TNPSC Thervupettagam

ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை!

July 3 , 2021 1030 days 792 0
  • அரசியல் சாசனப் பிரிவு 21-இன் கீழ், வாழ்வதற்கான அடிப்படை உரிமை என்பது உணவுக்கான உரிமையையும் உள்ளடக்கியது என்று கருத்து தெரிவித்திருக்கிறது உச்சநீதிமன்றம்.
  • இந்த மாத இறுதிக்குள் அனைத்து மாநிலங்களும் 'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை' திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்துகிறது, கடந்த செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்றம் பிறப்பித்திருக்கும் உத்தரவு.
  • வரவேற்புற்குரிய உத்தரவுதான் இது என்றாலும்கூட, எந்த அளவுக்கு நடைமுறை சாத்தியம் என்பதை ஆராயத் தோன்றுகிறது.
  • நீதிமன்றம் உத்தரவுகள் பிறப்பிப்பது என்பது வேறு, நிர்வாக ரீதியாக அவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்துவது என்பது வேறு.
  • அனைவருக்கும் உணவு என்கிற அடிப்படையில் உச்சநீதிமன்றத்தின் அக்கறையும் உத்தரவும் ஐயப்பாட்டுக்கு இடமில்லாமல் வரவேற்புற்குரியவை.
  • முந்தைய மன்மோகன் சிங் அரசின் 'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை' என்கிற கனவுத் திட்டத்தை, கடந்த மூன்று ஆண்டுகளாக மோடி அரசும் நிறைவேற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறது என்பதை இங்கே குறிப்பிட வேண்டும்.

உச்சநீதிமன்ற உத்தரவு

  • இந்தியாவின் பொது விநியோகக் கட்டமைப்பின் கீழ் 81.4 கோடி பயனாளிகள் காணப் படுகிறார்கள்.
  • கிராமப்புறத்தில் 75%, நகர்ப்புறத்தில் 50% மக்கள் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக உணவுப் பாதுகாப்பைப் பெறுகிறார்கள்.
  • இந்தியாவிலுள்ள 28 மாநிலங்களும், எட்டு ஒன்றிய பிரதேசங்களும் 'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை' திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான கட்டமைப்புடன் இருக்கின்றன.
  • இன்றைய நிலையில் 92% நியாய விலைக் கடைகள் மின்னணு விற்பனை இயந்திரங்களால் இணைக்கப்பட்டிருக்கின்றன. 91% குடும்ப அட்டைகள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன.
  • அதனால் 'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை' திட்டத்தை நிறைவேற்றுவது சிரமமாக இருக்காது என்று உச்சநீதிமன்ற விவாதத்தின்போது மனுதாரர் சார்பில் வாதிடப்பட்டது.
  • கடந்த மார்ச் மாத நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையின்படி அஸ்ஸாம், தில்லி இரண்டு மாநிலங்களிலும் நியாயவிலைக் கடைகள் இன்னும் முழுமையாக மின்னணு விற்பனை இயந்திரங்களால் இணைக்கப்படவில்லை.
  • மேற்கு வங்கத்தில் குடும்ப அட்டை களில் 80%தான் ஆதார் அட்டையுடன் இணைக்கப் பட்டிருக்கின்றன.
  • சத்தீஸ்கரில் ஆதார் அட்டை இணைப்பு இன்னும் பாதிகூட நிறைவுபெறவில்லை. நிர்வாகம் முனைப்புக் காட்டினால் இந்தக் குறைபாடுகளை அகற்றுவது பெரிய பிரச்னையாக இருக்காது.
  • கடந்த ஆண்டு பொது முடக்கத்தின்போது மத்திய அரசு அறிவித்த ரூ.3,500 கோடி மதிப்பிலான எட்டு லட்சம் டன் கோதுமை, அரிசி மட்டுமல்லாமல் 50,000 டன் பருப்பு உள்ளிட்டவை இந்தியா முழுவதும் விநியோகிக்க முடிந்ததற்கு நியாயவிலைக் கடை கட்டமைப்புதான் காரணம்.
  • அதே நேரத்தில், வேலையில்லாததால் வருவாய் இழந்து தத்தளித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், நியாயவிலைக் கடைகளில் பொது விநியோக சட்டத்தின் அடிப்படையில் உணவு மானியத்தை பெற முடியவில்லை.
  • எல்லா மாநிலங்களும் தங்கள் மாநிலத்தவர்க்கு நிவாரணம் வழங்குவதில் காட்டிய முனைப்பை, புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் காட்டவில்லை.
  • ஏனென்றால், அவர்களுக்கு குடும்ப அட்டையும் இல்லை, வாக்குரிமையும் இல்லை. அதனால்தான் 'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை' என்கிற திட்டம் இந்தப் பிரச்னைக்குத் தீர்வாகப் பலராலும் முன்மொழியப்படுகிறது.
  • இந்தியப் பொருளாதார ஆய்வறிக்கை 2017-இன்படி, 2011-16 ஆண்டுகளுக்கு இடையில் ஏறத்தாழ 90 லட்சம் பேர் ஆண்டுதோறும் மாநிலங்களுக்கு இடையில் பணி நிமித்தமாக இடம் பெயர்கிறார்கள்.
  • மிக அதிகமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் காணப்படுவது மனைவணிகம் - குடியிருப்புக் கட்டுமானத் தொழிலில்தான்.
  • ஏறத்தாழ நான்கு கோடி பேர் அந்தத் துறையில் பணியாற்றுகிறார்கள். அடுத்தாற்போல செங்கல் சூளை (1 கோடி), சுரங்கம், போக்குவரத்து, ஹோட்டல் உள்ளிட்டவை அதிகளவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகின்றன.
  • புலம்பெயர்தல் என்பது தொழில்மயமாதல், நகர்மயமாதல் ஆகியவற்றிலிருந்து பிரிக்க முடியாதது என்பதை உலகிலுள்ள எல்லா நாடுகளுமே அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கின்றன.
  • வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியர்கள் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் புலம்பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
  • அந்த நிலையில் இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களும் தங்களது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமான புலம் பெயர்ந்தவர்களின் நலனை உறுதிப்படுத்தியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
  • 'மண்ணின் மைந்தர்களுக்கே முன்னுரிமை' என்கிற வாதம் இனிமேலும் எடுபடுமா என்பது சந்தேகம்தான்.
  • தமிழ்நாடு உள்பட தொழில் துறையில் முன்னேற விழையும் எந்தவொரு மாநிலமும் தனது எல்லையை மற்ற மாநிலத்தவர்களுக்கு மூடி வைப்பது என்பது இனி இயலாத ஒன்று.
  • செல்லிடப்பேசி எண்ணை மாற்றாமல் எப்படி ஒரு சேவை நிறுவனத்திடமிருந்து இன்னொரு சேவை நிறுவனத்துக்கு மாற முடிகிறதோ, அதேபோல குடும்ப அட்டைகளும் எண்மப் பதிவு செய்யப்பட்டு, இணைய வழியில் மாநிலத்துக்கு மாநிலம் மாற்றுவதற்கான வழிமுறையை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
  • ரேஷன் பெறும் உரிமை மட்டுமல்ல, பணிபுரியும் இடத்தில் வாக்களிக்கும் உரிமையும் வழங்கப்படும்போதுதான் புலம்பெயர்ந்தவர்களின் அடிப்படை உரிமையும் பாதுகாப்பும் உறுதிப்படும்.
  • 'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை' என்பது சாத்தியம்தான். அதேநேரத்தில், அதற்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு விதிப்பதும், நிர்வாக ரீதியான திட்டமிடல் இல்லாமல் இருப்பதும் குழப்பத்தைத்தான் விளைவிக்கும்.

நன்றி: தினமணி  (03 - 07 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories