TNPSC Thervupettagam

வியக்க வைக்கும் ஹரப்ப நகரம் ‘பனவாலி’

May 25 , 2023 344 days 360 0
  • நூறாண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட ஹரப்ப நாகரிகம் பல்வேறு தலைமுறை தொல்லியல் அறிஞர்களால் இந்தியத் துணைக் கண்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் அகழ்வாராய்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தவும், பண்டைய நாகரிகத்தின் சில கணங்களை நேரில் அறியவும் வழிசெய்துள்ளது. மாறிவந்த சூழலியலுக்கு ஏற்ப வாழ்வது, கைவினைத் திறனில் முன்னேற்றம் காண்பது, வியாபாரத்தில் சிறந்து விளங்குவது என்று வாழ்க்கையின் பல்வேறு துறைகளில் அவர்கள் சிறந்து விளங்கியது ஆய்வுகளின் மூலம் வெளிப்பட்டுவருகிறது.
  • அகழாய்வுகள் என்றாலே மொகஞ்சதாரோ, ஹரப்பா, கன்வேரிவாலா, ராக்கிகடி, டோலவீரா என்ற ஐந்து இடங்களைப் பற்றித்தான் அதிகம் விவாதிக்கிறார்களே தவிர பிற சிற்றூர்கள், கிராமப்புறக் கைவினைகள், கைவினை மையங்கள் குறித்துப் பொதுவெளியில் பேசுவதே இல்லை. ராஜஸ்தானின் காலிபங்கன் மேற்கிலும், ஹரியாணாவின் ராக்கிகடி கிழக்கிலும், ஹரப்பா வடக்கிலும் சூழ்ந்திருக்க நடுவில் இருப்பதுதான் பனவாலி.

முக்காலத்துக்கும் சாட்சியம்

  • ஹரப்பர்களின் நகரமைப்பு முறை தொடர்பாக வரலாற்றாய்வாளர்கள் கூறிவந்ததை முறிக்கும் விதத்தில் பனவாலி இருக்கிறது. ஹரப்ப நகரங்கள் அனைத்துமே செங்கோணத்தில் வெட்டிக்கொள்ளும் நீள – அகலமுள்ள வீதிகளால் ஆனவை அல்ல. இந்த ஊரில் சுடுமண்ணில் சுட்டெடுத்த கலப்பை உருவம் கிடைத்திருக்கிறது. அதன் நுட்பமும் அழகும் சொல்லி மாளாது. இங்கே வாழ்ந்தவர்கள் நெல்லிக்காயைச் சாப்பிட்டிருக்கிறார்கள், தலைக்கு சிகைக்காயைப் போட்டு முடியை அலசியிருக்கிறார்கள். ரீத்தா என்று அழைக்கப்படும் ஆதிகால சவுக்காரத்தை (சோப்பு) பயன்படுத்தி இருக்கிறார்கள்! இந்த ஊர் ஹரப்ப நாகரிகத்தின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் சாட்சியாக இருந்திருக்கிறது. 
  • ஆங்கில எழுத்து ‘டி’ (D) வடிவிலான அல்லது வில் போன்ற உருவத்தை ஒத்ததாக நகர அமைப்பு இருக்கிறது. இந்த ஊரிலும் தொடக்க காலத்தில் விவசாயமே தொழிலாக இருந்திருக்கிறது. ஹரப்ப நாகரிகத்தின் முற்பட்ட காலத்திலேயே நகரம் உருவாகியிருக்கிறது. பிறகு முதிர்ச்சியடைந்த ஹரப்ப நாகரிகத்துக்கேற்ப திட்டமிட்ட வகையில் நகர்ப்புறம் கட்டப்பட்டிருக்கிறது. கைவினைப் பொருள்கள் நல்ல நுணுக்கத்துடன் நேர்த்தியாக தயாரிக்கப்பட்டுள்ளன. வியாபாரமும் செழித்தோங்கி இருக்கிறது. பொது ஆண்டுக்கு 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இதன் காலம் தொடங்கி இருக்க வேண்டும். பிற்பாடு பொது ஆண்டு 1,900இல் இந்த ஊரின் தனித்தன்மை மறைந்துவிட்டது.  
  • பனவாலியில் (1974 - 77) சுமார் 10 மீட்டர் அல்லது 31 அடி ஆழத்தில் தோண்டிப் பார்த்ததில் ஹரப்ப நாகரிகத்தின் மூன்று காலகட்டத்துக்கும் அந்த ஊர் சாட்சியாக இருந்தது தெரியவருகிறது.
  • சிந்து சமவெளி காலத்துக்கும் முற்பட்டது அல்லது தொடக்ககால ஹரப்ப நாகரிகம்.
  • சிந்து சமவெளி நாகரிகத்தின் சமகாலம் அல்லது முதிர்ச்சி பெற்ற ஹரப்ப நாகரிகக் காலம்.
  • சிந்து சமவெளிக்குப் பிந்தைய காலம் அல்லது ஹரப்ப நாகரிகத்தின் பின்பகுதி என்பவையே அவை.
  • பனவாலி நகரம், வேளாண் சமூக ஊராகத் தொடங்கி வளர்ந்து பிறகு மைய நகரமாகி, வீழ்ச்சி அடைந்திருக்கிறது. சிந்து சமவெளிக்கும் முற்பட்ட காலத்தில் பனவாலியில் வாழ்ந்த மக்கள் ஒற்றை மாடி வீடுகளில் வாழ்ந்திருக்கிறார்கள்! கூரைகள் ஓலைகளாலோ மஞ்சம் புல் போன்ற கோரைகளாலோ வேயப்பட்டிருக்கிறது. சுவர்களை, சுட்ட செங்கல்களை வைத்துக் கட்டி மண்ணைக் குழைத்துப் பூசியிருக்கிறார்கள். செங்கல்கள் அனைத்தும் ஒரே சீரான நீள, அகல, உயரத்தில் சூளையில் 1:2:3 என்ற விகிதத்தில் வேக வைக்கப்பட்டிருக்கிறது! 

நகரத்தின் அமைப்பு

  • வீடுகள், வாசல் முதல் தோட்டம் வரையில் முழுதாக மூடாமல், நடுவில் பெரிய முற்றம் அல்லது திறந்து வெளி வைத்து கட்டியுள்ளனர். ஆங்காங்கே அடுப்புகளும் இருக்கின்றன. அறைகளில்கூட அடுப்புகளும், தீ மூட்டுவதற்கான குழிகளும் இருக்கின்றன. நிறைய தீ மூட்டப்பட்டதால் தரையெல்லாம் அனலில் சிவந்திருக்கின்றன. இங்கே ஏதோ உலோகத்தை உருக்கியிருக்கிறார்கள் அல்லது ஆபரணக் கற்களைச் சுட்டு அணிகலன்களைத் தயாரித்திருக்கிறார்கள். இன்னொரு வீட்டில் வட்ட வடிவில் தீக்குண்டம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதைச்சுற்றி கட்டப்பட்டுள்ள செங்கல் சுவரில், தொடர்ந்து அதிக சூட்டைத் தாங்க வேண்டும் என்பதற்காக மண்ணைக் குழைத்து மிக கனமாகப் பூசியிருக்கிறார்கள்.
  • சிந்து சமவெளி காலத்தில் அல்லது முதிர்ந்த ஹரப்ப நாகரிக காலத்தில் இந்த நகரின் அமைப்புகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நகரம் முழுவதையும் சுற்றிப் பெரிய சுவர் கட்டி, அரண் ஏற்படுத்தி இருக்கிறார்கள். வடக்கிலிருந்து தெற்காகவும் கிழக்கிலிருந்து மேற்காகவும் மதில் சுவர் எழுப்பப்பட்டிருக்கிறது. நகரின் உயரமான இடத்தில் கோட்டையையும் அதற்கு எதிரே தாழ்வான பகுதியில் குடியிருப்புகளையும் கட்டியிருக்கிறார்கள். உயரமான இடத்தில் நல்ல முகடுகளுடன் கூடிய கோட்டையையும், தாழ்வான சமவெளியில் நகர வீடுகளையும் கட்டியிருக்கிறார்கள்.  
  • இந்த தனித்துவமான நகர அமைப்பு வீதிகளும் குடியிருப்புகளும் செவ்வகமாகவோ சதுரமாகவோ வட்டமாகவோ இல்லாமல் செய்துவிட்டது. கோட்டையைச் சுற்றியுள்ள வீதிகள் நேராகவும் செங்குத்தாகவும் சீராகவும் உள்ளன. மக்கள் குடியிருப்புள்ள வீதிகள் அவ்வாறு இல்லாமல், அரைக் கோளமாக கோட்டையைப் பார்த்தவாறு இருக்கின்றன.
  • பனவாலியில் உள்ள வீடுகள் விசாலமாகவும் பல்வேறு அறைகளைக் கொண்டதாகவும் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் தாழ்வாரமும் முற்றமும் இருந்திருக்கிறது. வரவேற்பறையில் செங்கல்லையும் மண்ணையும் கலந்து சுவர் கட்டியிருக்கிறார்கள். இந்த வீட்டுக்குள் கழிப்பறையும் கை கழுவுவதற்கு சற்றே உயரத்தில் வாஷ்-பேசின் போன்ற அமைப்பும்கூட இருக்கிறது. வீட்டுக்குள்ளேயே தண்ணீர் வடிய ஓரங்களில் சிறிய ஜலதாரை கட்டப்பட்டிருக்கிறது. வீதிகளில் திறந்தவெளி சாக்கடைகளோ மூடிய சாக்கடைகளோ இல்லை. ஆங்காங்கே மண் ஜாடிகளைப் புதைத்துள்ளனர். குப்பைகளையும் கழிவுகளையும் அதில் வடியவிட்டுள்ளனர்.
  • ஹரப்ப நாகரிகரத்துக்கே உரிய தனி அடையாளச் சின்னமான ஒற்றைக் கொம்புள்ள விலங்கின் முத்திரையும் கிடைத்திருக்கிறது. இன்னொரு வீடு இதைவிடப் பெரிதாக இருக்கிறது. அங்கே ஏராளமான பாசி மணிகள் போன்ற ஆபரணக் கற்களும், தங்கமும், எடையளவுக் கருவிகளும் கிடைத்துள்ளன. அந்தக் காலத்தில் நகை தயாரிக்கும் கூடமாகவோ வியாபாரத்தலமாகவோ இருந்திருக்கலாம். காளிபங்கனில் கண்டுபிடித்தார்போல சில வீடுகளில் சதுர வடிவிலான ஹோம குண்டங்களும் காணப்படுகின்றன.

தூய்மையான நகரம்

  • ஹரப்ப நாகரிகத்துக்கே உரிய அடையாளமான தூய்மையான நகரமாக இருந்திருக்கிறது பனவாலி. எல்லா வீடுகளிலிருந்தும் வெளியேறும் கழிவுநீரைக் கொண்டு செல்ல பொதுவான வாய்க்கால் அமைப்பு இல்லாவிட்டாலும் வீதிகளில் குறிப்பிட்ட இடைவெளியில் மண்ணால் ஆன கூஜாக்கள் போன்ற பாத்திரங்கள் புதைக்கப்பட்டுள்ளன. கை கழுவும் தண்ணீர், வாய் கொப்பளிக்கும் தண்ணீர் போன்றவற்றை வீதியில் வழியவிட்டிருக்கவில்லை. நகரைத் தூய்மையாகவும் அழகாகவும் வைத்திருக்க அனைவரும் ஒத்துழைத்துள்ளனர்.
  • விவசாயத்தில் பயன்பட்ட ஏர் கலப்பையைப் போன்ற உருவை சுடுமண்ணால் செய்துள்ளனர். அவர்கள் காலத்து ஏர் எப்படி இருந்தது என்பதை அறிய இது உதவுகிறது. சிறிய நகரமாக இருந்திருக்கக்கூடிய பனவாலியை தோண்டத் தோண்ட வியப்பான விஷயங்களே வெளிப்படுகின்றன. பல்வேறு நகரங்களையும் வாணிபக் கேந்திரங்களையும் இணைக்கும் முக்கிய சாலையில் அந்த ஊர் இருந்திருக்கிறது. ராணுவரீதியிலும் முக்கியமான இடத்தில் அமைந்திருக்கிறது. அகழ்வாய்வுகளில் நமக்குப் புதுப்புதுத் தகவல்களும் சான்றுகளும் கிடைக்கும் என்பதற்கு இந்த ஊர் நல்ல உதாரணம். இதுவரை தெரிந்திராத விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடியும் என்ற எதிர்பார்ப்போடு தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்ள பனவாலி உதவுகிறது. 

நன்றி: அருஞ்சொல் (25 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories