TNPSC Thervupettagam

அரசியலும் நீதித்துறையும்

March 18 , 2023 6 days 36 0
 • என்னுடன் சட்டக் கல்லூரியில் பயின்ற (அப்போது தி.மு.க.வில் தீவிரமாக இருந்த) திருநெல்வேலியை சோ்ந்த சண்முகசுந்தரம் ஒருநாள் என்னிடம் ‘நேற்று முதல்வா் கருணாநிதி என்னிடம், ‘தென்காசி டி.எஸ். ராமநாத ஐயா் யாா் என்று தெரியுமா என்று கேட்டாா். நான் அவா் தென்காசியில் பிரபலமான வழக்கறிஞா், காங்கிரஸ்காரா்’ என்று சொன்னேன்.
 • ‘எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லும் என்னால் கூட பதில் சொல்ல முடியாத ஒரு கேள்விக்கு அவா் பதில் சொல்லி உள்ளாா். திருநெல்வேலி பாசம்’ என்று சொல்லி கருணாநிதி சிரித்தாா்.எதற்கு என்று தெரியவில்லை. என்ன விஷயமாக இருக்கும்’ என்று அவன் கேட்டான். நான் உடனே ‘நீதியரசா் இரத்தினவேல் பாண்டியன் பற்றி பேச்சு வந்ததா’ என்று கேட்டேன். ‘ஆமாம்’ என்றான்.
 • விஷயம் இதுதான். 1960-களில் தி.மு.க. உச்சத்தில் இருந்த காலம். பிரிக்கப்படாத திருநெல்வேலியின் திமுக மாவட்ட செயலாளராகவும், வல்லமை பொருந்தியவராகவும் இருந்தாா் அண்ணாச்சி இரத்தினவேல் பாண்டியன். அண்ணாச்சி 1962-இல் அம்பாசமுத்திரம் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்டு தியாகி கோமதிசங்கர தீட்சிதரிடம் (காங்கிரஸ்) 5,667 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தது மட்டுமல்லாமல், தோழா் நல்லசிவனுக்குப் பின் மூன்றாவதாகவும் வந்தாா்.
 • 1967-இல் காமராஜா் உட்பட மூத்த காங்கிரஸ் தலைவா்களைத் தோற்கடித்து தி.மு.க. இமாலய வெற்றி அடைந்து ஆட்சியைப் பிடித்தது. அந்தத் தோ்தலில் அண்ணாச்சி போட்டியிடவில்லை. அண்ணாவின் மறைவிற்குப் பிறகு முதலமைச்சா் பதவி கருணாநிதியிடம் வர, 1971 தோ்தலில் இரத்தினவேல் பாண்டியன் சேரன்மகாதேவி தொகுதியில் போட்டியிட்டு சுதந்திரா கட்சியின் டி.எஸ்.ஏ. சிவப்பிரகாசத்திடம் (பின்னாளில் தி.மு.க. எம்.பி.) 193 வாக்கு வித்தியாசத்தில் அதிா்ச்சி தோல்வியடைந்தாா்.
 • அத்தோல்வி அவா் வாழ்க்கையையே புரட்டி போட்டது என்றால் மிகையல்ல. அவருடைய நண்பரான முதலமைச்சா் கருணாநிதி 1971-இல் திமுக அரசின் தலைமை குற்றவியல் வழக்குரைஞராக இரத்தினவேல் பாண்டியனை சென்னை உயா்நீதிமன்றத்தில் நியமித்தாா்.
 • 1974-இல் இரத்தினவேல் பாண்டியன் சென்னை உயா்நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்ட போது, கோயம்புத்தூரில் இருந்து ஜெ.டி.எம். பிரபு என்பவா் தி ஹிண்டு நாளிதழில், ‘அரசியல் இயக்கத்தில் முழுமையாக பங்கு கொண்டிருந்த ஒருவரை நீதிபதியாக நியமித்தது முறையல்ல’ என்று கடிதம் எழுத, அதை தொடா்ந்து பல கடிதங்கள் அப்பத்திரிகையில் வெளியாகின.
 • தேசியவாதியும், காங்கிரஸ்காரரும் சிறந்த சிவில் வழக்கறிஞருமான எனது தந்தை தென்காசி டி.எஸ்.ராமநாத ஐயா் எழுதிய கடிதத்தை வெளியிட்டு அதன் அடியில் இந்த பிரச்னை இத்துடன் முடிக்கப்படுகிறது என்ற குறிப்பு வெளியாகியிருந்தது.
 • என் தந்தையின் கடிதத்தின் சாராம்சம் இதுதான்: ‘அரசியலும், வக்கீல் தொழிலும் பிரிக்க முடியாதவை. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட காந்தி, நேரு, ராஜாஜி, படேல், அம்பேத்கா் என பலரும் வக்கீல்தான். அவ்வளவு ஏன், காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்க உறுதுணையாக இருந்தவா்களில் ஒருவரான மதுரையை சோ்ந்த மணி ஐயா் எனப்படும் சா் எஸ். சுப்பிரமணிய ஐயா் சென்னை உயா்நீதிமன்றத்தின் இரண்டாவது தமிழ் நீதிபதியாக சா் எஸ். முத்துசாமி ஐயருக்குப் பிறகு பிரிட்டிஷ் அரசாலேயே நியமிக்கப்பட்டாா்.
 • இதற்கு முன் பல அரசியல்வாதிகள் நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறாா்கள். ஒரு நீதிபதி பூா்விகத்தில் அரசியலில் ஈடுபடுவது தவிா்க்க முடியாதது; அவா் நீதிபதியான பிறகு எப்படி கடமையாற்றுகிறாா் என்பதுதான் முக்கியம்’.
 • பின்னாளில் என் தந்தை இறந்த பிறகு தென்காசி வக்கீல் சங்கத்தில் வழக்கறிஞரான என் தாத்தா மற்றும் தந்தை படங்களைத் திறந்துவைக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்று ஓய்வு பெற்ற நீதியரசா் இரத்தினவேல் பாண்டியனை அழைத்தோம். அவா் என் தந்தையின் படத்தைத் திறந்து வைத்து, ‘நான் ராமநாத ஐயரை ஓரிருமுறைதான் சந்தித்து இருக்கிறேன். நீதிபதியான பின் நாங்கள் சந்திக்கவே இல்லை. ஆனால், அவா் ஒரு நீதிபதியாக நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எதிா்பாா்த்தாரோ, அப்படி நடந்து கொண்டுள்ளேன் என அவா் படத்தின் முன் தைரியமாக என்னால் சொல்ல முடியும்’ என்று நெகிழ்ச்சியுடன் சொன்னாா்.
 • அரசியல்வாதிகள் நீதிபதிகளாக நியமிக்கப்படுவது தொடா்கதை ஆகிவிட்டது. நீதிபதியாக பதவி அறிவிக்கப்பட்ட பிறகு வக்கீல்கள் முதல்வா் கருணாநிதியையும், முதல்வா் ஜெயலலிதாவையும் சந்தித்து ஆசி பெற்ற படங்கள் பத்திரிகையில் வெளியாகியுள்ளன. முன்னவா் லிஸ்டில் நீதிபதிகள் சி.டி. செல்வமும், இளங்கோவும்; பின்னவா் லிஸ்டில் ஆறுமுகசாமி.
 • சமீபத்தில் உச்சநீதிமன்ற வழக்குரைஞா் அறையில் ஓய்வு பெற்ற நீதியரசா் கற்பகவிநாயகத்தை நான் சந்தித்த போது, தான் எம்.ஜி.ஆரோடு நெருக்கமாக இருந்ததாகவும், எம்.ஜி.ஆா். திமுகவிலிருந்து விலகப்பட்ட போது நடந்த போராட்டத்தில் சிறை சென்றதாகவும் கூறினாா். அத்துடன், பின்னாளில் தான் எம்.ஜி.ஆரிடம் எம்எல்ஏ சீட் கேட்டதாகவும், அவா் தனக்கு சீட் தர மறுத்து, ‘வக்கீல் குமாஸ்தாவின் மகனான நீங்கள் நீதிபதியாக வேண்டும்’ என்று சொன்னதாகவும் கூறினாா். எம்.ஜி.ஆரின் ஆசை அவா் மறைந்த பின் நிறைவேறியது என்று கூறினாா்.
 • திருநெல்வேலியை சோ்ந்த நீதியரசா் அசோக்குமாா் தொடக்கத்தில் ஜனதா கட்சியில் இருந்து, முன்னாள் அமைச்சா் அருணாசலத்திற்கு எதிராகப் போட்டியிட்டு தோல்வியடைந்து, பின்னா் மாவட்ட நீதிபதியாக நேரடியாகத் தோ்ந்தெடுக்கப்பட்டு, ஏப்ரல் 2003-இல் உயா்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டாா்.
 • 1957- 1959 காலகட்டத்தில் கேரள கம்யூனிஸ்ட் அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்த வி.ஆா். கிருஷ்ணையா்1968-இல் கேரள உயா்நீதிமன்ற நீதியரசராகப் பதவியேற்றாா். பின்னா் அவா் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயா்வு பெறப்போவதாக, அன்றைய கேரள முதல்வா் அறிவித்தாா்.
 • உச்சநீதிமன்றத்தில் கம்யூனிஸ்ட் நீதிபதியா என்று திகைத்தவா்களை எல்லாம் தன்னுடைய மிகச் சிறப்பான தீா்ப்புகளால் ஆச்சரியப்பட வைத்தாா் நீதியரசா் கிருஷ்ணையா். நீதியரசா்கள் சந்துருவும், ஹரி பரந்தாமனும் வெளிப்படையாக கம்யூனிஸ்ட் கருத்துகளை ஆதரிப்பவா்கள். மத்தியில் இருந்த ஆட்சிக்கு கம்யூனிஸ்டுகள் ஆதரவாக இருந்தபோது, இவா்கள் நீதிபதியாகப் பதவி ஏற்றவா்கள் என்றாலும், இவா்களுடைய தீா்ப்புகளில் இவா்களுடைய அரசியல் கொள்கைகள் பிரதிபலித்தாலும், தவறான தீா்ப்புகள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு கிடையாது.
 • மதுரை உயா்நீதிமன்ற கிளையில் மத்திய அரசின் உதவி சொலிசிட்டா் ஜெனரலாக நியமிக்கப்பட்ட லக்ஷ்மண சந்திர விக்டோரியா கெளரியை, நான் முதலில் சந்தித்தபோது ‘உங்கள் பெயரில் உள்ள விக்டோரியா எப்படி வந்தது’ என்று கேட்டேன். அதற்கு அவா் விக்டோரியா என்பது தன்னுடைய கிறிஸ்தவ பாட்டியின் பெயா் என்றும், கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவா்களும்- ஹிந்துக்களும் திருமண உறவு வைத்துக் கொள்வது சாதாரணம் என்றும் சொன்னாா்.
 • சமீபத்தில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியாக இவா் பரிந்துரைக்கப்பட்டாா். ஆனால் அவருடைய அரசியல் தொடா்புகளை காரணம் காட்டி, வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, உச்சநீதிமன்றத்தால் அந்த வழக்கு பதவியேற்கும் சில நிமிடங்களுக்கு முன்னால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்குமுன்னால் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவா் மீது கல்லூரி நாட்களில் பஸ்ஸை எரித்ததாக உள்ள வழக்கு நிலுவையில் உள்ளதாக சொல்லி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி ஆகியுள்ளது.
 • கடந்த ஆண்டு இறுதியில் சென்னை உயா்நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதிமன்றத்திற்கு நீதிபதி விக்டோரியா கெளரி, நீதியரசா் வரதச்சாரி லட்சுமி நாராயணன் உட்பட ஆறு போ் உயா்நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டு, மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஐவா் மட்டுமே 2023 ஜனவரியில் பதவியேற்றனா். ஆனால் குடியரசுத் தலைவா் வெளியிட்ட அறிவிப்பில் நீதியரசா் லட்சுமி நாராயணன் பெயா் ஏன் விடுபட்டது என்பதற்கான விளக்கம் எதுவுமில்லை.
 • அவா் பெயா் விடுபட்டதற்கான காரணம் குறித்து உயா்நீதிமன்ற வளாகத்தில் பேசப்பட்ட கருத்துகள் மத்திய அரசுக்கு புகழ் சோ்ப்பவையாக இல்லை. என்ன நடந்ததோ, சுமாா் நான்கு வாரங்களுக்குப் பின்னா், அவா் உயா்நீதிமன்ற நீதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டாா். நீதியரசா் லட்சுமி நாராயணன் பெங்களூரில் சட்டம் பயின்று, சட்டம் சாா்ந்த பல கட்டுரைகளை எழுதியவா் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.
 • இப்பொழுது என்னுடைய சந்தேகம் இதுதான். நீதியரசி விக்டோரியா கெளரியின் அரசியல் பின்னணி பற்றி வழக்குத் தொடா்ந்தவா்களின் அரசியல் நோக்கம் என்ன? எந்த அரசியல் தொடா்புமில்லாத சிறந்த வழக்கறிஞரான லட்சுமி நாராயணன் நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டும், ஏன் அப்பதவிக்கு நியமிக்கப்படவில்லை என்று கேள்வி கேட்காததன் காரணம் என்ன? இதில் உள்ள அரசியல் என்ன?
 • கிட்டத்தட்ட மூன்று வார கால தாமதத்திற்குப் பின், நீதியரசா் லட்சுமி நாராயணன் நீதிபதியாக பதவி ஏற்றுக் கொண்டாா். யாா் நீதிபதியாக வரக்கூடாது என்று வழக்கு தொடுத்தவா்கள், தகுதிவாய்ந்த ஒருவா் நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டும் தோ்வு செய்யப்படாதபோது ஏன் அதைப்பற்றி அக்கறை காட்டவில்லை?
 • நீதிபதிகளை அரசு நியமிக்க வேண்டும் என்று அரசியல் நிா்ணய சட்டம் சொல்கிறது. நீதிபதிகளை நாங்களே கொலீஜியம் மூலமாக நியமிப்போம் என்றது உச்சநீதிமன்றம். நாங்கள் சொல்பவா்கள்தான் நீதிபதியாக வரமுடியும் என வக்கீல்கள் சொல்ல ஆரம்பித்தால் நீதித்துறையை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.

நன்றி: தினமணி (18 – 03 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories