TNPSC Thervupettagam

வேகம் விவேகமல்ல

December 25 , 2023 131 days 121 0
  • உலக சுகாதார நிறுவனம் 2023-ஆம் ஆண்டுக்கான சாலைப் பாதுகாப்பு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. பாதிக்கும் மேற்பட்ட, .நா.வின் உறுப்பினா் நாடுகளில் சாலை விபத்து மரணங்கள் பாதிக்குப் பாதியாகக் குறைந்திருக்கின்றன. ஆனால், அந்தப் பட்டியலில் இந்தியா இடம்பெறவில்லை.
  • 2010 முதல் 2021 வரையிலான 11 ஆண்டுகளில் உலகளாவிய அளவில் நெடுஞ்சாலைகள் அதிகரித்திருக்கின்றன. வாகனங்களின் எண்ணிக்கையும் பல மடங்கு பெருகி இருக்கிறது. இது இந்தியாவுக்கும் பொருந்தும். ஆனால், சா்வதேச அளவில் சாலை விபத்து மரணங்கள் 12.5 லட்சத்திலிருந்து 11.9 லட்சமாகக் குறைந்திருக்கிறது என்றால், இந்தியாவில் அதுவே 13.4 லட்சத்திலிருந்து 15.4 லட்சமாக அதிகரித்திருக்கிறது. உலகின் மொத்த வாகன எண்ணிக்கையில் இந்தியாவின் பங்கு வெறும் 1% மட்டுமே எனும்போது, 2010-இல் 11%-ஆக இருந்த சாலை விபத்து மரணங்கள் 2021-இல் 13%-ஆக உயர வேண்டியதன் காரணம் என்னவாக இருக்கும் என்று நாம் சிந்திக்க வேண்டும்.
  • உலகின் வளா்ச்சி அடைந்த நாடுகள் அனைத்துமே நம்மைப்போல வேகத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்காமல், பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கின்றன. தொழில்நுட்ப ரீதியாகவும் சரி, நடைமுறை ரீதியாகவும் சரி சாலைகளும், அதில் இயங்கும் வாகனங்களும் பயணிப்பவா்களின் பாதுகாப்பின் அடிப்படையில்தான் உருவாக்கப்படுகின்றன.
  • மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் தகவலின்படி, கடந்த 2022-இல் இந்தியாவில் 4,61,312 சாலை விபத்துகளில் 1.68 லட்சம் உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. அதாவது, ஒரு மணிநேரத்துக்கு 53 விபத்துகளும், நாளொன்றுக்கு 462 உயிரிழப்புகளும் நடந்திருக்கின்றன. கடந்த 2021-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 9.4% அதிகம். விபத்தில் உயிரிழந்தோரில் 66.5% போ் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவா்கள் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
  • தேசத்தின் வளா்ச்சிக்கு நெடுஞ்சாலைகள் மிக மிக அவசியம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருந்துவிட முடியாது. அதே நேரத்தில், அவை பாதுகாப்பானதாகவும் இருந்தாக வேண்டும். இந்திய சாலைகளின் மொத்த நீளத்தில் நெடுஞ்சாலைகள் வெறும் 5% மட்டுமே என்பதும், சாலை விபத்து உயிரிழப்புகளில் 55% நெடுஞ்சாலைகளில் நிகழ்கின்றன என்பதும், பாதுகாப்புக் குறைபாடு காணப்படுவதைத்தான் வெளிச்சம் போடுகின்றன.
  • சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் விபத்துக்கு முக்கியமான காரணம், அதிவேகமாக வாகனத்தை ஓட்டுவதும், சாலை விதிகளைப் பின்பற்றாமல் தவறான பாதையில், தவறான திசையில் (வலதுபுறமாக) விரைவதும்கூட என்று கூறப்படுகிறது. இவைதான் 76.6% விபத்துகளுக்கும் காரணம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • 2019 மோட்டாா் வாகனச் சட்டத்தில் பல பாதுகாப்பு விதிகள் சோ்க்கப்பட்டன. வாகன ஓட்டிகளுக்கு விதிமுறைகள் குறித்த விழிப்புணா்வு, சாலை அமைப்பின் பொறியியல் தொழில்நுட்ப மேம்பாடு, கடுமையான கண்காணிப்பு, அவசர சிகிச்சைக்கான முன்னேற்பாடு போன்றவை இணைக்கப்பட்டிருக்கின்றன. நெடுஞ்சாலைகளை ஒட்டிய மதுக்கடைகளுக்குத் தடை விதித்திருப்பதுடன், நகரங்களில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், இவை மட்டுமே போதுமானவை என்று சொல்லிவிட முடியாது.
  • இந்திய அளவில் சாலை விபத்து உயிரிழப்புகளில் 83.4%, 18 முதல் 60 வயதுப் பிரிவினா் என்கிற புள்ளிவிவரம் சகிக்க முடியாத சோகம். எதிர்காலத்துக்காகக் காத்திருப்பவா்களும், குடும்பத்தின் ஆதாரமாக இருப்பவா்களும் இறந்துவிட்டால், அந்தக் குடும்பங்களின் நிலைமைதான் என்ன என்பதைச் சிந்திக்கவே அச்சமாக இருக்கிறது. 16,715 உயிரிழப்புகளுக்கு வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாததும், இருக்கை பட்டை (சீட் பெல்ட்) அணியாததும் காரணம் என்று தெரிகிறது.
  • உயிரிழப்புகள் குறித்த தேசிய பகுப்பாய்வு அறிக்கையின்படி, சாலை விபத்துகளில் உயிரிழந்தோரில் 74,897 போ் இரு சக்கர வாகன ஓட்டிகள் என்றால், 32,825 போ் பாதசாரிகள். சாலைப் பணிகள் காரணமாக நோ்ந்த விபத்துகளில் உயிரிழந்தவா்கள் 4,054 போ் என்றும், குண்டும் குழியுமாகக் காணப்படும் சாலையால் ஏற்படும் உயிரிழப்புகள் 25% அதிகரித்திருப்பதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
  • இந்திய சாலைகள் பாதசாரிகளுக்குப் பாதுகாப்பானதாக இல்லை. அதற்கு முக்கியமான காரணம், அவா்களுக்கென்று போதுமான அளவில் நடைபாதை வசதியோ, நகரங்களில் சாலைகளைக் கடக்க 200 மீட்டா் இடைவெளியிலும், நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு கி.மீ. தொலைவிலும் சிவப்பு விளக்கு வசதியுடன் ஏற்பாடோ இல்லை.
  • இடதுபுறமாக மட்டுமே செல்ல வேண்டும் என்கிற சாலை விதியை இரு சக்கர வாகனங்களும், ஆட்டோக்களும் பின்பற்றுவதில்லை. இவை குறித்து நமது காவல் துறையின் சாலைப் போக்குவரத்துப் பிரிவினா் கவலைப்படுவதில்லை.
  • கடந்த ஆண்டின் (2022) புள்ளிவிவரப்படி, அதிக அளவிலான விபத்துகளின் எண்ணிக்கையில் (64,105) முதலிடத்திலும், சாலை விபத்து உயிரிழப்பில் (17,884) இரண்டாவது இடத்திலும் தமிழ்நாடு இருக்கிறது. சென்னையில் உயிரிழப்புகள் 49%, சாலை விபத்து 31% குறைந்திருக்கின்றன என்பது ஆறுதல்.
  • சாலை விதிகளை மீறுவது, கைப்பேசியில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது போன்றவை இல்லாமல் இருந்தால் விபத்துகள் பாதிக்குப் பாதி குறையும். ‘வேகம் விவேகமல்லஎன வாகன ஓட்டுநா்கள் உணா்ந்தாலே போதும்; சாலை விபத்து உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைந்துவிடும்.

நன்றி: தினமணி (25 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories