2026 ஆம் ஆண்டிற்கான அரசியலமைப்பு (131வது திருத்த) மசோதா, 251 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு மற்றும் 185 பேரின் எதிர்ப்புடன் வாக்கெடுப்புக்குப் பிறகு, 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இது மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் மேக்வாலால், தொகுதி மறுசீரமைப்பு மசோதா, 2026 மற்றும் ஒன்றியப் பிரதேசச் சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2026 ஆகியவற்றுடன் இணைக்கப்பட்ட ஒரு தொகுப்பாக அறிமுகப்படுத்தப் பட்ட நிலையில் மற்ற இரு மசோதாக்களும் இந்தத் திருத்தத்தையே சார்ந்துள்ளன.
இம்மசோதா அரசியலமைப்பின் 81, 82, 170, 332 மற்றும் 334A ஆகிய சரத்துகளில் திருத்தங்களை மேற்கொள்ள முன்மொழிகிறது.
இது மக்களவையின் பலத்தை அதிகபட்சமாக 850 உறுப்பினர்களாக உயர்த்த இலக்கு வைத்துள்ளது; இதில் மாநிலங்களில் இருந்து 815 வரையிலும் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் இருந்து 35 வரையிலும் அடங்கும்.
முன்னதாக, சரத்து 81 ஆனது மக்கள்தொகையின் அடிப்படையில் மக்களவையின் பலத்தை மாநிலங்களில் இருந்து 530 உறுப்பினர்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் இருந்து 20 உறுப்பினர்கள் என வரம்பிற்குள் வைத்திருந்தது.
1976 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த, மக்கள்தொகை அடிப்படையிலான இட மறுசீரமைப்பு மீதான நீண்டகாலத் தடையை இது நீக்குகிறது.
2026 ஆம் ஆண்டிற்குப் பிறகு வரும் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்புக்காகக் காத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை நீக்குவதன் மூலம், தொகுதி மறு சீரமைப்பை உடனடியாக மேற்கொள்ள இது அனுமதிக்கிறது.
இட ஒதுக்கீட்டிற்கான மக்கள்தொகை, நாடாளுமன்றத்தால் தீர்மானிக்கப்படும் ஒரு மக்கள்தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டது என இது கூறுகிறது.
தொகுதி மறுசீரமைப்புப் பொறுப்பை நாடாளுமன்றத்தின் முடிவிற்கு விடுவதற்குப் பதிலாக, மறுசீரமைப்பு ஆணையத்திடம் இது தெளிவாக வழங்குகிறது.
அரசியலமைப்பின் 170-வது சரத்தின் கீழ் மாநிலச் சட்டமன்றங்களில் புதிய இட மறு சீரமைப்பு மற்றும் தொகுதிகளை மறுவரையறை செய்ய இது வழி வகை செய்கிறது.
2026 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு தொகுதி மறுசீரமைப்பை ஒத்தி வைத்த சரத்து 170-இன் மூன்றாவது நிபந்தனையை இது நீக்குகிறது.
மாநிலங்களுக்குள் உள்ள தொகுதி எல்லைகள் புதுப்பிக்கப்பட்ட மக்கள்தொகை தரவுகளின் அடிப்படையில் மறுவரையறை செய்யப்படுவதை இது உறுதி செய்கிறது.
தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு உடனடியாக மக்களவை மற்றும் மாநிலச் சட்ட மன்றங்களில் பெண்களுக்கான மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்த இது உதவுகிறது.
2023 ஆம் ஆண்டின் 106வது திருத்தச் சட்டத்தால் கொண்டுவரப்பட்ட தாமத நிபந்தனையை நீக்க, சரத்து 334A-ஐ இது திருத்துகிறது.
நாடாளுமன்றத்தால் நீட்டிக்கப்படா விட்டால், 106வது திருத்தம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து 15 ஆண்டுகளுக்குப் பெண்களுக்கான இடஒதுக்கீடு தொடரும் என்று இது கூறுகிறது.
எதிர்காலத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் பெண்களுக்கான ஒதுக்கப்பட்ட தொகுதிகள் சுழற்சி முறையில் வருவதை இது உறுதி செய்கிறது.
மாநிலச் சட்டமன்றங்களில் பட்டியலிடப்பட்ட பழங்குடியினரின் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க இது பாதுகாப்புகளை வழங்குகிறது.
குறிப்பாக அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, மிசோரம், திரிபுரா மற்றும் நாகாலாந்து போன்ற வடகிழக்கு மாநிலங்களில் பழங்குடியினருக்கான இடங்கள் குறைக்கப் படாமல் இருப்பதை உறுதி செய்ய இது சரத்து 332-ஐ திருத்துகிறது.