட்டும்.
  • என் அனுபவத்தில் எந்த உள்நாட்டு, வெளிநாட்டு விமான நிலையத்திலும் அவற்றை வெளியே எடுத்துத் தனியாகச் சோதிக்க வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்தியதில்லை. அலகீட்டுச் சோதனையின்போது சிலர் தங்கள் பர்ஸுகளையும் செல்பேசிகளையும் மரவையில் வைப்பார்கள். சிலர் பாதுகாப்புக் கருதி தங்கள் பயணப் பொதிக்குள் வைப்பார்கள். அவரவர் விருப்பம். மடிக்கணினியை மட்டும்தான் மரவையில் வைக்க வேண்டும். சித்தார்த்தின் குற்றச்சாட்டுகள் உண்மையானால் மதுரைக் காவலர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் வழிகாட்டுதல்கள் தவறானவை. அவை பயணிகளைச் சிரமப்படுத்துபவை.

எதிர்வினைகள் பலவிதம்

  • சித்தார்த்தின் பதிவு சமூக வலைதளத்தில் வைரலானது. அதற்குப் பலவிதமான எதிர்வினைகள் வந்தன. குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டுமென மதுரை விமான நிலைய இயக்குநரிடம் கோரினார் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன். பல நெட்டிசன்கள் தமிழர்கள் மீது திணிக்கப்படும் இந்திக்கு எதிராகக் குரல் கொடுத்தனர்.
  • சித்தார்த்துக்கு எதிரான பதிவுகளும் வந்தன. அவர் தில்லியில் படித்தவர், இந்திப் படங்களில் நடித்தவர், அவருக்கு இந்தி தெரியாதா என்பது சிலரின் கேள்வி. சித்தார்த் ஒரு பொய்யர், விளம்பரப் பிரியர் என்பது ஓர் அரசியலரின் எதிர்வினையாக இருந்தது.
  • சித்தார்த்தின் குற்றச்சாட்டை விமான நிலையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் மறுத்தார். காவலர்கள் கனிவோடு நடந்துகொண்டனர், சோதனைகள் விரைவாக நடந்தன, காவலர்களில் ஒருவர் தமிழ்ப் பெண்மணி, அவர் தமிழில்தான் பேசினார். இது அதிகாரியின் கூற்று.
  • அதிகாரியின் ‘விளக்கம்’ வெளியானதும் சில இந்துத்துவ அமைப்பினர் சித்தார்த்தின் மீதே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு காவல் துறையிடமும் ஒன்றிய போக்குவரத்துத் துறையிடமும் புகார் அளித்தனர்.
  • இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்துவது அவசியமானது. அப்போதுதான் நடந்தவை என்ன என்பது தெரியவரும். அதேவேளையில், இதை நாம் ஒரு சித்தார்த்தின் பிரச்சினையாகச் சுருக்கிவிடக் கூடாது.
  • நான் 1995 முதல் விமானப் பயணம் மேற்கொண்டுவருகிறேன். அப்போதெல்லாம் தமிழ்நாட்டு காவல் துறை காவலர்கள்தான் பாதுகாப்புச் சோதனைகளை மேற்கொண்டார்கள். 2000ஆம் ஆண்டுக்குப் பிற்பாடுதான் இது சிஐஎஸ்எப் காவலர்களுக்கு மாற்றப்பட்டது. தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் பன்னாட்டு அளவில் அதிகரித்ததுதான் காரணம்.

