ஈரோடு மாவட்டத்தில் உள்ள எலத்தூர் ஏரி, தமிழ்நாட்டின் மூன்றாவது பல் வகைமை கொண்ட பாரம்பரியத் தளமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
37.42 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ள இந்த ஏரியானது, 2002 ஆம் ஆண்டு உயிரியல் பன்முகத்தன்மை சட்டத்தின் 37(1) என்ற பிரிவின் கீழ் பாதுகாக்கப்படுகிறது.
எலத்தூர் ஏரியானது, வலசை போகும் மற்றும் அங்கேயே காணப்படும் பறவைகள் உட்பட 187 வகையான பறவைகளை ஆதரிக்கிறது.
உச்சகட்ட வலசை போகும் பருவங்களில் 5,000 பறவைகள் வரை இந்த ஏரியில் கூடுகின்றன.
புல்வெளிக் கழுகு (ஸ்டெப்பி கழுகு) போன்ற அருகி வரும் இனங்கள் மற்றும் ஆற்று ஆலா மற்றும் பெரும்புள்ளிக் கழுகு போன்ற எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனங்கள் இங்கு காணப்படுகின்றன.
இந்த இடமானது, ஆசிய வெண்கழுத்து நாரை மற்றும் இந்திய வெள்ளை அரிவாள் மூக்கன் போன்ற அருகி வரும் பறவைகளுக்கும் தாயகமாக உள்ளது.
இதில் ஆழமான மற்றும் ஆழமற்ற நீர்நிலைகள், சதுப்பு நிலம், வறண்ட புதர் நிலம், சேற்று நிலங்கள் மற்றும் பாறை நிலப்பரப்பு போன்ற வாழ்விடங்கள் அடங்கும்.
இதன் மற்ற பல்லுயிர்ப் பெருக்கத்தில் 38 தாவர இனங்கள், 35 வண்ணத்துப் பூச்சி இனங்கள், 12 தும்பி இனங்கள், 12 ஊர்வன, 7 பாலூட்டிகள் மற்றும் பல்வேறு இரு வாழ்விகள், மீன்கள் மற்றும் முதுகெலும்பில்லாத உயிரினங்கள் அடங்கும்.