TNPSC Thervupettagam

வாக்குவங்கி வாக்குறுதிகள்

November 21 , 2022 6 days 87 0
 • "யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே' என்பது பழமொழி. "தேர்தல் வரும் பின்னே அறிவிப்புகள் வரும் முன்னே' என்பது புதுமொழி. புதிய புதிய வாக்குறுதிகளும், புதிய புதிய நலவாழ்வுத் திட்டங்களும் அன்றாடம் அறிவிக்கப்படுகின்றன.
 • விரைவில் இரண்டு மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடக்க விருக்கின்றன. தேர்தல் ஆணையம் அதுபற்றி அறிவிப்பு செய்துள்ளது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மற்றும் ஹிமாசல பிரதேசம் ஆகிய இந்த இரண்டு மாநிலத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன.
 • அடுத்த ஆண்டு கர்நாடகம் உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களில் தேர்தல் நடைபெறப் போகின்றன. அதனைத் தொடர்ந்து 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற வேண்டும். அதற்கு முன்னோடியாக இந்த மாநிலத் தேர்தல் முடிவுகள் அமைய வேண்டும் என்று முக்கிய அரசியல் கட்சிகள் மும்முரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
 • இப்போது ஹிமாசல பிரதேச தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டியும், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு இலவச ஸ்கூட்டியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 • "இலவசங்களால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது' என்று கூறி வரும் பிரதமர் நரேந்திர மோடியின் கட்சியும் அதே வழிமுறையைப் பின்பற்றியிருப்பது வியப்பளிக்கிறது. ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகளும் பல இலவச அறிவிப்புகளை வெளியிட்டு சூறாவளிச் சுற்றுப் பயணத்தில் இறங்கியுள்ளன. அரசியல் கட்சிகள் அளிக்கும் இலவசம் பற்றிய வாக்குறுதிகளைத் தடுக்க இயலாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இலவசப் பொருள்களையும், வளர்ச்சித் திட்டங்களையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது என்றும் அது தெரிவித்துள்ளது.
 • தேர்தல் இலவசங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று வழக்குரைஞர் அஸ்வினி உபாத்யாய் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை அன்றைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரமணா, நீதிபதிகள் ஜே.கே .மகேஷ்வரி, ஹிமாகோலி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
 • அப்போது நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். விவசாயிகளுக்கு மின்சாரம், விதைகள், உரங்களுக்கு அளிக்கப்படும் மானியத்தை இலவசங்களாகக் கருத முடியுமா? இலவசமான சுகாதாரச் சேவைகள், இலவசக் குடிநீர், நுகர்வோருக்கு இலவச மின்சாரம் ஆகியவையும் இலவசங்களாகக் கருத முடியுமா?
 • வாக்காளர்கள் இலவசங்களையும் எதிர்பார்க்கிறார்கள் என்று நினைக்கவில்லை. அவர்களுக்கு வாய்ப்பு அளித்தால் கண்ணியமான வருமானத்தை ஈட்டுவார்கள். மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் அதைச் செய்கிறது. தேர்தல் வாக்குறுதிகள் மட்டும் வெற்றியை நிர்ணயிப்பதில்லை. அதிக வாக்குறுதிகள் அளித்த கட்சிகள் பெரும் தோல்வியைச் சந்தித்து உள்ளன.
 • மக்கள் பணம் சரியான வழியில் எப்படி செலவு செய்யப்படுகிறது என்பதில் மட்டும் கவனம் செலுத்தப்படுகிறது. மக்களின் வரிப்பணம் இலவசங்கள் மூலம் வீணாகிறது என்று ஒரு தரப்பும், மக்கள் நலத்திட்டங்களுக்கு பொதுமக்களின் பணத்தைச் செலவிட வேண்டியது அவசியம் என்று மற்றொரு தரப்பும் வாதங்கள் செய்கிறது.
 • இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலவசங்களுக்கும், மானியங்களுக்கும் எதிராக அண்மையில் குரல் எழுப்பியுள்ளார். தேர்தல் கால வெற்றிக்காகவும், மக்களைத் திசை திருப்பும் அரசியல் கட்சிகள் இவற்றைக் கையில் எடுத்திருப்பதாக அவர் நினைக்கிறார்.
