TNPSC Thervupettagam

செமிகண்டக்டர் உற்பத்திக்கு ஊக்கத்தொகைத் திட்டம்: வரவேற்புக்குரிய முடிவு

December 20 , 2021 878 days 392 0
  • அடுத்து வரும் ஆறு ஆண்டுகளுக்கு அரைக் கடத்தி (செமிகண்டக்டர்) உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் ரூ.76,000 கோடி வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது, தொழிற்துறையின் வளர்ச்சிக்குத் தொலைநோக்குடன் உதவக்கூடிய முக்கியமான முடிவாகும்.
  • அரைக் கடத்தி வடிவமைப்பில் ஈடுபடும் உலகளாவிய தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் இயங்கி வந்தபோதிலும், அவற்றை உற்பத்தி செய்வதில் பற்றாக்குறை நிலையே நிலவி வருகிறது.
  • மத்திய அரசின் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தால், இப்பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும் என்பதால், இம்முடிவு வரவேற்புக்குரிய ஒன்று.
  • சிலிக்கான் மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் அரைக் கடத்திகளைக் கொண்டு தான் வாகனங்கள், மின்சாதனங்கள், இயந்திரங்களுக்குத் தேவைப்படும் சில்லு (சிப்) வடிவமைக்கப்படுகிறது.
  • திறன்பேசிகள் (ஸ்மார்ட்போன்), மடிக்கணினிகள் என அன்றாடப் பயன்பாட்டில் உள்ள தகவல் தொடர்பு சாதனங்கள் அனைத்தும் இந்த சில்லுத் தொழில்நுட்பத்தாலேயே இயங்குகின்றன.
  • கரோனா காலத்தில் வீட்டிலிருந்தே பணிபுரிவதும், மெய்நிகர் வகுப்புகளில் கலந்து கொள்வதும் புதிய இயல்புகளாக மாறியுள்ளன. இதனால், தகவல் தொடர்பு சாதனங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.
  • ஆனால், மின்சாதனங்களின் தயாரிப்புக்குத் தேவையான அடிப்படைப் பொருட்களில் ஒன்றான சில்லு உற்பத்தியோ பொதுமுடக்கத்தின் காரணமாகக் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளது.
  • அரைக் கடத்தி உற்பத்தியில் ஏற்பட்ட தேக்க நிலையானது அதன் தொடர்ச்சியாக வாகனத் தயாரிப்பு, மின்சாதனங்கள் தயாரிப்பு ஆகியவற்றிலும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
  • குறிப்பாக, வாகனத் தயாரிப்புத் துறையில் உற்பத்தி வெகுவாகக் குறைந்ததால் சென்னை போன்ற நகரங்களில் அத்துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் வேலையிழப்பையும் ஊதிய வெட்டுகளையும் சந்திக்க நேரிட்டுள்ளது.
  • சில்லு உற்பத்தியில் ஏற்பட்ட சுணக்கத்தின் காரணமான இந்தப் பாதிப்புகள் அடுத்து வரும் ஆண்டுகளிலும் நீடிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
  • மேலும், பெட்ரோலை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் வாகனங்களுக்கு மாற்றாக மின்சக்தியால் இயங்கும் வாகனங்களின் உற்பத்தி ஊக்குவிக்கப்பட்டுவரும் இந்நாட்களில், அரைக் கடத்திகளின் தேவை மேலும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
  • சீனாவிலும் கொரியாவிலும் சில்லுகளின் உற்பத்தியில் தீவிரக் கவனம் செலுத்தப் பட்டு வரும் நிலையில், இந்தியாவும் அதில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.
  • இதையடுத்து, இஸ்ரேலின் ‘டவர் செமிகண்டக்டர்’, ‘ஆப்பிள்’ நிறுவனத்தின் ஒப்பந்ததாரரான ‘பாக்ஸ்கான்’, சிங்கப்பூரை மையமாகக் கொண்டு இயங்கிவரும் ‘கன்சார்டியம்’ போன்ற இத்துறையின் முன்னணி நிறுவனங்கள் இந்தியாவில் சில்லுத் தொழிற்சாலைகளைத் தொடங்கும் விருப்பத்தில் இருப்பதாகத் தெரிகிறது.
  • உள்நாட்டிலேயே சில்லுகளின் தயாரிப்புக்கு வாய்ப்பிருக்கும்பட்சத்தில் வாகனங்கள், மின்சாதனங்களின் உற்பத்தியும் அதிகரிக்கும்.
  • அரைக் கடத்திகளைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்குவதற்கு மத்திய அரசின் ஊக்கத் தொகை உதவிகள் மட்டும் போதாது. மாநில அரசுகளின் ஆதரவும் முக்கியமானது என்பதையும் தொழில் துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
  • சில்லுகளின் தொழிற்சாலைகளுக்குத் தடையில்லாத மின்சக்தி, அதிக அளவிலான நன்னீர், பெரும் பரப்பிலான நிலம் ஆகியவை அத்தியாவசியத் தேவைகள்.
  • தொழிற்சாலைகளிலிருந்து சாலைகள் மற்றும் ரயில் போக்குவரத்தும் விரும்பப்படுகிறது. எனவே, சில்லுத் தொழிற்சாலைகளின் தேவைகளைப் பூர்த்திசெய்ய வேண்டிய பொறுப்பு மாநில அரசுகளுக்கும் இருக்கிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (20 - 12 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories