TNPSC Thervupettagam

வேலையாட்கள் இல்லாத கடைகளுக்குத் தயாராகிறோமா

November 21 , 2021 910 days 524 0
  • எந்தத் துறையைச் சார்ந்தவர்களுக்கும் இணையான குறைந்தபட்ச வாழ்வூதியத்தை நிர்ணயிப்பது சமூகநீதியை அடையும் வழிமுறைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது - வளர்ந்த நாடுகளில். அப்படிக் கொடுக்காத நிறுவனங்கள் - முதலாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதும் உண்டு. இந்தியாவிலும் இத்தகு சூழல் உருவாக்கப்படுவது அவசியம்.
  • அதேசமயம், இப்படியான நிர்ணயங்களில் நாட்டில் உள்ள எல்லாத் துறை சார்ந்தவர்களையும் கலந்தாலோசிப்பது முக்கியம். இல்லாவிட்டால் என்னவாகும் என்பதற்கு தென் கொரியாவில் இன்று உருவாகிவரும் ரோபோட் கடைகள் உதாரணம் ஆகிவருகின்றன. 'கொரியா ஹெரால்டு' நாளிதழில் பத்திரிகையாளர்  யிம் ஹுன்-சு (Yim Hyun-su) எழுதியிருக்கும் கட்டுரையின் சாராம்சம் இதுதான்; அறிவியல் தொழில்நுட்பம் எப்படி வேலைவாய்ப்புகளை ஒழித்துக்கட்டும் சாத்தியங்களையும் கொண்டிருக்கிறது என்பதைத் தெரிவிக்கிறது. 
  • தென் கொரியாவில் வேலை ஆட்கள் இல்லாமல், ரோபோட்டுகளால் இயக்கப்படும் கடைகள் பெருகிவருகின்றன. தற்போது அங்கு பெரும்பாலான காபி, ஐஸ்கிரீம், தின்பண்டக் கடைகள், லாண்டரிகள் வேலை ஆட்கள் இல்லாமல் 24 மணி நேரமும் சேவையளிக்கின்றன.
  • தென்கொரியாவின் தலைநகர் சியோல் நகரில் மட்டும் 5,700 கடைகள் ரோபோட்டுகள் கொண்டு நடத்தப்படுகின்றன. முழுக்கவும் ரோபாட்டுகளை பயன்படுத்த முடியாத பெரிய கடைகள், ஆட்குறைப்பை மேற்கொண்டு, குறைவான ஊழியர்கள் மற்றும் ரோபோட்டுகளின் உதவியுடன் இயங்கத் தொடங்கியுள்ளன. இவ்வாறாக, மனிதர்கள் மற்றும் ரோபோட்டுகள் இணைந்து வேலைச் செய்யும் கடைகள் சியோலில் 1,700 உள்ளன. மனிதர்கள்ரோபோக்கள் இணைந்து செயல்படும் கடைகள் எண்ணிக்கை தென் கொரியாவில் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன.

என்ன காரணம்?

  • 2018-ம் ஆண்டில் தென் கொரிய அரசு, தொழிலாளர்களின் நலன் கருதி குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தைக் கொண்டுவந்தது. அதன்படி, ஊதிய அளவு முன்பு இருந்ததை 16.4% உயர்த்தப்பட்டது. தொழிலாளர்களுக்கு ஆறுதலாக அமைந்த இந்த அறிவிப்பு, முதலாளிகளுக்கு நெருக்கடியாக மாறியது.
  • ஏனென்றால், பெரு நிறுவனங்கள் மட்டுமல்ல, சிறு தொழில்களில் ஈடுபடுபவர்களும் அவர்களின் ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியத்தை வழங்கியாக வேண்டும். இதனால் சிறிய கடைகள் வைத்திருப்பவர்களில் பலர், வேலைகளுக்கு ஆள் வைப்பதைவிட ரோபோட்டுகளை வைப்பது நலம் என்ற முடிவுக்கு நகர்ந்தார்கள். அதனுடைய விளைவுதான் தென்கொரியாவில் அதிகரித்துவரும் ரோபோட் கடைகள்.
  • சியோல் நகரில் சிறிய கடைகள் வைத்திருப்பவர்களில் 87% பேர், கடை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை அடுத்த ஆண்டு மேலும் உயர்த்தினால் கடைகளை மூடுவதைத் தவிர தங்களுக்குக் கட்டுப்படியாகாது என்கின்றனர்.

தொழில்நுட்பத்துடன் மனிதவுழைப்பு மல்லுக்கு நிற்க முடியுமா?

  • ஊதிய உயர்வு தாண்டி, அங்கு சிறிய கடைகள் ரோபோட்டுகளைக் கொண்டு நடத்தப்படுவதற்க்கு வேறொரு காரணமும் இருக்கிறது. தென் கொரியாவில் பலர் காலையில் ஒரு வேலை, மாலையில் ஒரு வேலை என ஓடிக்கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, முப்பது - நாற்பதுகளில் இருக்கும் பெண்கள்.
  • இத்தகையோருக்கு நினைத்த நேரத்தில் சாப்பிட, ரோபோட்டுகளால் இயக்கப்படும் 24 மணி நேரக் கடைகள் உதவுகின்றன. அதேபோல், தென் கொரியாவில் பத்துக்கு ஆறு குடும்பங்களில் ஒருவர் அல்லது இருவர் மட்டும்தான் இருக்கின்றனர். இப்படி தனியாக இருப்பவர்கள் சாப்பிடுவதற்கு, துணிகளைத் துவைக்க, தேய்க்க  இந்தக் கடைகள் உதவுகின்றன.  தோய்த்த துணிகளைத் தாங்களே எடுத்துவந்து அயர்ன் செய்துகொள்ளும்ரோபோட் லாண்டிரிகள் 4,252ஆக அதிகரித்துள்ளது. அவற்றின் வருவாய் 11,290 கோடி வோனாக உயர்ந்திருக்கிறது.

தொழில்நுட்பம் சவால் ஆகிறதா  வேலையா?

  • மனிதர்களின் வேலைகளை இயந்திரங்கள் ஆக்கிரமிப்பது உலகம் எதிர்கொண்டிருக்கும் சவால்களில் ஒன்று. துல்லியமாகவும், மனிதர்களைவிடத் திறன்மிக்கதாகவும், நேரம் காலம் பாராமல் இயங்கக்கூடியதாகவும் ரோபோட்டுகள் இருப்பதால் உலகளாவிய அளவில் கார் தயாரிப்புத்துறை உட்பட பல்வேறு தயாரிப்புத் துறைகளில் ரோபோட்டுகளின் வருகை அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.
  • தற்போது நாம் செயற்கைத் தொழில்நுட்பங்களின் காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஓட்டுநர் இல்லாத கார்கள் நடைமுறைக்கு வரும் காலம் வெகு சமீபத்தில் உள்ளது. மருத்துவர் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்யும் ரோபோக்கள் குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இவையெல்லாம், அறிவியலில் மனிதன் தொடும் உச்சங்களின் வெளிப்பாடுகள்.
  • எல்லாக் காலத்திலும் இத்தகைய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. நீராவி இயந்திரம் அப்படியான ஒன்றுதான், கணினி அப்படியான ஒன்றுதான். இவை வேலைகளை அழித்தன என்று கூறிவிட முடியுமா? புதிய தொழில்நுட்பங்களின் வருகை புதிய தளத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளன. அந்த வகையில் செயற்கைத் தொழில்நுட்பங்கள் புதிய தளத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரக்கூடும்.
  • எனினும், உலக நாடுகள், செயற்கைத் தொழில்நுட்பங்களின் அதீதப் பாய்ச்சலை கவலையோடுதான் பார்த்துக்கொண்டிருக்கின்றன. செயற்கைத் தொழில்நுட்பங்கள் வேலைசார் கட்டமைப்பை பெரும் மாற்றத்துக்கு உள்ளாக்கிவருகின்றன. குறைந்தத் திறன் தேவைப்படும் வேலைகளை இயந்திரங்கள் வேகமாக ஆக்கிரமித்துவருகின்றன.
  • ஆனால், வேலை இழப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவதற்கான வழிகள் இன்னும் கண்டறியப்படவில்லை. ஒருவர் வேலையிழப்பது என்பது அவருடைய தனிப்பட்ட பிரச்சினை மட்டுமல்ல, அது அவரது நாட்டிற்கும் நெருக்கடி ஏற்படுத்தக்கூடியது. இந்நிலையில் மனிதர்களின் வேலைகளை இயந்திரங்கள் ஆக்கிரமிப்பதைத் தள்ளிப்போடும் வழிமுறைகளை அரசுகள் சிந்திக்கத் தொடங்கியுள்ளன.  
  • இந்தச் சூழலில், தென் கொரியாவின் வேலைச்சூழல் கவனிக்கப்பட வேண்டியதாகிறது. அங்கு நிகழ்ந்துவரும் மாற்றம், ஊழியர்களின் ஊதியத்தை முதன்மைக் காரணமாகக் கொண்டிருக்கிறது. எனில், தற்போதைய காலகட்டத்தில் வேலைகளில் ரோபோட்டுகளைக் கொண்டு மனிதர்களைப் பதிலீடு செய்யவதை எப்படித் தடுப்பது? ஊதியம் தொடர்பான கறாரான கொள்கைகளைக் கொண்டிருப்பதா அல்லது குறைந்த ஊதியமாக இருந்தாலும் பரவாயில்லை, மனிதர்களுக்கான வேலையை உறுதி செய்வதா?

நன்றி: அருஞ்சொல் (21 – 11 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories