TNPSC Thervupettagam

கடல்வளத்தைக் கெடுக்கும் இறால் பண்ணைகள்

August 30 , 2021 979 days 562 0
  • தமிழ்நாட்டில் உவர்நீர் இறால் பண்ணைப் பூங்காக்கள் அமைக்க தமிழ்நாடு அரசு 2020-ல் திட்டமிட்டது.
  • மாநில அரசின் ஏற்பாட்டில், மைய உவர்நீர்ப் பண்ணை நிறுவனம் (CIBA, சென்னை) 2017-ல் தொலையுணரி-புவி தரவுத் தொகுப்பு (Remote sensing - Geographical Information System) தொழில்நுட்பத்தின் உதவியுடன், தமிழ்நாட்டுக் கடற்கரைகளில் இறால் பண்ணை அமைப்பதற்குப் பொருத்தமான நிலங்களைப் பட்டியலிட்டது.
  • விழுப்புரம், கடலூர், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் உள்ள மாநிலக் கடலோரங்களின் கழிமுகங்கள், காயல்கள், ஓடைகள் உள்ளிட்ட 56,000 ஹெக்டேர் உவர்நீர்ப் பரப்புகளில் 10%-தான் இறால் பண்ணைகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் அதிகமான பரப்புகளில் இறால் வளர்ப்புக்கு வாய்ப்புள்ளதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டிருந்தது.
  • இந்த ஆய்வின் பின்னணியில், மக்கள் இறால் பண்ணைகளில் மிகுதியாக முதலீடு செய்வதற்கு இசைவாக அடிப்படை வசதிகளை வழங்கும் வகையில் ‘சிப்காட்- மாதிரி’ இறால் பண்ணைப் பூங்காக்களை நிறுவ முந்தைய அரசு திட்டமிட்டது. மையப்படுத்திய நீர்வழங்கல் கட்டமைவு, கழிவுக் குட்டைகள், குஞ்சு பொரிப்பகம், சினை இருப்பு மேலாண்மை வசதிகளை உட்படுத்தி அமைக்கப்படும் என்று மாநில மீன்வளத் துறை அறிவித்தது. வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் முயற்சி இது.
  • 1980-களின் இறுதியில் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியக் கடற்கரைகளில் உவர்நீர் இறால் வளர்ப்பில் ஈடுபடத் தொடங்கின.
  • ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தின்கீழ் அதற்குச் சாதகமாகக் கொள்கைகள் வகுக்கப் பட்டன. ஒன்றிய அரசு மீன் வளர்ப்போர் வளர்ச்சி முகமை, அதைத் தொடர்ந்து உருவான உவர்நீர் மீன் வளர்ப்போர் வளர்ச்சி முகமை ஆகிய இரண்டு அமைப்புகளுக்கும் ஆதரவாகச் செயல்பட்டது.
  • 80,000 ஹெக்டேர் நிலங்கள் இறால் பண்ணைகளாக மாற்றப்பட்டிருந்தன. 1993-ல் ஆண்டுக்கு 70,000 டன்னாக இருந்த கடலுணவு ஏற்றுமதியை கி.பி.2000-த்துக்குள் 2,00,000 டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
  • ‘நீலப் புரட்சித் திட்டம்’ மீனவர் வளர்ச்சித் திட்டங்களை உட்படுத்துவதாக ஒன்றிய அரசு குறிப்பிட்டது எனினும் பெருநிறுவனங்கள் லாபம் ஈட்டுவதற்கே அத்திட்டம் உதவியது. 1993-94-ல் ஆறு இறால் வளர்ப்பு நிறுவனங்கள் ஈட்டிய சராசரி நிகர லாபம் 300%.

அரசின் கடமையாகும்

  • 1990-களில் பெரும் வளர்ச்சி கண்ட உவர்நீர் இறால் வளர்ப்பு 2004 சுனாமிக்குப் பிறகு வீழ்ச்சியைச் சந்தித்தது. இடைக்காலத்தில் மிகுதியான நச்சு அளவின் காரணமாக இறக்குமதியாளர்கள் இந்திய இறாலை ஏற்கவில்லை.
  • 2009-ல் லிடொபெனேயஸ் வானமி (Litopenaeus vannamei) என்னும் அயல் இன இறாலின் அறிமுகத்தோடு கடற்கரைகளில் இறால் பண்ணைகள் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தன. இந்தியாவின் உவர்நீர்/ கடல் இறால் ஏற்றுமதியில் வானமி இறாலின் பங்கு 80% (கடலுணவு ஏற்றுமதியில் 50%).
  • 1,350 ஹெக்டேர் பரப்பில் அமைந்த பிச்சாவரம் கண்டல் வனம் 17 கிராமங்களிலுள்ள மக்களுக்குப் பகுதி/ முழுமையான வாழ்வாதாரமாக இருந்துவந்தது (மீன் அறுவடை ஆண்டுக்கு 245 டன்).
  • கிள்ளைச் சதுப்புநிலம் ஆண்டுக்கு 100 டன்களுக்குக் குறையாத இறால் அறுவடை தந்து கொண்டிருந்தது.
  • இறால் பண்ணைகள் கண்டல் வனங்கள், சதுப்புகளிலிருந்து இடையறாது நீரைக் கணக்கின்றி உறிஞ்சியெடுத்ததன் விளைவாகப் பிச்சாவரம்-கிள்ளை உவர்நீர்ப் பரப்புகள் சுருங்கிப் போயின; இறால் பண்ணைக் கழிவுகளை இந்நீர்நிலைகளிலும் கடலிலும் கலக்க விட்டதால் மீன்வளம் வீழ்ச்சியடைந்தது.
  • அங்கு வலைவீசும் மீனவர்கள் தோல் நோய்ப் பாதிப்புகளுக்கு உள்ளாயினர். கடற்கரைச் சமூகங்கள் கடலுக்குச் செல்லும் பொதுப்பாதைகள் மறிக்கப்பட்டதால் பாரம்பரிய மீனவர்களின் மீன்பிடித் தொழிலைத் தொடர்வதிலும் சிரமம் ஏற்பட்டது.
  • கிள்ளை இறால் பண்ணைகள் ஐந்து வருவாய்க் கிராமங்களைச் சார்ந்த விவசாயிகளுக்குக் கொடுங்கனவானது. நெல்லோ நிலக்கடலையோ எதுவும் இந்த மண்ணில் முளைக்கவில்லை.
  • அருமையான விளைச்சல் தந்துவந்த நிலங்கள் மேல்மண் உவர்ப்பாகி விவசாயத்துக்குத் தகுதியற்றுப் போய்விட்டன.
  • குடிநீர்ப் பஞ்சம் ஏற்பட்டது. வேளாண் நிலங்களில் உவர்நீர் ஏற்றத்தினால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. அவர்கள் அகதிகளாகி நகர்ப்புறங்களுக்கு இடம்பெயரத் தொடங்கினர்.
  • பாக் நீரிணைப் பகுதி ஆழம் குறைவான இடம். ஆனால் மீன் உற்பத்தியாகுமிடம். காவிரியாற்று நன்னீரைக் கடலில் கொண்டுசேர்க்கும் முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகளும் சதுப்பு நிலங்களும் மீன்கள் இனப்பெருக்கம் செய்வதற்கும் குஞ்சுகள் வளர்வதற்கும் பொருத்தமான இடங்கள்.
  • தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பாக் நீரிணைக் கடற்கரைகளில் இறால் பண்ணைகளால் வேளாண் நிலங்களும் கரைக்கடல் மீன்வளமும் பாதிப் படைந்துள்ளதாக விவசாயிகளும் மீனவர்களும் தெரிவிக்கின்றனர்.
  • விழுப்புரம் மாவட்டத்தின் 19 கடற்கரைக் கிராமங்களிலும் இறால் பண்ணைகள் இயங்கி வருகின்றன.
  • இந்தியாவின் மொத்த உள்நாட்டு மீன் உற்பத்தியில் ஆந்திரத்தின் பங்கு 37% (36.1 லட்சம் டன்); இதில் பெரும்பகுதி கடலோர இறால் பண்ணைகளின் பங்களிப்பு.
  • ஆனால், மேற்கு கோதாவரி உள்ளிட்ட கடற்கரைகளில் பண்ணைக் கழிவுகளின் வெளியேற்றத்தால் நிலத்தடிநீர் முழுமையாக மாசடைந்துள்ளது.
  • வங்கதேசக் கடற்கரைகளில் வாழும் பெண்களுக்குக் கருப்பை நீக்கு சிகிச்சைகள் மிக அதிக எண்ணிக்கையில் நிகழ்வதாக ஒரு ஊடகர் தனது ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார்.
  • கடலோர உவர்நீர் இறால் பண்ணைகளில் பணிபுரியும் பெண்களுக்கு ஏற்படும் தோல் நோய்தான் கருப்பைக் கோளாறுகளுக்குக் காரணம் எனக் கண்டறிந்துள்ளனர். தமிழ்நாட்டுக் கடலோரத்தில் இயங்கிவரும் 1,892 (பதிவுபெற்ற) இறால் பண்ணைகளில் பெண்களே மிகுதியாக வேலைபார்க்கின்றனர்.
  • பருவநிலை மாற்றத்தால் கடல் மட்டம் உயர்ந்து, கடலோர நிலத்தடி நீர்வளம் உவர்ப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில், இறால் பண்ணைகளின் சூழல், சுகாதாரத் தாக்கம் குறித்து துறைசார் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
  • கிராம சுயராஜ்ய இயக்கத் தலைவர் ஜெகநாதன் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த பொதுநல வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு (1995) கடற்கரையில் இறால் பண்ணைகளைத் தடை செய்ததோடு வழிகாட்டு நெறிமுறைகளையும் வழங்கியது.
  • அவற்றில் ‘விவசாய நிலங்களை இறால் பண்ணைகளாக மாற்றுவதற்கு எதிரான தடை உடனடியாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும், இறால் வளர்ப்புக்காக இறால் குஞ்சுகளைக் கழிமுகங்கள், ஓடைகள், கடலிலிருந்து சேகரிப்பதை உடனடியாகத் தடை செய்ய வேண்டும்’ என்பவை முக்கியமானவை.
  • தமிழ்நாட்டுக் கடலோர விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரத்தை இறால் பண்ணைகளிடமிருந்து மீட்டெடுப்பது அரசின் கடமையாகும்.

நன்றி: இந்து தமிழ் திசை (30 - 08 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories