உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) மற்றும் உலக உணவுத் திட்டம் (WFP) ஆகியவை “பட்டினி அபாயப் பகுதிகள் குறித்த அறிக்கை 2026”-ஐ (Hunger Hotspots Report) வெளியிட்டன.
உலகளவில் 13 அபாயப் பகுதிகளில் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை மோசம் அடைந்து வருவதாக இதில் எச்சரிக்கப் பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டு ஜூன் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் உணவுப் பாதுகாப்பின்மை மோசமடையும் என எதிர்பார்க்கப்படும் 13 நாடுகளை இந்த அறிக்கை அடையாளம் கண்டுள்ளது.
ஆப்கானிஸ்தான், மியான்மர், தெற்கு சூடான், சோமாலியா, ஹைட்டி, சூடான், பாலஸ்தீனம், ஏமன், லெபனான், காங்கோ ஜனநாயகக் குடியரசு (DRC), மடகாஸ்கர், நைஜீரியா மற்றும் மாலி ஆகிய நாடுகள் இதில் அடங்கும்.
கடுமையான பசி மற்றும் பஞ்சம் ஏற்படும் அபாயம் காரணமாக சூடான், தெற்கு சூடான், ஏமன், பாலஸ்தீனம், நைஜீரியா மற்றும் சோமாலியா ஆகியவை அதிக கவலைக்குரிய பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
உலகளவில் சுமார் 266 மில்லியன் மக்கள் ஏற்கனவே கடுமையான பசியை எதிர் கொண்டுள்ளனர்.
மோதல்கள், பொருளாதார அதிர்ச்சிகள், பருவநிலை மாற்றம், வறட்சி, வெள்ளம், நோய்ப் பரவல் மற்றும் குறைந்து வரும் மனிதாபிமான நிதியுதவி ஆகியவை இதன் முக்கிய காரணிகளாகும்.