TNPSC Thervupettagam

விவாதிக்காமல் சட்டமியற்றுதல்

August 18 , 2021 990 days 538 0
  • சுதந்திர தினத்தன்று உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த விழாவில் உரையாற்றிய தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நாடாளுமன்றத்தில் போதுமான விவாதங்களின்றிச் சட்டங்கள் இயற்றப்படுவது குறித்துக் கவலை தெரிவித்துள்ளது, நாடாளுமன்ற ஜனநாயகத்தை மேம்படுத்துவதற்கான நல்லதொரு அறிவுரை.

தலைமை நீதிபதியின் கருத்து

  • அரசமைப்பால் வகுக்கப்பட்ட அதிகாரப் பிரிவினைக் கோட்பாட்டின் வரம்புகளை மீறி இந்தக் கருத்து அமைந்துள்ளதாகவும் சில விமர்சனங்கள் எழுந்துள்ளன.
  • சட்டமியற்றும் அவை, நிர்வாகம், நீதிமன்றம் மூன்றும் சுதந்திரமாகத் தனித்தியங்கவும் ஒன்றுக்கொன்று இணங்கிச் செல்லவும் வேண்டும் என்பதுதான் அதிகாரப் பிரிவினைக் கோட்பாட்டின் அடிப்படையே ஒழிய, அரசமைப்பின் பிறிதொரு அங்கத்தின் தவறுகளை அனுசரித்துச் செல்ல வேண்டும் என்பதல்ல.
  • இயற்றப்படும் சட்டங்களின் முன்வரைவுகள் பெரும்பாலும் துறைசார் வல்லுநர்கள், அத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கருத்துகளைப் பெற்று உருவாக்கப்படுகின்றன.
  • அவையில் முன்மொழியப்படும் சட்ட வரைவுகளைத் தெரிவுக் குழு அல்லது இரு அவைகளின் கூட்டுக் குழு மீண்டும் ஒருமுறை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைக்க முடியும்.
  • அதிலும்கூட கவனிக்கத் தவறிய விஷயங்கள் பின்பு விவாதங்களின்போது எதிர்க் கட்சிகளால் சுட்டிக்காட்டப்பட்டு, திருத்திக்கொள்ளப்பட வாய்ப்பிருக்கிறது.
  • அரசமைப்புக் கூறுகள் தவிர, நாடாளுமன்ற இரு அவைகளின் விதிமுறைகளும் சட்டமியற்றும் நடைமுறையைப் பிழையற மேற்கொள்வதற்கான வழிமுறைகளை வகுத்துள்ளன.
  • இவற்றையெல்லாம் தவிர்த்து அவசர அவசரமாகக் குரல் வாக்கெடுப்பு மூலமாகச் சட்டமியற்றுவது அவற்றின் நோக்கத்தையே சிதைப்பதாகும்.
  • விவாதிக்கப்பட்டு இயற்றப்படுவதாலேயே எந்தவொரு சட்டமும் அதற்கான தகுதியைப் பெறுகிறது. அரசாணைகளிலிருந்து சட்டங்களை வேறுபடுத்திக் காட்டுவது விவாதங்கள் தான். ஆனால், நடந்து முடிந்துள்ள மழைக்காலக் கூட்டத்தொடரில் 15 சட்ட வரைவுகள் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
  • அவற்றில் 14 சட்ட வரைவுகள் மக்களவையில் 10 நிமிடங்களுக்கும் குறைவாகவே விவாதிக்கப் பட்டுள்ளன. கடந்த 22 கூட்டத் தொடர்களில் மக்களவையிலிருந்து எந்தவொரு சட்ட வரைவும் தெரிவுக் குழுவுக்கு அனுப்பி, மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
  • உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் கருத்து நாடாளுமன்றத்தைப் பற்றியதே அல்லாமல், மத்தியில் ஆளும் பாஜகவை மட்டும் குறித்தது அல்ல. தலைமை நீதிபதியின் கருத்தை மத்திய அரசுக்கு எதிராகச் சித்தரிக்க எதிர்க் கட்சிகள் விரும்புகின்றன.
  • நாடாளுமன்றம் என்பது பெரும்பான்மை பெற்றுள்ள கட்சியை மட்டுமல்ல, எதிர்க் கட்சிகளையும் உள்ளடக்கியதே. குறிப்பிட்ட ஒரு விவகாரத்தின் முக்கியத்துவம் கருதி, அதை நாடாளுமன்ற அவைகளில் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் எதிர்க் கட்சிகள் தங்களது கோரிக்கைகளை விட்டுக்கொடுக்காமலேயே மற்ற விவாதங்களிலும் பங்கெடுப்பது குறித்துப் பரிசீலிக்க வேண்டும்.
  • அதே நேரத்தில், எதிர்க் கட்சிகளின் அமளியைக் காரணம்காட்டி உரிய விவாதங்கள் இல்லாமலும் தெரிவுக் குழுக்களின் மறு ஆய்வுகளைத் தவிர்த்தும், பெரும்பான்மையின அடிப்படையில் மட்டுமே சட்டங்களை நிறைவேற்றும் போக்கை மத்திய அரசும் கைவிட வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (18 - 08 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories