பெண் ராணுவ அதிகாரிகள் நிரந்தர ஆணையத்திற்கு தகுதியானவர்கள் – இந்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு
February 22 , 2020 1905 days 478 0
சமீபத்தில், ஒரு முக்கிய தீர்ப்பில், இந்திய உச்ச நீதிமன்றமானது ஆண் ராணுவ அதிகாரிகளுக்கு இணையாக பெண் ராணுவ அதிகாரிகளுக்கும் நிரந்தர ஆணையத்தை வழங்க வேண்டும் என்ற 2010 ஆம் ஆண்டின் தில்லி உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்துள்ளது.
பெண் ராணுவ அதிகாரிகள் போர் அல்லாத பகுதிகளில் கட்டுப்பாட்டகப் பதவிகளுக்குத் தகுதி உடையவர்களாவர்.
பெண் அதிகாரிகள் தங்களது ஆண் சகாக்களைப் போன்றே தகுதியின் அடிப்படையில் கர்னல் மற்றும் அதற்கு மேற்பட்ட பதவிக்கு உயர முடியும்.
இந்தத் தீர்ப்பானது இந்திய அரசியலமைப்பில் சமத்துவத்திற்கான உரிமையை உறுதி செய்துள்ளது.
பின்னணி:
இராணுவத்தில் பெண் அதிகாரிகளைச் சேர்த்தலானது 1992 ஆம் ஆண்டில் தொடங்கியது.
பெண்கள் சிறப்பு நுழைவுத் திட்டத்தின் (WSES - Women Special Entry Scheme) கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகளில் (துறைகளில்) பெண்கள் ஐந்து ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டனர்.
2006 ஆம் ஆண்டில், WSES ஆனது குறுகிய காலப் பணி ஆணையத் திட்டத்தால் (SSC - Short Service Commission) மாற்றப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ், பெண்கள் 10 ஆண்டுகள் வரை இராணுவத்தில் நியமிக்கப் பட்டனர். இவர்களுக்கு 14 (10 + 4) ஆண்டுகள் வரை பணி நீட்டிப்பு வழங்க முடியும்.
எனவே, பெண் அதிகாரிகள் எந்தவொரு கட்டுப்பாட்டக நியமனத்திலும் இருந்து விலக்கி வைக்கப்பட்டனர். மேலும் ஒரு அதிகாரியாக 20 ஆண்டுகள் சேவை செய்த பின்னர் மட்டுமே தொடங்கும் அரசு ஓய்வூதியத்திற்கு இவர்களால் தகுதி பெற முடியவில்லை.