 • "அரசியல் ஆதாயத்துக்காகச் செய்யப்படும் இலவச அறிவிப்புகள், நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழிக்கும். நம் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதிக்கும். நேர்மையாக வரி செலுத்துவோருக்குச் சுமையை அதிகரிக்கும்' என்று பிரதமர் பேசியுள்ளார்.
 • இன்னொரு நிகழ்ச்சியில் மானியங்களுக்கு எதிராகவும் பேசியுள்ளார். மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு மாநில மின்சார வாரியங்கள் தரவேண்டிய நிலுவை இரண்டரை லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதுபற்றிப் பேசிய பிரதமர், "இந்திய அரசியலில் மானியங்கள் வழங்கும் கலாசாரம் மிக மோசமான பிரச்னையாகியுள்ளது' என்றும் கூறியுள்ளார். 
 • இந்த பிரச்னை இப்போது "விஸ்வரூபம்' எடுப்பதற்கு என்ன காரணம்? இலவசம், மானியம் என்பவை தமிழ்நாட்டில் மட்டும்தானா என்றால் இல்லை. இந்தியாவில் பல மாநிலங்களில் இருக்கின்றன. பஞ்சாப், ராஜஸ்தான், பிகார், கேரளம், உத்தர பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களே இந்தியாவின் அதிகக் கடன் சுமையுள்ள மாநிலங்கள். இதில் தமிழ்நாடு 11-ஆவது இடத்தில் உள்ளது.
 • தில்லியில் குடிநீர், மின்சாரம், பேருந்து பயணம் எனப் பல்வேறு இலவசங்கள் வழங்கி வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவால் "டெல்லி மாடல்' என்று இதனைக் குறிப்பிடுகிறார். 
 • இதேபோன்ற வாக்குறுதிகளைக் கொடுத்து பஞ்சாபில் அவரது கட்சி மாபெரும் வெற்றி பெற்றது. விரைவில் குஜராத் சட்டப்பேரவைக்குத் தேர்தல் வருவதால் அங்கும் அவர் அவரது "டெல்லி மாடலை' அரங்கேற்ற முடிவு செய்துள்ளார்.
 • எது இலவசம், எது மானியம், எது மக்கள் நலத் திட்டம் என்பதில் குற்றம் சாட்டுகிறவர்களுக்கே குழப்பம் உள்ளது. இலவச மின்சாரம், மடிக்கணினி, கடன் தள்ளுபடி, மிதிவண்டி தருவது, மாதாமாதம் உதவித் தொகை தருவது போன்றவை இலவசங்கள் என்று கூறப்படுகின்றன.
 • விவசாய விளைபொருள்களுக்குக் குறைந்த அளவு விலை தருவது, உரத்துக்கு மானியம் தருவது போன்றவை மானியம் என்று கூறப்படுகின்றன. நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் அரிசி முதலிய பொருள்கள் தருவது, கல்வி மற்றும் மருததுவ சேவை அளிப்பது, மகாத்மா காந்தி ஊரக மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் வேலை வழங்குவது போன்றவை மக்கள் நலத் திட்டங்கள் என்று கூறப்படுகின்றன.
 • இவையெல்லாம் மாநில அரசுகள் மட்டுமே செய்யவில்லை. மத்திய அரசும் செய்கின்றது. இலவசங்களுக்கும், மானியங்களுக்கும் எதிராகக் குரல் கொடுக்கும் பிரதமர் மோடிதான் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6,000 அளிக்கும் திட்டதை ஆரம்பித்தார். பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் போன்ற பல திட்டங்களை உருவாக்கி மானியம் அளித்து வருகிறார்.
 • பொதுவாக "இலவசம்" என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதே தவறாகும். ஆட்சியாளர்கள் அவர்கள் கையில் இருந்து ஏதும் அளிப்பதில்லை. மக்களின் வரிப்பணம்தான் வேறு வடிவில் மீண்டும் மக்களுக்குச் சென்று சேருகிறது. மக்கள் பணம் மக்களுக்குச் சென்று சேர்வதை இலவசம் என்று எப்படிக் கூறலாம்? இலவசம் என்று கூறி ஏழை மக்களை இழிவுபடுத்துவதை முதலில் நிறுத்த வேண்டும்.
 • பெரும் தொழிலதிபர்கள் கோடி கோடியாக வங்கியில் கடன் வாங்கிவிட்டு திரும்ப செலுத்தவில்லையென்றால் அதை "வாராக்கடன்' என்று சொல்லி தள்ளுபடி செய்வதும், ஏழை விவசாயி சிறிய தொகை கடன் வாங்கினாலும் "ஜப்தி' செய்து அவர்களது வீட்டுப் பொருள்களைப் பறிமுதல் செய்வதும் என்ன நியாயம்?
 • "இலவசம்" என்பதை இப்போது "விலையில்லாப் பொருள்" என்று மாற்றி அழைக்கும் நிலைமை வந்துள்ளது. இந்த இலவசங்களையே "சமூக முதலீடு" என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். பள்ளிகளில் சத்துணவு, பேருந்து பயண அட்டை, மிதிவண்டி இவை தருவதன் மூலம் ஏழை எளிய மக்களைப் படிக்க வைக்க முடிகிறது. இதைவிடச் சிறந்த அறச்செயல் வேறு ஏதும் உண்டா? சமூக முதலீடுகளை இலவசம் என்று கேலி பேசுவதா?
 • தமிழ்நாட்டில் தொடர்ந்துவரும் பல இலவசத் திட்டங்கள் இந்தியா முழுமைக்கும் போயிருப்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். நமது சத்துணவுத் திட்டத்தை மத்திய அரசு மதிய உணவுத் திட்டமாக இந்தியா முழுவதும் செயல்படுத்துகிறது. ஏழைகளுக்கு வீடு கட்டித் தருகிற திட்டம், மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் திட்டம், முதியோர் ஓய்வூதியம் போன்றவை இந்தியாவே பின்பற்றும் திட்டங்களாகும்.
 • இலவசங்கள் போலவே மானியம் அளிப்பது மிகவும் தேவையாகும். உலகம் எங்கும் விவசாயிகளுக்கு உலக நாடுகள் மானியம் தருகின்றன. அந்த மானியங்களே அவர்களைக் குறைந்த செலவில் அதிக உணவு உற்பத்தி செய்ய வைக்கின்றன. அதனால்தான் எல்லோரும் வாங்கக் கூடிய விலையில் உணவு கிடைக்கிறது.
 • நெல், கோதுமை விளைச்சலில் உலகில் இரண்டாவது இடம் இந்தியாவாகும். குறைந்தபட்ச ஆதரவு விலை, உர மானியம் ஆகிய இரண்டும் இந்திய விசாயிகளுக்கு மத்திய அரசு செய்யும் உதவிகளாகும். உலகின் செல்வந்த நாடுகள் தங்கள் விவசாயிகளுக்குத் தரும் மானியங்களின் அளவு சுமார் ரூ.20 லட்சம் கோடி என்று புள்ளிவிவரம் கூறுகிறது. இவர்களுடன் நம் விவசாயிகள் மோத முடியாமல் தவிக்கிறார்கள்.
 • இவற்றையெல்லாம் அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் எண்ணிப் பார்க்க வேண்டும். ஆனால் நமது நாட்டில் தேர்தல் வரும்போதுதான் மக்களைப் பற்றிய நினைவே வருகிறது. அவர்களுடைய வாக்குகளைப் பெற்று எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும். ஆட்சியில் இருந்தால்தான் தங்கள் கட்சியைக் காப்பாற்ற முடியும் என்றநிலை சில அரசியல் கட்சிகளுக்கு வந்து விட்டது. கொண்ட கொள்கையை விட கொடுக்கப்படும் பணமே பெரிது என்ற நிலை உருவாகிவிட்டது. ஊழல் உற்பத்தியாகும் இடம் இதுதான்.
 • ஒவ்வொரு மனிதனின் தேவையையும் பூர்த்தி செய்ய முடியும். ஆனால் ஒரே ஒரு மனிதனின் பேராசையைக் கூட பூர்த்தி செய்ய முடியாது என்றார் மகாத்மா காந்தியடிகள். தேர்தல் வரும் போகும். ஆனால் விடுதலை பெற்ற நாட்டை வெற்றியை நோக்கி அழைத்துப் போக வேண்டும். அதற்குத் தொண்டும் தியாகமுமே அரசியலாக வேண்டும்.

நன்றி: தினமணி (21 – 11 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories