சர்வதேச வாகனத் தொழில்நுட்ப மையமானது (ICAT) 15 மீட்டர் பல அச்சு படுக்கை வசதி கொண்ட பேருந்துக்கான முதல் இணக்கச் சான்றிதழை வழங்கியுள்ளது.
லடாக்கின் கார்கிலில் உள்ள சுரு பள்ளத்தாக்கில் நடைபெறும் சுரு கோடைகாலத் திருவிழாவானது, அப்பகுதியின் இயற்கை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்தி, சுற்றுச்சூழல் மற்றும் நிலையான சுற்றுலாவை மேம்படுத்துகிறது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமானது (DRDO), லே மாவட்டத்தில் உள்ள உலகின் மிக உயரமான இறங்கு தளங்களில் ஒன்றான நியோமா-முத் இறங்கு தளத்தில் (Nyoma-Mudh Drop Zone) 22,000 அடி உயரத்தில் மற்றும் −15°C வெப்பநிலையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ராணுவ போர் பாராசூட் அமைப்பை (MCPS) வெற்றிகரமாக சோதித்தது.
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவ மனையில் உலகின் முதல் 'பின்ஹோல் பியூபில்லோபிளாஸ்டி' (Pinhole Pupilloplasty) மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.
பின்ஹோல் பியூபில்லோபிளாஸ்டி/ஊசித்துளை கண்மணி சீரமைப்பு (PPP) என்பது டாக்டர் அமர் அகர்வால் உருவாக்கிய நுண்சிகிச்சை தொழில்நுட்பமாகும்; இது கருவிழித் தழும்புகள், ஒழுங்கற்ற கருவிழிகள் உள்ளிட்ட பார்வைப் பிரச்சினைகள் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நோயாளிகளின் பார்வையை மேம்படுத்த உதவுகிறது.
நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான குளோர்பெனிரமைன் மாலேட் மற்றும் பினைலெப்ரின் ஹைட்ரோகுளோரைடு கொண்ட நிலையான அளவு கலவை (FDC) மருந்துகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகத்தை அரசு கட்டுப்படுத்தி உள்ளது.
இந்தக் கலவைகள் சிறு குழந்தைகளுக்கு உடல்நல அபாயங்களை ஏற்படுத்தக் கூடும் என்பதோடு, இதற்கு பாதுகாப்பான மாற்று மருந்துகள் உள்ளன என்றும் அரசு தெரிவித்துள்ளது.
நீர் ஒத்துழைப்பு, அமைதி மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 முதல் 27 வரை உலக நீர் வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு Water for People & Progress என்பதாகும்.