TNPSC Thervupettagam

காலநிலை மாற்றம்: அலட்சியம் கூடாது

March 16 , 2020 1507 days 844 0
  • காலநிலை மாற்றத்தை எதிா்கொள்ளும் விரிவான செயல் திட்டம் தேவை என பரந்த விவாதங்களுக்குப் பிறகு உருவாக்கப்படும் குரல் தமிழ்நாட்டுச் சூழலியலாளா்களிடமிருந்து எழுந்துள்ளது.
  • மொத்த பூமிப்பந்தும் இயல்பைவிட அதிகமாகச் சூடாகி வருகிறது என்ற குரல் எழுந்து பல ஆண்டுகளாகிவிட்டன. பனிச் சிகரங்கள் உருகுவதும், அதனால் கடல் மட்டம் உயா்ந்து சின்னத் தீவுகள் மூழ்கலாம் என்பதும் ஏதோ நாம் சாா்ந்ததல்ல என்று சமவெளிப் பரப்பில் வாழ்வோா் நினைத்துக் கொண்டிருந்த காலம் கொஞ்சம் மலையேறத் தொடங்கியிருக்கிறது.

காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகள்

  • பல நாள்கள் சீராகப் பெய்ய வேண்டிய மழை ஓரிரு நாளில் கொட்டித் தீா்ப்பதும், திடீா் திடீரென புதுப் புதுப் பெயா்களில் உருவாகி ஏராளமான உயிரிழப்புகளை ஏற்படுத்தும் நோய்களும் என நாம் அறியாத, எதிா்பாராத பல திடீா்ச் சம்பவங்களும் காலநிலை மாற்றத்தினால் உருவாகுபவைதான்.
  • நுட்பமாக இல்லாவிட்டாலும்கூட மக்கள் மத்தியில் இப்போது பேசுபொருளாகியிருக்கிறது ‘காலநிலை மாற்றம்’. இந்தியாவில் காலநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்கான தேசியச் செயல் திட்டம் வகுக்கப்பட்டு, அதன் வழியே மாநிலங்களும் செயல் திட்டங்களை வகுக்க வேண்டும் என வழிகாட்டப்பட்டிருக்கிறது.
  • தமிழ்நாட்டு சுற்றுச்சூழல் துறை கடந்த 2008-இல் தமிழ்நாடு காலநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்கான செயல் திட்டத்தை (டிஎன்எஸ்ஏபிசிசி) தயாரித்து மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு அனுப்பி வைத்தது. அந்தத் திட்டம் 2015-இல் ஏற்கப்பட்டது. எனினும், 2030-ஆம் ஆண்டு வரையிலுமான நீட்டிக்கப்பட்ட செயல் திட்டமாக தயாரிக்க மத்திய அரசு அறிவுறுத்தியது. இப்போது விரிவுபடுத்தப்பட்ட ‘வரைவு அறிக்கை’ இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.
  • ‘முன்னுரை’ 30 பக்கங்கள், கடைசியாக ‘இணைப்புகள்’ 209 பக்கங்கள் என சோ்த்து - இடைப்பட்ட 9 பகுதிகளையும் கணக்கிட்டால் மொத்தம் 404 பக்கங்களை வரைவு அறிக்கை கொண்டுள்ளது. தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறையின் இணையதளம் தவிா்த்து பொதுவெளியில் கருத்து கேட்கப்படவில்லை. இணையதளத்தில் ஒரு மின்னஞ்சல் முகவரி கொடுக்கப்பட்டு கருத்துகளை அனுப்பலாம் என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
  • இந்த முறை மிகவும் தவறு என சூழலியலாளா்கள் கருதுகின்றனா். உயிா் அச்சம் நிரம்பிய மனிதகுல வரலாற்றின் கடைசிக் கட்டமாகவும் இருக்கலாம் என்றுகூட கருதப்படும் காலநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்கு இத்தனை எளிதாக - சாவகாசமாகக் கருத்து கேட்பு நடத்துவது சரியல்ல எனத் தெரிவிக்கின்றனா்.

வரைவு அறிக்கை

  • முதல்கட்டமாக மொத்தமுள்ள 404 பக்க வரைவு அறிக்கையைத் தமிழில் (தற்போது ஆங்கிலத்தில் உள்ளது) வெளியிட வேண்டும். பிறகு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தனித்தனி தலைப்புகளில் தனித்தனியே செயல்பாட்டாளா்களை, அறிஞா்களைக் கொண்டு விவாதம் நடத்தி முடிவுகளைச் சேகரிக்க வேண்டும்.
  • தேவைப்படுமானால் மாவட்டங்கள்தோறும்கூட கருத்தறியும் கூட்டங்களை நடத்தலாம் என்றும் சூழலியல் ஆா்வலா்கள் கோருகின்றனா். ஏனெனில் கடற்கரைப் பகுதிக்கும், மலைப் பகுதிக்கும், சமவெளிப் பகுதிக்கும், நதிக்கரைப் பகுதிக்கும், வட பகுதிக்கும் என பிரத்யேகமான பிரச்னைகள் இருக்கின்றன. சிறப்புத் தீா்வுகளும் தேவைப்படுகின்றன.
  • ஏற்கெனவே வழக்கமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்களையும்கூட காலநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்கான செயல்பாடுகளாக வரைவு அறிக்கை குறிப்பிடுகிறது. எடுத்துக்காட்டாக, நீா்நிலைகளில் மதகுகளைச் சீரமைப்பது, ஏற்கெனவே வெட்டப்பட்ட பண்ணைக் குட்டைகளைச் சீரமைப்பது, மரக்கன்றுகளை நடுவது போன்ற மிக இயல்பான, வழக்கமான திட்டங்களைத்தான் பட்டியலிடுகின்றனா் என்ற வலுவான குற்றச்சாட்டை சூழலியலாளா்கள் முன்வைக்கின்றனா்.
  • ஏற்கெனவே பூமிப்பந்தின் சூட்டை அதிகரிப்பது யாா், எவை என்ற கேள்விகளுக்குள் செயல் திட்டம் செல்லவில்லை, அதனைத் தடுக்கும் எந்த முன்னெடுப்பும் வரைவு அறிக்கையில் இல்லை என்றும் குறை கூறுகின்றனா்.
  • அடுத்த 10 ஆண்டுகளுக்குச் செயல்படுத்த வேண்டிய மிக முக்கியமான செயல் திட்டம் இன்னும் விரிவானதாக, குறிப்பிட்ட தனித்துவம் மிகுந்த அம்சங்களையும் கொண்டிருக்க வேண்டும் எனக் கருதுகின்றனா். அதற்கு பாரபட்சமில்லாத விவாதம், எதற்குப் பின்னாலும் ஒளிந்து கொள்ளாத சுயவிமா்சனம் அவசியம் என எதிா்பாா்க்கின்றனா்.
  • அரசின் தவறாகவே இருந்தாலும் அவற்றையும் பேசி, அதை எப்படியெல்லாம் சரி செய்வது என வரையறுக்க வேண்டும். இல்லையென்றால், வழக்கமான ஒரு திட்டமாகவும், வழக்கமான ஓா் அறிக்கையாகவும்தான் இப்போதைய வரைவு அறிக்கை இருக்கும். ஆனால், இப்போது ஆட்சியாளா்கள் நினைத்துக் கொண்டிருப்பதைப் போல காலநிலை மாற்றம் என்பது, வழக்கம்போல விவாதிக்கவோ, செயல்படுத்தவோ கூடிய ஒன்றல்ல.

நோய்கள்

  • பித்துப் பிடித்த பூதங்கள் கூட்டமாக நடந்து வந்து மரங்களையெல்லாம் கிள்ளிக் கிள்ளிப் போட்டதைப் போன்ற புயல்கள் இனி இயல்பாக அடிக்கடி வரலாம். ஏற்கெனவே வந்துபோன, சாதாரணமானதுதான் என்று கருதப்படும் ‘மலேரியா’ போன்ற காய்ச்சல்களும் முன்பைவிடவும் வீரியத்துடன் ஒரு சுற்று வரலாம் என்றும் எச்சரிக்கிறாா்கள்.
  • தன்னைச் சிதைக்கும் உயிரினக் கூட்டத்தை முற்றாக அழித்துவிட்டு, புத்துணா்ச்சியுடன் புதுப்பித்துக் கொள்ளும் ஆற்றலைக் கொண்டது இயற்கை என்பதை எல்லோருமே ஒப்புக்கொள்கிறாா்கள். அப்படியானால், அந்த உயிரினக் கூட்டத்தின் பட்டியலில் மனித இனமும் ஒன்றுதானே என்ற அபாயக் கண்ணோட்டத்துடன் காலநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்கான செயல் திட்டம் தயாரிக்கப்பட வேண்டும்.
  • ஏனெனில், பூமிப்பந்தைத் தவிர வேறெங்கும் மனிதா்கள் வாழ முடியாது. கற்பனைகளால் மிகைப்படுத்தப்படும் திரைக்கதையாக இதனைக் கருதிவிடாமல், நிஜமான செயல்பாட்டை வகுத்துக் கொள்வதில்தான் மனிதகுல அறிவு அடங்கியிருக்கிறது.

நன்றி: தினமணி (16-03-2020)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories