2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் எகிப்து நாட்டின் அதிபர் அப்தெல் ஃபத்தா அல் சிசி அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு குடியரசு தின விழா கொண்டாட்டங்களுக்கான விருந்தினர்களுக்கான திட்டங்கள் ரத்து செய்யப் பட்டதால், 2020 ஆண்டிற்குப் பிறகு வருகை தரும் முதல் விருந்தினர் திரு. சிசி ஆவார்.
எகிப்து அரபுக் குடியரசின் அதிபர் நமது குடியரசு தினத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும்.
இரு நாடுகளும் இந்த ஆண்டு தனது அரசு முறை உறவுகள் நிறுவப்பட்டதன் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றன.
மேலும், 2022-23 ஆம் ஆண்டில் G-20 அமைப்பின் தலைமைப் பதவிக் காலத்தின் போது எகிப்து 'விருந்தினர் நாடாக' பங்கேற்பதற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்தியாவின் நட்பு நாடுகளின் தலைவர்கள் 1950 ஆம் ஆண்டு முதல் குடியரசு தின விழாவில் பங்கேற்று விழாவினைச் சிறப்பித்து வருகின்றனர்.
முதலாவதாக, இந்தோனேசிய அதிபர் சுகர்னோ 1950 ஆம் ஆண்டில் முதல் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார்.
1952, 1953 மற்றும் 1966 ஆம் ஆண்டுகளில், குடியரசு தின விழாக்களில் வெளிநாட்டுத் தலைவர் சிறப்பு விருந்தினர்களாக இல்லாமல் நடத்தப்பட்டது.
முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா (2015), ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (2007) ஆகியோர் கடந்த காலத்தில் சிறப்பு விருந்தினர்களாக வருகை புரிந்துள்ளனர்.
2020 ஆம் ஆண்டில், அப்போதையப் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.