கண்டேன் சீதையை

  • சித்தார்த்துக்குப் பதிலளித்த அதிகாரி தனது மறுப்புரையில் கடைசியாகச் சொல்லியிருந்தது எனக்கு மகிழ்ச்சி அளித்தது. அதாவது சிஐஎஸ்எப் காவலரில் ஒரு தமிழரும் இருந்தார் என்பது. ஏனெனில், கடந்த பல ஆண்டுகளாக சென்னை, மதுரை, கோவை, திருச்சி விமான நிலையங்கள் வழியாகப் பல முறை பயணித்திருக்கிறேன். ஒருமுறைகூட தமிழ் பேசும் காவலரை நான் எதிர்கொண்டதில்லை, கடந்த வாரம் வரை.
  • கடந்த வாரம் சென்னை விமான நிலையத்தில் ஒரு சிறிய மாற்றத்தைக் கவனித்தேன். பயணப் பொதிகளை அலகீட்டுக் கருவியில் செலுத்துகிற இடத்திலும், அலகீடு முடிந்தபின் பொதிகளை எடுத்துக்கொள்கிற இடத்திலும் காவலர்கள் இருப்பார்கள். அலகீட்டுக் கருவி காட்டுகிற படத்தைப் பரிசீலிக்கவும், பயணிகளைச் சோதனையிடவும் காவலர்கள் இருப்பார்கள். என் பல்லாண்டு கால பயண அனுபவத்தில் முதல்முறையாகப் பொதிகளை அலகீட்டுச் சோதனைக்கு உட்படுத்துகிற இடத்தில் தமிழ் பேசும் ஒரு காவலரைக் கண்டேன். எனக்குச் சீதையைக் கண்ட அனுமனின் மகிழ்ச்சி உண்டானது.
  • அடுத்தடுத்த அலகீட்டுக் கருவிகளிலும் அதே இடத்தில் தமிழ்க் காவலர்கள் இருந்தனர். விசாரித்ததில், அவர்கள் சிஐஎஸ்எப் காவலர்கள் அல்லர். முன்னாள் ராணுவத்தினர். இந்த ஒரு இடத்தைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் எப்போதும் போல இந்தி பேசும் காவலர்கள்தான் இருந்தார்கள். இந்தச் சிறிய மாற்றத்துக்கு சமீபத்திய சர்ச்சைதான் காரணமா? இருக்கலாம். ஆனால், ஏன் முன்னாள் ராணுவத்தினர்? தமிழ் அறிந்த சிஐஎஸ்எப் காவலர்கள் இல்லையா? தெரியவில்லை. இந்த ஏற்பாடு தற்காலிகமானதா? அதனால்தான் முன்னாள் ராணுவத்தினரா? தெரியவில்லை.

இந்தியும் இந்தியரும்

  • விமான நிலையங்களின் மொழிப் பிரச்சினை பொதுத் தளத்தில் விவாதிக்கப்படுவது இது முதல்முறை அல்ல. 2020 ஆகஸ்டு மாதம் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம் சென்னை விமான நிலையத்தில் ஒரு சிஐஎஸ்எப் காவலர் கேட்ட கேள்வி, ‘நீங்கள் ஓர் இந்தியரா?’. ஏனெனில், கனிமொழிக்கு இந்தி தெரியவில்லை.

ஏட்டுச் சுரைக்காய்

  • சிஐஎஸ்எப் தொடர்பான விவாதத்தில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் சிலவற்றுக்கு ஓர் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி பதில் அளித்திருக்கிறார் (‘இந்து தமிழ் திசை’, 12.1.13). பிரதானமாக இரண்டு அம்சங்களை அவர் முன்வைக்கிறார்.
  • முதலாவது, சிஐஎஸ்எப்பில் ஆய்வாளர்களும் துணை ஆய்வாளர்களும் பட்டப்படிப்பு முடித்தவர்கள். போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள். ஆகவே, அவர்களுக்கு ஆங்கிலம் தெரியும்.
  • ஆகவே, அவர்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் என்று அந்த அதிகாரி சொல்லியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். கள நிலவரம் அதிகாரியின் கூற்றுக்கு எதிர்த்திசையில் இருக்கிறது.எனது அனுபவத்தில் இதுகாறும் சிஐஎஸ்எப் காவலர்கள் என்னிடத்தில் இரண்டு மொழிகளில்தான் பேசியிருக்கிறார்கள்: 1. இந்தி; 2. சைகை மொழி. அதிகாரியின் கூற்றுப்படி அவர்கள் ஆங்கிலம் அறிந்தவர்கள் என்றால், அவர்கள் வைத்துக்கொண்டு வஞ்சகம் செய்கிறவர்கள் ஆகிறார்கள்.

