குணப்படுத்த முடியாத மற்றும் உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்ட வயதுவந்தோர்களுக்கு கருணைக் கொலைக்கான சட்டப்பூர்வ உரிமையை உருவாக்கும் மசோதாவிற்கு பிரான்ஸ் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
தகுதியான நோயாளிகள் கடுமையான நிபந்தனைகளின் கீழ் உயிரைப் பறிக்கும் மருந்தைப் பெற இது அனுமதிப்பதுடன் இதனை அவர்கள் தாங்களாகவே செலுத்திக் கொள்ளலாம் அல்லது தேவைப்பட்டால் மருத்துவர் அல்லது செவிலியர் மூலம் செலுத்திக் கொள்ளலாம்.
கடுமையான உடல் அல்லது உளவியல் ரீதியான துன்பங்களுடன் குணப்படுத்த முடியாத நோய்களால் அவதிப்படும், பிரெஞ்சுக் குடிமக்கள் அல்லது சட்டப்பூர்வமாக வசிக்கும் வயதுவந்தோர்களுக்கு இந்தச் சட்டம் பொருந்தும்.
மருத்துவ மதிப்பீடு, குறிப்பிட்ட சிந்தனைக்கான கால அவகாசத்திற்குப் பிறகு கோரிக்கையை உறுதிப்படுத்துதல் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் இதில் ஈடுபடுவதிலிருந்து விலகிக்கொள்ள அனுமதிப்பது போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இந்த மசோதாவில் உள்ளன.
இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்பு பிரான்சின் அரசியலமைப்பு சபையால் மதிப்பாய்வு செய்யப்படலாம்.