தேசிய கௌரவ அவமதிப்புத் தடுப்பு (திருத்த) மசோதா, 2026-ஐ மாநிலங்களவை நிறைவேற்றியுள்ளது.
இந்த மசோதா, தேசிய கௌரவ அவமதிப்புத் தடுப்புச் சட்டம், 1971-இல் மேலும் திருத்தங்களை மேற்கொள்ளும்.
தேசிய கீதமான 'ஜன கண மன'-க்கு அளிக்கப்படும் அதே சட்டப்பூர்வமான பாதுகாப்பை 'வந்தே மாதரம்' பாடலுக்கும் வழங்குவதே இந்த முன்மொழியப்பட்ட சட்டத்தின் நோக்கமாகும்.
இக்குற்றங்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இவை இரண்டும் தண்டனையாக விதிக்கப்படலாம்.
'வந்தே மாதரம்' பாடலின் ஆறு சரணங்களையும் பாட வேண்டும் என்பதையும் இம்மசோதா கட்டாயமாக்குகிறது.
அரசு விழாக்களில், குறிப்பாக தேசிய கீதம் இசைக்கப்படும் அல்லது பாடப்படும் விழாக்களில், தேசியப் பாடலையும் இசைக்கவோ அல்லது பாடவோ வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் மாநிலங்களுக்கு அறிவுறுத்தியதைத் தொடர்ந்து இந்த முன்மொழிவு வந்துள்ளது.
தேசியப் பாடலும் தேசிய கீதமும் பாடப்படும் போதோ அல்லது இசைக்கப்படும் போதோ, தேசியப் பாடலே முதலில் பாடப்படவோ அல்லது இசைக்கப்படவோ வேண்டும்.
தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' 1875-ஆம் ஆண்டில் பங்கிம் சந்திர சட்டர்ஜியால் இயற்றப்பட்டது.
1937 ஆம் ஆண்டில் ஜவஹர்லால் நேரு காங்கிரஸ் தலைவராக இருந்தபோது, 'வந்தே மாதரம்' பாடலின் இரண்டு சரணங்களை மட்டுமே பாடுமாறு வரையறுத்தார்.
மறுபுறம், 1928-ஆம் ஆண்டில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸ் தலைவராக இருந்த போது, இப்பாடலுக்கு முழுமையான மற்றும் கண்ணியமான இசை வடிவத்தை அமைக்குமாறு திமிர் பரன் பானர்ஜியிடம் கேட்டுக்கொண்டார்.
1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று, முதல் சுதந்திர தினத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், அகில இந்திய வானொலியில் காலை 6:30 மணிக்கு 'வந்தே மாதரம்' பாடலை முழுமையாகப் பாடுமாறு சர்தார் வல்லபாய் படேல் பண்டிட் ஓம்கார்நாத் தாக்கூரைக் கேட்டுக் கொண்டார்.
1950-ஆம் ஆண்டு ஜனவரி 24 அன்று, 'ஜன கண மன'க்கு அளிக்கப்படும் அதே மரியாதை 'வந்தே மாதரம்' பாடலுக்கும் அளிக்கப்படும் என்று அரசியலமைப்பு நிர்ணய சபையில் டாக்டர் ராஜேந்திர பிரசாத் தெரிவித்தார்.