இந்தியாவில் உள்ள புலிகளின் வாழ்விடங்களில் சிறிய பூனைகளின் நிலை குறித்த அறிக்கையானது, சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தால் 2025 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் தேதியன்று கொண்டாடப்பட்ட உலகப் புலிகள் தினத்தன்று வெளியிடப்பட்டது.
சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு முக்கியமான சிறிய பூனைகள் என்பவை வளங்காப்பு திட்டமிடலில் பெரும்பாலும் புறக்கணிக்கப் படுகின்றன.
இந்த அறிக்கையானது 2018 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளின் அகில இந்தியப் புலிகள் மதிப்பீடுகளின் ஒளிப்படக் கருவிப் பதிவுகள் தரவை அடிப்படையாகக் கொண்டது.
பல்வேறு வாழ்விடங்களில் 96,275 சதுர கிலோ மீட்டர்கள் பரப்பளவில் பரவிக் காணப் படுவதால் காட்டுப் பூனை மிகவும் பரவலாக காணப்படும் இனமாகும்.
துரும்பன் பூனையானது 70,075 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பெரும்பாலும் கலப்பு இலையுதிர் காடுகளில் பரவிக் காணப்படுகின்றது.
சிறுத்தைப் பூனை 32,800 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் முக்கியமாக இமயமலை, வடகிழக்கு, சுந்தரவனக் காடுகள், மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் சிமிலிபால் ஆகியவற்றின் ஈரமான காடுகளில் காணப்படுகிறது.
பாலைப் பூனையானது மேற்கு மற்றும் மத்திய இந்தியாவின் பகுதியளவு வறண்ட மற்றும் வறண்ட இலையுதிர் காடுகளில் சுமார் 12,500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் மட்டுமே காணப்படுகிறது.
தராய், வடகிழக்கு மற்றும் சதுப்புநிலங்களில் உள்ள ஈரநிலங்களுடன் வாழ்கின்ற மீன்பிடிப் பூனை 7,575 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரவி வாழ்கின்றன.
வடகிழக்கு இந்தியாவின் அடர்ந்த காடுகளில் மட்டுமே உள்ள படைச்சிறுத்தை 3,250 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் காணப்படுகிறது.
பளிங்குப் பூனை வடகிழக்கு அடர்ந்த காடுகளில் 2,325 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் காணப்படுகின்றன.
வடகிழக்கு இந்தியாவின் காடுகளில் மட்டுமே காணப்படுகின்ற ஆசிய தங்க நிறப் பூனையானது 1,850 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரவிக் காணப் படுகின்றது.