அடுத்தாக அதிகாரி சொல்வது

  • சிஐஎஸ்எப் பணியாளர் இடமாற்ற சுற்றறிக்கை 22/2017இன்படி, அந்தந்த மாநிலத்தைச் சார்ந்த காவலர்கள் 30%, தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் (Home Sector) 30%, மற்ற மாநிலத்தினர் 40% எனப் பிரித்து இடமாற்றங்கள் வழங்கப்படும் என்கிறார். இதன்படி தமிழக விமான நிலையங்களில் 30% தமிழ்க் காவலர்கள் இருக்க வேண்டும். அப்படியானால், கடந்து இரண்டு தசாப்தங்களில் ஒரு தமிழ்க் காவலரைக்கூட நான் எதிர்கொள்ளாதது எங்ஙனம்? இது எந்தப் புள்ளியியல் நிகழ்தகவு விதிக்குள்ளும் வரவில்லையே? இது உண்மையானால், ஏன் சிஐஎஸ்எப் ஒவ்வொரு விமான நிலையத்திலும் அந்தந்த மாநில மொழி பேசும் காவலர்கள் எத்தனை வீதம் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள் என்று அறிவிக்கக் கூடாது?
  • ஆக, ராணுவ அதிகாரி சொல்லும் விதிகள் ஏட்டில் இருக்கலாம். அவை ஓடுதளத்திற்கு இறங்கி வரவில்லை.

இரு மொழிக் கொள்கை

  • சித்தார்த்தின் இன்னொரு குற்றச்சாட்டும் கவலை தருவது.
  • காவலர்களிடம் ஆங்கிலத்தில் பேசுமாறு கேட்டுக்கொண்டபோது ஒரு காவலர், “தேக்கோ, இந்தியாவில் விதிகளும் கட்டுப்பாடுகளும் உள்ளன” என்று பதிலளித்ததாகச் சொல்கிறார். இது உண்மையாக இருந்தால், அந்தக் காவலர் என்ன சொல்லவருகிறார்? இந்தியில் பேசுவது நமது நாட்டின் விதிமுறைகளில் ஒன்று என்கிறாரா? இந்தியா ஒரு கூட்டாட்சி என்பதையும் தமிழ்நாடு இரு மொழிக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் மாநிலம் என்பதையும் அந்தக் காவலர் அறியாதவரா? மேலதிகமாக பயணிகளிடம் கரிசனத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் பயிற்றுவிக்கப்படவில்லையா? அப்படியானால் அவருக்கும் அவரைப் போன்றவர்களுக்கும் அந்தப் பயிற்சி மீண்டும் வழங்கப்பட வேண்டுமா?
  • இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தி பல வழிகளிலும் திணிக்கப்படுகிறது. அதில் ஒன்றுதான் இந்தி மட்டுமே பேசும் காவலர்களை இந்தி பேசாத மாநில விமான நிலையங்களில் பணியமர்த்துவது.
  • இந்த இடத்தில் இப்படி யோசித்துப் பார்க்கலாம். தில்லி விமானம் நிலையம் முழுக்க இந்தியும் ஆங்கிலமும் தெரியாத தமிழ் மட்டும் பேசும் காவலர்கள் பணியமர்த்தப்பட்டால், அதைத் தில்லி வாழ் அறவோர் எப்படி எதிர்கொள்வர்? அவர்களுக்கு ஒவ்வாதது தமிழருக்கும் இன்ன பிற இந்தி பேசாத மாநிலத்தவர்க்கும் ஏற்புடையதாக வேண்டும் என்கிற எதிர்பார்ப்பில் இருக்கும் அநீதி அவர்களுக்கு உறைக்கவில்லையா?

தமிழ் அறிந்த காவலர்

  • ‘தமிழ்நாட்டில் தமிழ் அறிந்த மன்னர் இல்லை’ என்று ஒரு வசை இருந்ததாக பாரதி எழுதினான். தமிழ்நாட்டு விமான நிலையங்களில் தமிழ் அறிந்த காவலர் இல்லை என்கிற வசை நெடுநாளாக இருக்கிறது. சிஐஎஸ்எப் அதை நீக்க வேண்டும். விமான நிலையங்களில் அந்தந்த மாநில மொழி பேசும் காவலர்களை நியமிக்க வேண்டும். அதுவே, இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த பயணிகளுக்கு சிஐஎஸ்எப் செய்யும் நீதியாக இருக்கும். அவர்களால் முடியவில்லை என்றால் மாநில அரசின் காவலர்களுக்குப் பயிற்சியளித்து அவர்களைப் பணிக்கு அமர்த்த வேண்டும். 

நன்றி: அருஞ்சொல் (27 – 01 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories