TNPSC Thervupettagam

உரக் கொள்கை

December 20 , 2021 878 days 607 0
  • கடந்த 10 நாட்களாகக் காவிரிப் படுகை முழுவதும் பொட்டாஷ் உரப் பற்றாக்குறையாலும் அதன் விலை உயர்வாலும் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
  • உற்சாகமாகத் தொடங்கிய 4.5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி, அதனைத் தொடர்ந்து சுமார் 15 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி இவை இரண்டுமே கூடுதல் பருவமழை காரணமாகக் கடும் பாதிப்புக்கு உள்ளாகின.
  • சில லட்சம் ஏக்கர், முழுமையாகப் பாதிப்பிலிருந்து மீள முடியாத சூழலிலும், பல லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி என்பது ஓரளவு மீண்டு வந்துள்ளது.
  • பயிர்களுக்குச் சாம்பல் சத்துக்கு பொட்டாஷ் உரம் பயன்படுத்துவது வழக்கம். இந்த ஆண்டு இயற்கைச் சீற்றம் காரணமாகச் சாம்பல் சத்து சற்றுக் கூடுதலாகத் தேவைப் படுகிறது.
  • குறிப்பாக, தொடர் மழையின் காரணமாகப் பயிர்கள் கூடுதல் தழைச்சத்து பெற்று வளர்ந்தபோதும், அவற்றின் தண்டுப் பகுதி அழுத்தமாக இருந்தால்தான் சிறந்த விளைச்சலையும் பாதிப்பில்லாத அறுவடையையும் பார்க்க இயலும்.
  • அதற்குச் சாம்பல் சத்து இன்றியமையாதது. நடவு செய்த 50-60 நாட்களிலும், மேலும் 70-80 நாட்களிலும் பொட்டாஷ் உரம் நெற்பயிர்களுக்குத் தேவை.

தேவை மறுபரிசீலனை

  • 2010-ல் மத்திய அரசால் ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியம் (NBS) என்ற கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. உணவு உற்பத்தியில் தன்னிறைவு, அதிக வேளாண் உற்பத்தி, சரியான அளவில் ரசாயன உரங்களைப் பயன்படுத்துதல் போன்ற காரணங்களுக்காக அத்திட்டம் கொண்டுவரப்பட்டது.
  • புதிய மானியக் கொள்கைக்குப் பிறகு, மானியத்தின் விலை நிரந்தரமாகவும் சர்வதேச விலையின் உயர்வுக்கு ஏற்ப உர உற்பத்தி நிறுவனங்கள் விலையை நிர்ணயித்துக் கொள்ளும் அதிகாரம் வழங்கப்பட்டது.
  • இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் மானியம் அறிவிக்கப்படும், உரத்தின் விலையை நிறுவனங்கள் தங்கள் லாபத்துக்கு ஏற்ப நிர்ணயம்செய்துவருகின்றன.
  • நைட்ரஜன், பாஸ்பேட், பொட்டாஷ், சல்பர் ஆகிய உரங்களுக்கு ஒரு கிலோவுக்கான மானியத் தொகை ஆண்டுதோறும் அரசால் அறிவிக்கப்படுகிறது.
  • அதிகப் பயன்பாட்டில் உள்ள தழைச்சத்து உரமான யூரியாவுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, பழைய முறையிலேயே தொடர்ந்து மானியம் வழங்கப்பட்டு, 2002 முதல் பெரிய மாற்றங்கள் இல்லாமல் சீரான விலையில் கிடைக்கிறது.
  • ஆனால் பாஸ்பேட், பொட்டாஷ் மற்றும் கலப்பு உரங்களுக்குப் புதிய கொள்கை நடைமுறைப் படுத்தப்பட்டது.
  • சர்வதேச அளவில் உர விலையில் ஏற்படும் மாற்றங்களாலும், மத்திய அரசால் தொடர்ந்து குறைக்கப்பட்ட மானியத்தாலும் டிஏபி, பொட்டாஷ் மற்றும் கலப்பு உரங்கள் கடந்த பத்து ஆண்டுகளில் கடும் விலை உயர்வைச் சந்தித்துள்ளன.
  • பொட்டாஷ் உரத்தைப் பொறுத்தவரை 2011-12-ல் ஒரு கிலோவுக்கான மானியம் ரூ.26.75 ஆக இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாகக் குறைக்கப்பட்டு 2021-22-ல் ரூ.10.11 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • அதனால், 60% பொட்டாஷ் அடங்கிய பொட்டாசியம் குளோரைடு ஒரு டன்னுக்கு 2011-12-ல் ரூ.16,054 மானியம் என்ற நிலையிலிருந்து 2021-22-ல் ரூ. 6,070 ஆகக் குறைந்துள்ளது.
  • 2002 முதல் 2010 வரை விலையில் மாற்றம் இல்லாமல் 50 கிலோ மூட்டைக்கு ரூ.225 ஆக இருந்த பொட்டாஷ் விலை கடந்த சில ஆண்டுகளில் ரூ.875 ஆக உயர்ந்து, இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ.1,040 விலை உயர்ந்தது.
  • தற்போது ரூ.1,700 என்ற நிலையை எட்டியுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் பொட்டாஷ் விலை பல மடங்குகள் உயர்ந்துள்ள சூழலில் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையானது 2011-12-ல் ஒரு கிலோவுக்கு ரூ.11.10-ஆக இருந்து 2021-22-ல் ரூ.19.60 ஆக மட்டுமே உயர்ந்துள்ளது.
  • விவசாய உற்பத்திப் பொருள் ஒரு மடங்கு விலையேற்றம்கூடக் காணாத நிலை வேறு. 2011-12-ல் டிஏபிக்கான ஒரு டன் மானியம் ரூ.19,763. அதுவும் படிப்படியாகக் குறைக்கப்பட்டு 2020-21-ல் டன்னுக்கு ரூபாய் 10,231 என்று அறிவிக்கப்பட்டது. இதனால் டிஏபி மற்றும் அது சார்ந்த கலப்பு உரங்கள் விலையேற்றம் கண்டன.
  • விவசாயிகளின் எதிர்ப்பு காரணமாக இந்த ஆண்டு டிஏபிக்கான மானியம் டன்னுக்கு ரூ.24,331 ஆக அதிகரிக்கப்பட்டது. ரசாயன உரங்களைப் பொறுத்தவரை நாம் பெரும்பாலும் இறக்குமதியைச் சார்ந்துள்ளோம். யூரியா 20%, டிஏபி 68%, பொட்டாஷ் 100% இறக்குமதியைச் சார்ந்துள்ளன.
  • விலை உயர்வுக்கு அதுதான் காரணமாகச் சொல்லப்பட்டாலும் யூரியாவுக்கும் டிஏபிக்கும் உயர்த்தப்பட்டதுபோல் கூடுதல் மானியத்தை உயர்த்துவதன் மூலம் பொட்டாஷ் விலையை மத்திய அரசால் குறைக்க முடியும்.
  • மத்திய அரசு, சர்க்கரை ஆலைக் கழிவிலிருந்து தயாரிக்கப்படும் பொட்டாஷ் உரத்துக்கு இந்த ஆண்டு 50 கிலோ மூட்டைக்கு ரூ.73 மானியம் வழங்கும் என்றும், இதற்காக ரூ.156 கோடி செலவிடப்படும் என்றும் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
  • இதனால், அந்நியச் செலாவணியைக் குறைக்க வாய்ப்புள்ளதால், இதனுடைய மானியத் தொகையை உயர்த்தி, குறைந்த விலையில் கிடைக்கும்படி செய்தால், வெளிநாட்டு இறக்குமதியும் குறையும், நமது நாட்டின் சர்க்கரை ஆலைகளுக்கும் கூடுதல் பலன் கிடைக்கும்.
  • கரோனா காலகட்டத்திலும் இந்தியாவில் அதிக உற்பத்தியையும் வேலைவாய்ப்பையும் வழங்கியது வேளாண் துறை மட்டுமே.
  • விதைநெல், உரம், பூச்சிக்கொல்லி, நோய் எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட விவசாய இடுபொருட்களின் விலை உயர்வு, விவசாயத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு, தொடரும் இயற்கைப் பேரிடர்கள் ஏற்படுத்தும் பாதிப்பு, சந்தை விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் இவற்றையும் மீறி விவசாயிகள் உற்பத்தியைப் பெருக்கி, உணவுப் பற்றாக்குறை இல்லாத நாடாக இந்தியாவை மாற்றியிருக்கிறார்கள்.
  • விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்வதற்கு உர மானியத்தை உயர்த்துவதோடு இதர இடுபொருட்களின் விலையையும் அரசின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டுவருவதன் மூலம் விவசாயிகளின் செலவுகளைக் குறைக்க முடியும்.
  • மேலும், ஆண்டுதோறும் ஏற்படும் செலவுகளுக்கு ஏற்பக் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம்செய்து, அதற்கு சட்டபூர்வமான வழிமுறையை உருவாக்குவதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது என்ற மத்திய அரசின் திட்டம் சாத்தியமாகும்.

நன்றி: இந்து தமிழ் திசை (20 - 12 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories