TNPSC Thervupettagam

ஃபின்லாந்து: கல்வியில் தொடர்ச்சி ஏன் முக்கியம்

November 20 , 2022 526 days 362 0
  • ஃபின்லாந்துக் கல்வித் துறையின் கட்டமைப்பு சமூக நலத் திட்டங்கள், அதிகாரப்பரவலாக்கம், தாய்மொழிவழிக் கல்வியில் பிணைந்து இருப்பதுபோல இரண்டு வரலாற்றுரீதியிலான முழக்கங்களினாலும் கட்டியமைக்கப்பட்டிருக்கின்றன. ஒன்று, ஃபின்லாந்துக் கல்வியும் தேசிய உணர்வெழுச்சியும் மற்றொன்று ‘ஒரே ஒரு குழந்தைகூட கல்வி பெறாமல் விடுபட்டுவிடக் கூடாது’ என்பதாகும்.
  • லீவ் நோ சைல்டு பிஹிண்ட்’ (Leave no child behind) எனும் வாசகம் அமெரிக்க மண்ணில் பிரபலமாகுவதற்கு முன்பே ஃபின்லாந்தின் செயல்பாடுகளில் தாக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டது எனலாம்.
  • ஃபின்லாந்தின் கல்வி அமைச்சராக 1979-1983இல் இருந்த பேர் ஸ்டேன்பேக்கிடம் (Pär Stenbäck) 2015இல் போர்டோ ரிகோவில் நடந்த கல்வியாளர் மாநாட்டில், “ஃபின்லாந்தின் வெற்றிக்கான ரகசியத்தை ஒரு வரியில் சொல்ல முடியுமா?” என்று கேட்டதற்கு பேர் ஸ்டேன்பேக், “கல்விக் கற்றலுக்கும் ஆசிரியர்களுக்குமான பெரும் மரியாதையை உருவாக்க 150 ஆண்டுகள் ஆனது” என்ற அவரது சொற்றொடர் ஃபின்லாந்துக் கல்வித் துறையின் ஆழத்தினை உணர்த்துகிறது.

படிப்படியான மாற்றங்களே ஃபின்லாந்தின் வெற்றி

  • நமது தொடர் கட்டுரைகளில் ஃபின்லாந்துக் கல்வித் துறையின் 400 ஆண்டுகளின் வரலாற்றுப் பக்கங்களை அங்கங்கே தொட்டு அலசினாலும், ஸ்டேன்பேக் சொன்னது போல 150 ஆண்டுகளில் படிப்படியான மாறுதலுக்கு உள்ளானவை என்றாலும், 1972-1985 காலத்திய மாற்றங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டியவை. 1972ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கையை, இன்றைய நவீனக் கல்விக்கான அச்சாணியாக திகழக்கூடிய மாற்றங்களை உள்ளடக்கிய நடைமுறைகளை ஃபின்லாந்து அறிமுகப்படுத்தியதை ஏற்கெனவே சுட்டிக்காட்டியிருந்தேன்.
  • அந்த மாறுதல்களை முதலில் மக்கள்தொகைக் குறைந்த ஃபின்லாந்தின் வடக்குப் பகுதியான லாப்லாந்து (Lapland) பகுதியில் அறிமுகப்படுத்தி, 1978இல் தெற்கு நோக்கின மக்கள்தொகை அடர்த்தி நிறைந்த பகுதிகளுக்குக் கொண்டுவந்தனர்.
  • அடுத்ததாக, ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் இருந்து பல்கலைக்கழகக் கல்வியாகவும் ஆசிரியராக முதுநிலைக் கல்வியைக் கட்டாயமாக்கினர். ஆசிரியர் /ஆசிரியைகளுக்கான தன்னாட்சி அதிகாரத்தை வலிமைப்படுத்தினர். ஒவ்வொன்றையும் கண்காணித்து, படிநிலை மாற்றங்களை ஏற்படுத்திய, படிப்பினைகளை உள்வாங்கி, சீர்த்திருத்தம் செய்துகொண்டே செல்வதுதான் ஃபின்லாந்தின் வெற்றி.
  • பல்வேறு முக்கிய மாற்றங்களில் ஒன்று அதிகாரப்பரவலாக்கம். ஐரோப்பிய நாடெங்கிலும் கல்வித் துறையின் தன்னாட்சி உரிமைகளை மாநகராட்சி / நகராட்சி வலையத்திற்குள் வைத்திருந்தாலும், நார்டிக் நாடுகளின் கல்வித் துறையின் அதிகாரப்பரவலாக்கம் தனித்துவமானவை!

கல்வித் துறையின் அதிகாரப்பரவலாக்கம் 

  • தேசியப் பாடத் தொகுப்பு (national curriculum framework) 1970க்கு பிறகு வழிகாட்டியாக உண்டே தவிர, ஒரே மாதிரியான பாடங்கள் இல்லை. ஒவ்வொரு குறிப்பிட்ட ஆண்டுகளிலும் இக்கல்வி வழிகாட்டி தொகுப்பு தொடர் மாற்றங்களுக்கும் உள்ளாகும். இந்தப் பாடத் தொகுப்புகளை அவரவர் சூழல், பகுதிகளுக்கு ஏற்ப நடைமுறைப்படுத்துவது, எந்தப் பள்ளியில் எம்மொழிகளில் பாடம் இருத்தல் வேண்டும், துணை மொழிப்பாடங்கள் எவையவை இருத்தல் வேண்டும், எந்த வயதில் எந்த மொழிகளுக்கான பயிற்சிகள் தொடங்க வேண்டும் என்பதனை முடிவுசெய்வது உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்பாகும். 
  • உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளான அரசியலர்களின் கைகளின் பொருளாதார மதிப்பீடு, பொருளாதாரப் பகிர்வு, உட்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றைக் கண்காணிக்கும் பொறுப்பு உள்ளது.
  • குறிப்பாக, 1985இல் அரசியல் அதிகாரப்பரவலாக்கச் சீர்த்திருத்தங்கள் கொண்டுவந்த வேளையில், கல்விக்கான அதிகாரப்பரவலாக்க நடைமுறைகள் வலுவாகின. 1994 முதல் ஃபின்லாந்து தேசியக் கல்வி வழிகாட்டி தொகுப்புகள் நடைமுறைக்கு வந்த பின், பாடநூல் வடிவமைப்பு முதல் பாடநூல் உள்ளடக்கம் வரையில் உள்ளாட்சி அமைப்புகள் செயல்படுத்தும் அதிகாரத்தைப் பெற்றன. இதன் காரணமாக 320 உள்ளாட்சி அமைப்புகள் பள்ளிகளை நடத்தும் முழுமையான தன்னாட்சி அதிகாரத்தைப் பெற்றன.
  • உள்ளாட்சி அமைப்புகளின் எல்லைகளுக்குள் இருக்கும் ஒவ்வொரு பள்ளியிலும், பள்ளிகளில் பணிபுரியும் ஒவ்வொரு ஆசிரியர், ஆசிரியைகளுக்கும் என பல்வேறு தன்னாட்சி உரிமைகளைக் கொண்ட வலுவான சட்டங்களைக் கொண்டுள்ளது ஃபின்லாந்தின் கல்வித் துறை. எல்லாமும் உள்ளூர் பொருளாதாரத்தையும், உள்ளூர் பண்பாட்டையும் உள்ளூர் மொழி வளத்தையும், இன்னும் சொல்லப்போனால், அந்தந்த பகுதிகளில் வசிக்கும் பிற நாட்டினர், பிற மொழியினர் என யாவற்றையும் கருத்தில் கொண்டு, பள்ளியில் பயிலும் பல்வேறு நாட்டினருக்கு பல பண்பாடுகளைப் பின்பற்றுவோருக்கும் ஏற்ப நாளாந்த நடைமுறைகளை மாற்றியமைத்துக் கல்வி வழங்கிவருகின்றனர் ஃபின்லாந்துக் கல்வித் துறையினர்.

2016க்கு பிறகான மாற்றம்

  • அதேபோல், 2016இல் இருந்து ஒவ்வொரு பள்ளி மாணவரும் பன்முகப் பாடங்களில் (multi-disciplinary) ஒன்றையும் குறிப்பிடத்தக்கக் கூறுகளில் (phenomena-based learning) ஒன்றயும் ஒவ்வொரு ஆண்டு பயில வேண்டும். அதன் பாடத்திட்டத்தையும், வகுப்பு நேரத்தையும் பள்ளிகளே முடிவுசெய்யும். மரபுசார் பாடத்திட்டங்களைப் பயிலும் பொழுது ஒவ்வொரு மாணவரும் ஒரு குறிப்பிட்ட செயல்முறைத் திட்டங்களை நிறைவு செய்தல் வேண்டும். அவ்வகையில், 320 உள்ளாட்சிகளிலும் 320 விதமான புதிய கூர்நோக்குச் சிந்தனைகளைப் பெற முடியும் என்று கணித்தனர்.
  • பள்ளிகளின் ஆசிரியர், ஆசிரியைகளின் அனுபவங்கள் வழியாகவும் மாணவ, மாணவியரின் செயல்முறைத் திட்டங்களின் வழியாகவும் கிடைக்கும் தரவுகளை ஆய்வுசெய்து, பல்வேறு நடைமுறை மாற்றங்களையும் ஃபின்லாந்துக் கல்வித் துறை செய்ய பரிந்துரைக்கும்.
  • குறிப்பிடத்தக்கக் கூறுகளில் (phenomena-based learning) நடைமுறைப்படுத்தப்படும் கல்வியில் மாணவ, மாணவியர்களின் பாட வடிவமைப்பிலான பங்களிப்பையும் உறுதிசெய்துவருகின்றது ஃபின்லாந்துக் கல்வித் துறை. பாட நேரம், பாடம் கற்பிக்கும் முறைகள் உள்ளிட்டவைகளைத் தங்கள் அனுபவத்தில் இருந்து அடுத்த மாற்றங்களுக்கான வழிகாட்டியாகவும் மாணவச் செல்வங்களை உள்ளடக்கியுள்ளனர்.
  • ஃபின்லாந்து ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்சி பேராசிரியர்கள், கல்வித் துறை அமைச்சக பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆசிரியர் சங்கங்கள், மாணவர் சங்கங்கள், பள்ளி முதல்வர்களின் சங்கங்கள் என அனைவரும் இணைந்து நடத்தும் கருத்தரங்கள், மாநாடுகள், ஆராய்ச்சிகள், ஆசிரியர் பயிற்சிக் கல்வியின் பொழுதான கள ஆராய்ச்சிகள் கட்டுரைகள், ஆய்வேடுகள், இவர்களால் நடத்தப்பட்ட முன்னோடித் திட்டங்கள் (pilot projects) இவை அனைத்திலும் இருந்து கிடைக்கப்பெறும் அனுபவங்களை முன்னிறுத்தியே ஒவ்வொரு மாற்றத்தையும் ஃபின்லாந்துக் கல்வித் துறையினர் வடிவமைகின்றனர். 

நன்றி: அருஞ்சொல் (20 – 11 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories