TNPSC Thervupettagam

வேண்டாம் வீண் பிடிவாதம்

September 29 , 2022 567 days 373 0
  • உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல்கள் இருநூறு நாட்களைக் கடந்தும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. போரினால் உக்ரைனுக்குதான் அதிக இழப்புகள் நேர்ந்துள்ளன என்பது வெளிப்படை.
  • கல்விக்கூடங்கள், குடியிருப்புகள், தொழிலகங்கள், மருத்துவமனைகள் என்று உக்ரைனின் பல்வேறு கட்டமைப்புகளும் ரஷியப் படையினரின் குண்டுவீச்சுக்களால் பேரழிவைச் சந்தித்திருக்கின்றன. படைவீரர்கள், பொதுமக்கள் ஆகியவர்களின் உயிரிழப்பும் கணிசமாகவே இருந்திருக்கிறது.
  • அதே சமயம் ரஷியத் தரப்பிலும் பல்லாயிரக்கணக்கில் உயிரிழப்பும், ஊனமும் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன. ரஷியப் படையினர் சிலர் உக்ரைன் ராணுவத்தினரிடம் சரணடைந்ததும் நடந்தேறியுள்ளது.
  • முந்தைய ஒருங்கிணைந்த சோவியத் சோஷலிசக் குடியரசின் அங்கமாக விளங்கிய உக்ரைனின் மீது தாக்குதல் நடத்துவதில் ரஷியக் குடிமக்களில் பலருக்கும் விருப்பம் இல்லை என்றும், ரஷியத் துருப்புகளுக்கே கூட உக்ரைனுடன் போரிடுவதில் தயக்கம் இருந்தது என்றும் செய்திகள் ஊடகங்களில் உலாவந்தன.
  • எது எப்படியாயினும் அணு ஆயுத பலம் கொண்ட மாபெரும் வல்லரசாகிய ரஷியா உக்ரைனுடனான இந்தப் போரில், தான் எதிர்பார்த்த வெற்றியை அடையமுடியவில்லை என்பதே உண்மை நிலையாகும்.
  • இது மட்டுமின்றி, அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகள் பலவும் ரஷியாவை பொருளாதார ரீதியாக முடக்குவதற்காகப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. பெட்ரோலியப் பொருட்கள் உள்ளிட்டவற்றை ரஷியாவிடமிருந்து இறக்குமதி செய்வதை அந்நாடுகள் நிறுத்திக்கொண்டு விட்டதால் ரஷியப் பொருளாதாரம் பெரிய அளவில் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
  • உக்ரைன் மீதான போரின் காரணமாக உலக அளவிலான விளையாட்டு அமைப்புகளிலிருந்து ரஷியா விலக்கி வைக்கப்பட்டது. மேலும், சமீபத்தில் மறைந்த இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குகளில் பங்குபெற ரஷிய அதிபர் அழைக்கப்படாததும் உக்ரைன் மீதான ரஷியாவின் வல்லாதிக்கத்தை யாரும் விரும்பவில்லை என்பதையே வெளிப்படுத்துகின்றது.
  • இப்படியாக, உக்ரைன் போர்முனை, பொருளாதாரம், பன்னாட்டு உறவுகள், சொந்தநாட்டுக் குடிமக்களின் ஆதரவு ஆகிய பல துறைகளிலும் ரஷிய அதிபர் புதினின் நடவடிக்கைகள் தோல்வியைச் சந்தித்திருக்கின்றன என்றுதான் கூறவேண்டும்.
  • போதாக்குறைக்கு உக்ரைனிலுள்ள ஜபோரிஜ்ஜியா அணுமின் நிலையம் அருகில் ரஷியப் படைகள் நிறுத்தப்பட்டிருப்பதாலும், அப்பகுதியில் அவ்வப்போது ஏவுகணை வீச்சுகள் நடப்பதாலும் அணுக்கதிர்கள் கசிய வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
  • மேலும், உக்ரைன் மீதான தனது வெற்றிக்கு மேற்கத்திய நாடுகள் தடையாக இருப்பதாகக் கருதும் ரஷிய அதிபர் புதின், தமது நாட்டின் பாதுகாப்பினை உறுதி செய்திட, அணு ஆயுதப் போருக்கும் தயார் என்று அறிவித்துள்ளது உலக நாடுகளைப் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. ஐ.நா. சபையின் பொதுச்செயலர் உள்ளிட்ட பல்வேறு உலகத் தலைவர்களும் இதற்குக் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். ஆனால், ரஷிய அதிபர் புதின் இந்தக் கண்டனங்களையெல்லாம் கண்டுகொள்ளாமல், உக்ரைன் போரை மேலும் தீவிரப் படுத்துவதற்கான செயல்பாடுகளில் முனைப்பினைக் காட்டி வருகின்றார்.
  • உக்ரைனில் போரிடும் ரஷியப் படைபலத்தினை அதிகப்படுத்துவதற்காக, முன்னாள் குற்றவாளிகளுக்கு ஆயுதப் பயிற்சி அளித்து அவர்களைப் போர்முனைக்கு அனுப்பப் போவதாகச் செய்திகள் வருகின்றன. அக்குற்றவாளிகளுக்கு அதிபரின் பொது மன்னிப்பும் மாதம் ஒரு லட்சம் ரூபிள் சம்பளமும் வழங்கப்படுமாம்.
  • இத்துடன் நிற்கவில்லை. போரிடும் உடல்தகுதியுள்ள பத்துலட்சம் ரஷியர்களை ராணுவப் பணியில் கட்டாயமாகச் சேர்க்கப் போவதாகவும் அந்நாட்டு நிர்வாகம் அறிவித்தது. அதையடுத்து, போரில் பேங்கேற்க விரும்பாத பல்லாயிரக்கணக்கான ரஷிய ஆண்கள் விசா இல்லாமல் செல்லக்கூடிய வெளிநாடுகளை நோக்கி விமானங்களில் பயணிக்கத் தொடங்கினார்கள். இதனைத் தொடர்ந்து அறுபத்தைந்து வயது வரையிலான ரஷிய ஆண்மகன்களுக்கு விமான டிக்கெட்டுகள் வழங்கக் கூடாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறதாம்.
  • விமானம் இல்லாவிட்டால் என்ன, சாலை மார்க்கமாக நமது அண்டை நாடுகளுக்காவது சென்றுவிடுவோம் என்று ஆயிரக்கணக்கிலான கார்கள், வேன்களில் ரஷியக் குடிமகன்கள் ஜார்ஜியா உள்ளிட்ட அண்டை நாடுகளை நோக்கிச் செல்வதாகவும், அவர்களையும் ரஷியாவை விட்டு வெளியேற விடாமல் தடுக்கும் முயற்சியில் ரஷிய நிர்வாகம் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன.
  • இவற்றையெல்லாம் தாண்டி, உக்ரைன் படையினருடன் சண்டையில் ஈடுபட்டு உயிர்துறப்பதற்கு பதிலாகச் சரணடையும் ரஷிய வீரர்கள் இனம் காணப்பட்டுக் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்ற ரஷிய அதிபர் புதினின் வெளிப்படையான அறிவிப்பும் ரஷியப் படையினரின் தன்னம்பிக்கையை வெகுவாகக் குலைக்கும் என்பதில் ஐயமில்லை.
  • காரணம் எதுவாக இருப்பினும், தகுந்த முன் யோசனை இன்றி ஒரு போரினை உக்ரைன் மீது ரஷியா தொடங்கி விட்டுத் தற்பொழுது அதிலிருந்து பின்வாங்க முடியாமல் தவிப்பதாகவே தோன்றுகின்றது. மேலும், சற்றும் பொறுப்பில்லாத அணுஆயுதப் பிரயோக மிரட்டல்களால் உலக நாடுகளிடையே தனிமைப்பட்டு நிற்க வேண்டிய சூழ்நிலையும் அதற்கு ஏற்பட்டுள்ளது.
  • இத்தகைய சூழலில், உக்ரைனை வெற்றிகொள்வதை ஒரு கெளரவ பிரச்னையாகக் கருதுவதை ரஷியா உடனடியாகக் கைவிட்டுவிட்டுத் தனது படைகளைத் திரும்பப் பெறவேண்டும். மேலும், போரினால் சீழிந்துள்ள உக்ரைனை மறுசீரமைப்பதற்கும் பெருந்தன்மையுடன் உதவிட முன்வரவேண்டும்.
  • இவ்விரண்டு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் சிந்தனைத் தெளிவும், மனத்திட்பமும் ரஷிய அதிபர் புதினுக்கு வாய்க்குமெனில் இந்த உலகமே அதனை வரவேற்றுக் கொண்டாடும் என்பதில் ஐயமில்லை.

நன்றி: தினமணி (29 – 09 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories