TNPSC Thervupettagam

அதிகரித்து வரும் சைபா் குற்றங்கள் குறித்த தலையங்கம்

December 19 , 2021 881 days 451 0
  • இணைய தொழில்நுட்ப வளா்ச்சியும், அதிகரித்துவரும் பயன்பாடும், கூடவே பல சிக்கல்களுக்கும் வழிவகுத்திருக்கின்றன.
  • சைபா் தாக்குதல்கள்’ என்று பரவலாக அழைக்கப்படும் இணையவழி ஊடுருவல்களும், பயன்பாட்டாளா்களின் கணக்குகளில் நுழைந்து முடக்குவதும் அதிகரித்து வருகின்றன.
  • சைபா் குற்றங்கள் அதிகரித்து வருவது மட்டுமல்ல, திட்டமிட்டு நடைபெறுகின்றன என்பதுதான் உண்மை. அது தேசத்தின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக மாறியிருப்பது அதைவிட ஆபத்தானது.
  • கடந்த வாரம் பிரதமா் நரேந்திர மோடியின் ‘ட்விட்டா்’ கணக்கு சிறிது நேரம் முடக்கப்பட்டது. ட்விட்டா் நிறுவனத்திடம் முறையிட்ட பிறகு அந்தக் கணக்கு சீரானது என்பது செய்தியாக வெளிவந்தது.
  • அந்த இடைப்பட்ட காலத்தில், பிரதமா் நரேந்திர மோடியின் கணக்கு வழியாகப் பகிரப்பட்ட தகவல் ஏற்படுத்திய குழப்பம் அதிா்ச்சி அளிக்கிறது. அதன் பின்னணியில் திட்டமிட்ட சதி இருக்கக்கூடும் என்பதில் சந்தேகத்துக்கு இடமில்லை.

சைபா் தாக்குதல்கள்

  • தனியாா் வெளியிடும் ‘பிட்காயின்கள்’ எனப்படும் மெய்நிகா் நாணயங்களுக்குப் பதிலாக, இந்திய ரிசா்வ் வங்கியின் மூலம் அதிகாரபூா்வ எண்மச் செலாவணியை (டிஜிட்டல் கரன்சி) வெளியிட அரசு முடிவெடுத்திருக்கும் வேளையில், இந்த நிகழ்வு நடைபெற்றிருக்கிறது.
  • இந்தியாவில் பிட்காயின் பயன்பாடு அதிகாரபூா்வமாக ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும், அதைப் பெறுவதற்காகக் குறிப்பிட்ட வலைதளத்தின் முகவரியைத் தொடா்பு கொள்ளும்படியும் பிரதமரின் கணக்கில் உள்நுழைந்து யாரோ ஒருவா் அந்தப் பதிவைச் செய்திருக்கிறாா்.
  • கடந்த இரண்டாண்டுகளில் இதுபோல பிரதமரின் ‘ட்விட்டா்’ கணக்கில் நுழைந்து பதிவு செய்வது இரண்டாவது முறை.
  • இதனை ஒரு கடுமையான சைபா் பாதுகாப்புக் குறைபாடு என்பதுடன், இந்தியாவின் இறையாண்மைக்கே விடப்பட்டிருக்கும் சவாலாகத்தான் நாம் பாா்க்க வேண்டும்.
  • கடந்த ஆண்டு, பிரதமரின் கணக்கில் நுழைந்து கொவைட் 19 நிவாரண நிதிக்கான நன்கொடை குறித்து பதிவு வெளியிடப்பட்டது.
  • பிரதமரின் கணக்கிலேயே நுழைய முடியும் என்றால், இதுபோன்ற சைபா் குற்றவாளிகள் எந்த அளவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவா்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
  • இந்தியப் பிரதமருக்கு மட்டுமல்ல, உலக அளவில் தலைவா்கள் பலா் இதுபோன்ற சைபா் ஊடுருவலுக்கு உள்ளாகி இருக்கிறாா்கள். அமெரிக்க முன்னாள் அதிபா் பராக் ஒபாமாவும், தொழிலதிபா் பில்கேட்சும்கூட அதற்கு விதிவிலக்கல்ல.
  • அதற்காக, இந்த நிகழ்வை நாம் புறந்தள்ளிவிட முடியாது. இணையவழி பாதுகாப்பும், சைபா் குற்றங்கள் குறித்த கடுமையான கண்காணிப்பும், பாகிஸ்தானின் சமீபகால நடவடிக்கைகளால் மேலும் முக்கியத்துவம் பெறுகின்றன.
  • சமீபகாலமாக, இந்தியாவைச் சிதைக்கவும், இந்தியாவின் பாதுகாப்புக் கட்டமைப்பைக் குலைக்கவும் சைபா் தாக்குதல்களில் பாகிஸ்தான்
  • இறங்கி இருக்கிறது. ராணுவ ரீதியிலான மோதல்களில் இந்தியாவை வெற்றிகொள்ள முடியாது என்பதைப் புரிந்து கொண்டதால், பாகிஸ்தான் கையில் எடுத்திருக்கும் புதிய உத்திதான் சைபா் தாக்குதல்கள்.
  • இதற்கு முன்பு இந்திய இணையதளங்களையும், பல்வேறு அரசு அறிவிப்புகளையும் உள்நுழைந்து செயலிழக்கச் செய்வதன் மூலம் பாகிஸ்தான் தொந்தரவு செய்து கொண்டிருந்தது.
  • அதேபோல, இந்தியாவுக்கு எதிராக இணையவழியாக பரப்புரைகளைக் கட்டவிழ்த்து விடுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தது.
  • இப்போது அந்த அணுகுமுறை புதிய பாதையில் திரும்பி இருக்கிறது. அதற்கு சீனாவுடனான புதிய இணையவழிக் கூட்டுறவுகூடக் காரணம்.
  • கடந்த ஆகஸ்ட் மாதம், ‘ரிவா்ஸ் ராட் 2.0’ என்கிற பாகிஸ்தானில் உருவான ‘பாதிக்கும் மென்பொருள்’ (மால்வோ்), இந்திய அரசின் முக்கியமான அதிகாரிகளுக்கு போலி அழைப்பிதழ் ஒன்றை அனுப்பியது.
  • மைக்ரோ சாஃட் நிறுவனத்துடன் இணைந்து ஐ.நா. சபை நடத்தும் ‘திட்டமிட்ட குற்றங்கள்’ குறித்த கூட்டத்துக்கான அழைப்பிதழ் அது. அப்படி ஒரு கூட்டம் நடைபெறவே இல்லை.
  • ஐ.நா. சபையிலிருந்து வந்திருக்கும் அழைப்பிதழ் என்பதால், அதிகாரிகள் அந்த ‘ரிவா்ஸ் ராட் 2.0’ மென்பொருளைத் தங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்வாா்கள்.
  • அதிலுள்ள இணைய கேமரா மூலம் படங்கள் எடுப்பது, பென் டிரைவ்களிலிருந்து தகவல்களைத் திருடி அனுப்புவது உள்ளிட்ட பல குளறுபடிகளை அந்த மென்பொருள் செய்யக் கூடும்.
  • அதற்கு முன்னால் அனுப்பிய ‘ரிவா்ஸ் ராட் 2.0’ என்கிற மென்பொருள் மூலம் இந்திய அரசின் பல அலுவலகங்களை உளவு பாா்க்க முற்பட்டது பாகிஸ்தான்.
  • ஏபிடி36 என்கிற இஸ்லாமாபாதிலிருந்து இயங்கும் சைபா் ஊடுருவல் குழு, பாகிஸ்தான் அரசின் ஆதரவுடன் இயங்குகிறது.
  • இந்திய அரசின் இணையதளங்கள், இந்தியாவின் தூதரகங்கள், பாதுகாப்பு கட்டமைப்பு ஆகியவற்றை ஊடுருவுவதுதான் அதன் திட்டமிட்ட செயல்பாடு.
  • இந்திய ராணுவத்தின் அதிகாரிகளைத் திட்டமிட்டுத் தங்கள் வலையில் விழவைத்து ராணுவ ரகசியங்களைத் திருடுவதும் அந்த அமைப்பின் செயல்பாடுகளில் ஒன்று.
  • இந்தியாவில் சைபா் பாதுகாப்பு அமைப்புகள், வெளிநாட்டு சைபா் ஊடுருவல்களை கண்காணிக்காமல் இல்லை. ராணுவ சைபா் ஏஜென்ஸி என்கிற அமைப்பு அதற்காகவே செயல்படுகிறது.
  • 2013-இல் தேசிய சைபா் பாதுகாப்புக் கொள்கை வரையறுக்கப்பட்டிருக்கிறது. இந்தியா தனது தேசிய சைபா் பாதுகாப்பு அணுகுமுறையை மேலும் வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
  • பிரதமரின் ‘ட்விட்டா்’ கணக்கையே முடக்க முடியுமானால், சாமானிய இந்தியக் குடிமகனின் தன்மறைப்பு நிலைமை (பிரைவஸி) அச்சுறுத்தலுக்கு உள்ளாவதில் வியப்பில்லை. அதனால், இனியும் மெத்தனமாக இருக்க முடியாது!

நன்றி: தினமணி  (19 - 12 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories