அயோத்தி ராம ஜென்மபூமி - பாபர் மசூதி நிலத் தகராறு வழக்கு
November 11 , 2019 2096 days 920 0
இந்திய உச்ச நீதிமன்றமானது அயோத்தி சர்ச்சையின் இறுதித் தீர்ப்பை 2019 ஆம் ஆண்டு நவம்பர் 9 அன்று அறிவித்தது.
இந்தியத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான உச்ச நீதிமன்ற அரசியலமைப்பு அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
இந்த அமர்வில் எஸ்.ஏ.போப்டே, அசோக் பூஷண், டி.ஒய் சந்திரசூட் மற்றும் எஸ் அப்துல் நசீர் ஆகியோர் அடங்குவர்.
இது ஒரு ஏக மனதான தீர்ப்பாகும்.
2010 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தொடுக்கப்பட்ட பதினான்கு மேல்முறையீடுகளை உச்ச நீதிமன்றம் விசாரித்தது.
அயோத்தியில் உள்ள 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகியவற்றுக்குச் சமமாகப் பிரித்து வழங்க அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மார்ச் 8 ஆம் தேதி உச்ச நீதிமன்றமானது ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எஃப்.எம்.ஐ கலிஃபுல்லா தலைமையில் ‘வாழும் கலை அமைப்பின்’ நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மற்றும் மூத்த மதராஸ் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட குழுவை அயோத்தி நிலத் தகராறுக்கு தீர்வு காண மத்தியஸ்தம் செய்ய அமைத்தது.
தீர்ப்பு
உச்ச நீதிமன்றமானது ஒட்டு மொத்த சர்ச்சைக்குரிய நிலத்தையும் ராம் லல்லாவுக்கு ராம் ஜென்மபூமி நிலையம் அமைப்பதற்கு என்று வழங்கியுள்ளது.
உச்ச நீதிமன்றமானது தெய்வம் ராம் லல்லாவை ஒரு முறையான உரிமையுடைய சட்ட ஆளுமை என்று அங்கீகரித்துள்ளது.
ஆனால் ராம் ஜென்ம பூமி என்பது ஒரு சட்ட உரிமை கொண்ட ஆளுமை அல்ல.
அந்த இடத்தில் மூன்று மாதங்களுக்குள் ஒரு கோயில் கட்டுவதற்கும் அதற்காக ஒரு அறக்கட்டளையை உருவாக்குவதற்கும் இந்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்காலிகமாக இந்திய அரசுக்குச் சொந்தமாக உள்ள அந்த சர்ச்சைக்குரிய நிலமானது அறங்காவலர் குழு அமைக்கப்பட்ட பின்னர் அதன் உரிமை அறக்கட்டளைக்கு மாற்றப்படும்.
மேலும் உச்ச நீதிமன்றமானது சன்னி வக்பு வாரியத்திற்கு மசூதி கட்டுவதற்கு என்று மாற்று 5 ஏக்கர் நிலத்தை வழங்கவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டு சர்ச்சைக்குரிய நிலத்தைப் பிரிப்பது தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தவறானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
1992 ஆம் ஆண்டு பாபர் மசூதியை இடித்ததும், 1949 ஆம் ஆண்டு பாபர் மசூதியை இழிவுபடுத்தியதும் சட்டத்தை மீறிய செயல்கள் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பாபர் மசூதியானது ஒரு இஸ்லாமிய முறை அல்லாத கட்டமைப்பில் கட்டப்பட்டது என்பதை இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையின் தொல்பொருள் சான்றுகள் காட்டுகின்றன என்று நீதிமன்றம் கூறியது.
உத்தரப் பிரதேச சன்னி வக்பு வாரியம் உள்ளிட்ட முஸ்லீம் தரப்பினர் சர்ச்சைக்குரிய நிலத்தினைப் பிரத்தியேகமாக தங்கள் சொத்து என்று நிரூபிப்பதில் தவறியுள்ளதாக நீதிமன்றம் கூறியது.
இந்துக்களின் தெய்வமான ராமரின் பிறப்பிடம் என நம்பிக்கையுடன் மசூதிக்குள் இந்துக்கள் தொடர்ந்து வழிபட்டு வந்தனர் என்பதை நிரூபிக்க இந்துக் கட்சிகள் சிறந்த சான்றுகளை அளித்தன என்றும் அது கூறியது.
1856-57 ஆம் ஆண்டில் இரும்பு ரெயில்கள் அமைத்ததினால் மசூதியின் உள் முற்றமானது வெளிப்புற முற்றத்தில் இருந்து பிரிக்கப் பட்டது என்றும், இந்துக்கள் வெளிப்புற முற்றத்தைப் பிரத்தியேகமாக வைத்திருக்கிறார்கள் என்றும் நீதிமன்றம் மேற்கோளிட்டுள்ளது.
இதற்கு முன்பே, மசூதியின் உள் முற்றத்தில் இந்துக்கள் வழிபட்டு வந்திருப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியது.
இந்திய அரசாங்கத்தால் உருவாக்கப்படும் அறங்காவலர் குழுவில் நிர்மோஹி அகாராவுக்குப் பொருத்தமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பாபர் மசூதியின் உரிமைக்காக சன்னி வக்பு வாரியத்திற்கு எதிராக ஷியா வக்பு வாரியம் கூறிய கூற்றை நீதிமன்றம் நிராகரித்தது.
ராம் லல்லா விராஜ்மானுக்கு ஆதரவாக தீர்ப்பைப் பெறுவதில் கே.பராசரன் முக்கியப் பங்கு வகித்தார்.
1976 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஆட்சியின் போது தமிழகத்தின் தலைமை வழக்கறிஞராகவும் பின்னர் 1983 முதல் 1989 வரை இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தியின் ஆட்சியில் இந்தியத் தலைமை வழக்கறிஞராகவும் அவர் இருந்தார்.