இந்திய உச்ச நீதிமன்றமானது ரபேல் ஒப்பந்தம் குறித்த பல ஆவணங்கள் திருடப்பட்டவையாக இருப்பதால் அது குறித்து நீதிமன்றங்களினால் விசாரணை செய்யக்கூடாது என்ற வாதங்களைத் தள்ளுபடி செய்துள்ளது.
பிரெஞ்சு உற்பத்தியாளரான டசால்ட் நிறுவனத்துடன் 136 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக பல ஆண்டுகளாக தொழில்நுட்ப விவாதங்கள் மற்றும் சமரச முயற்சிகள் நிகழ்ந்த போதிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பேச்சு வார்த்தைகளைக் கைவிட 2015 ஆம் ஆண்டில் பிரதமர் முடிவு செய்தார்.
இவர் முந்தையதிலிருந்து முற்றிலும் வேறுபட்ட 36 ரபேல் போர் விமானங்களை மட்டுமே வாங்குவதற்காக ஒரு புதிய அரசுகளுக்கிடையேயான ஒரு ஒப்பந்தத்தை அறிவித்தார்.
பல மனுதாரர்கள் இந்த ஒப்பந்தம் குறித்து இந்திய உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் 2018 ஆம் ஆண்டில் இந்திய உச்ச நீதிமன்றமானது இதில் தலையிடுவதில்லை என்று முடிவு செய்து மனுக்களை தள்ளுபடி செய்தது.
2019 ஆம் ஆண்டில், தி இந்து நாளிதழைச் சேர்ந்த என். இராம் என்பவர் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் கோப்புகளை வெளியிட்டார். அவையாவன
பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் சமரசக் குழுவானது பிரதம அமைச்சரக அலுவலகம் டசால்ட் நிறுவனத்துடன் தனிப்பட்ட சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக புகார் தெரிவித்தது.
இந்த தனிப்பட்ட பேச்சுவார்த்தைகளானது இந்தியாவின் நிலையை வலுவிழக்கச் செய்தது. இது ஒரு சிறந்த ஒப்பந்தத்தைத் தடை செய்தது.
வங்கி உத்தரவாதங்கள் மற்றும் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் போன்ற இந்தியாவிற்கான தரநிலைகளுக்கான பகுதிகளைப் பிரெஞ்சு அரசு நீக்க அனுமதிக்கப்பட்டது.
2018 ஆம் ஆண்டில் தள்ளுபடி செய்யப்பட்ட இந்த வழக்கின் மனுதாரர், தி இந்து நாளிதழின் ஆவணங்களின் அடிப்படையில் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகி சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தார்.
இந்திய அரசானது இந்த ஆவணங்கள் திருடப்பட்டவை என்றும் பிரதி எடுக்கப்பட்டவை என்றும் இது குறித்து மேலும் விசாரணை மேற்கொண்டால் தேசப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் உச்சநீதிமன்றத்திடம் வாதிட்டது.
இந்திய உச்ச நீதிமன்றம் இந்த வாதங்களை முற்றிலும் தள்ளுபடி செய்து அதனை மீண்டும் சீராய்விற்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்தது. தி இந்து நாளிதழ் வெளியிட்ட சான்றுகளின் நம்பகத் தன்மையையும் ஒப்புதலையும் உச்ச நீதிமன்றம் சரிபார்த்தது.