குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், குடியரசுத் தலைவரின் மெய்க் காவலருக்கு வெள்ளி எக்காள நாதக் கருவி மற்றும் எக்காளப் பதாகையை வழங்கினார்.
இந்திய இராணுவத்தின் மிகப் பழமையான படைப்பிரிவான குடியரசுத் தலைவரின் மெய்க்காப்பாளர் பிரிவானது 1773 ஆம் ஆண்டில் தலைமை ஆளுநரின் மெய்க் காப்பாளராக நிறுவப்பட்டது.
இந்தப் படைப்பிரிவானது, பனாரஸில் (வாரணாசி) அப்போதையத் தலைமை ஆளுநர் வாரன் ஹேஸ்டிங்ஸ் அவர்களால் நிறுவப்பட்டது.
1950 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதியன்று, இந்தப் படைப்பிரிவானது, குடியரசுத் தலைவரின் மெய்க்காப்பாளர் பிரிவு என மறுபெயரிடப்பட்டது.
1923 ஆம் ஆண்டில், இப்படைப்பிரிவின் 150 ஆண்டுகள் பணிக்கால நிறைவினை முன்னிட்டு, அப்போதைய வைஸ்ராய் ரீடிங் பிரபு அவர்களால், குடியரசுத் தலைவரின் மெய்க்காவலர் பிரிவிற்கு இந்த சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது.
அதன்பிறகு பதவியேற்ற ஒவ்வொரு வைஸ்ராயும், மெய்க்காப்பாளரிடம் வெள்ளி எக்காளநாதக் கருவி மற்றும் எக்காளப் பதாகை ஆகியவற்றை வழங்கி வந்தனர்.
இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்கள், 1957 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதியன்று குடியரசுத் தலைவரின் மெய்க்காப்பாளரிடம் வெள்ளி எக்காள நாதக் கருவி மற்றும் எக்காளப் பதாகையை வழங்கினார்.