TNPSC Thervupettagam

தமிழகத்துக்கு எச்சரிக்கை கேரளப் பாதிப்பு

October 28 , 2021 935 days 546 0
  • இயற்கைச் சீற்றத்தால் பெரும் நிலைகுலைவுக்கு ஆளாகியிருக்கிறது கேரளம். இப்போதெல்லாம் இது வருடாந்திர நிலைகுலைவாகவும், பேரழிவாகவும் மாறிவருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
  • தமிழகத்தில் இதை வெறும் மழை, வெள்ளச் செய்திபோலப் பெரும்பான்மையினர் கடந்து செல்கிறார்கள். ஆனால், இது கேரளத்தோடு முடிந்துவிடக் கூடிய கதை இல்லை.
  • சமீபத்தில் கேரளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் இது தொடர்பில் பல கேள்விகளை எழுப்புகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையின் 40% கேரளத்தில்தான் இருக்கிறது. கேரளத்தின் இயற்கை எழிலுக்கும் வளத்துக்கும் அதுவே காரணம்.
  • கேரளத்துக்கு மட்டும் அல்ல; இந்தியாவின் உயிர்நாடிகளுள் ஒன்று என்றும் மேற்குத் தொடர்ச்சி மலையைக் கூறலாம். அப்படிப்பட்ட பிரதேசத்தில் 2018-ல் தொடங்கி தற்போது வரை வெள்ளம், நிலச்சரிவு என்று தொடர்ந்து இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டுவருவது எதன் அறிகுறி?

உலகின் பெரும் இயற்கைச் சீற்றம்

  • 2018-ல் ஏற்பட்ட கேரளப் பெருவெள்ளமானது 2015-க்கும் 2019-க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் உலக அளவில் ஏற்பட்ட பெரும் இயற்கைச் சீற்றங்களுள் ஒன்றாக ‘உலக வானிலை அமைப்’பின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
  • அந்தப் பெருவெள்ளத்தின்போது வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 483. மேலும் 15 பேரைக் காணவில்லை. சமீபத்திய நிலச்சரிவுகளின் போது 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள்.
  • இது தொடர் நிகழ்வாக ஆனபோதும் அந்தந்த பேரிடர்களின்போது மேற்கொள்ளப்படும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுடன் மாநில, ஒன்றிய அரசுகள் நின்றுவிடுகின்றன.
  • இது உருவாக்கும் விரிவான சித்திரத்தைத் தங்கள் மனக்கண்ணில் காணும் சக்தியற்றவர்களாக அல்லது காண விரும்பாதவர்களாக ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்.

மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கியத்துவம்

  • உலகின் மிக முக்கியமான உயிர்ப் பன்மைக் கோளங்களுள் (Biodiversity hotspot) ஒன்று மேற்குத் தொடர்ச்சி மலை. குஜராத்-மஹாராஷ்டிரம் எல்லையில் தொடங்கி தமிழ்நாட்டில் கன்னியாகுமரி வரை நீளும் இதன் மொத்த நீளம் 1,600 கிமீ. பரப்பளவு 1,60,000 சதுர கிமீ.
  • குஜராத், மஹாராஷ்டிரம், கோவா, கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு என்று ஆறு மாநிலங்களில் பரவியுள்ள மலைத் தொடர் இது. நீளத்தில் இமயமலைக்கு அடுத்தபடியாக இருந்தாலும், வயதில் இமயமலையைவிட மூத்தது.
  • மேற்குத் தொடர்ச்சி மலையின் 39 இடங்கள், யுனெஸ்கோவின் ‘உலக பாரம்பரிய இடங்கள்’ பட்டியலில் இடம்பிடித்தவை. சுமார் 5 ஆயிரம் பூக்கும் தாவர வகைகள், 139 பாலூட்டிகள், 508 பறவை இடங்கள், 179 நீர்நில வாழ்விகள் இங்கே காணப்படுகின்றன.
  • உலக அளவில் அழிவுக்குள்ளாகியிருக்கும் உயிரினங்களில் 325 அரிய உயிரினங்கள் இங்கே காணப்படுகின்றன. இந்த அளவுக்கு உயிரிப் பன்மைத்துவ முக்கியத்துவம் கொண்ட இந்தப் பிரதேசத்தை நாம் எப்படிப் பாதுகாக்க வேண்டுமோ அப்படிப் பாதுகாக்க வில்லை என்பதே உண்மை.
  • மேற்குத் தொடர்ச்சி மலையைப் பாதுகாப்பது தொடர்பாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, சூழலியலாளர் மாதவ் காட்கில் தலைமையிலான வல்லுநர் குழு ஒன்றை அமைத்தது.
  • அந்தக் குழு 2011-ல் தனது அறிக்கையை அரசிடம் கொடுத்தது. மேற்குத் தொடர்ச்சி மலையின் 64% பரப்பளவு தீவிரமாகப்  பாதுகாக்கப்பட வேண்டியது என்று கூறியது அந்த அறிக்கை.
  • இதனைக் கேரளத்தை அப்போது ஆண்ட காங்கிரஸ் தலைமையிலான அரசு ஏற்கவில்லை. மாதவ் காட்கில் அறிக்கையையோ, அதன் நீர்த்த வடிவமாக 2013-ல் வெளியான கஸ்தூரி ரங்கன் அறிக்கையையோகூட யாரும் ஏற்கவில்லை.
  • இந்த அறிக்கைகளை எதிர்ப்பது மேற்குத் தொடர்ச்சி மலையைச் சார்ந்த மக்களிடையே அரசியல் செல்வாக்கைப் பெற்றுத்தரும் என்பதைக் கட்சிகள் கண்டுகொண்டன.
  • அறிவியல் கண்கொண்டு இயற்கையை அணுகாமல் இப்படி அரசியல் ஆதாயக் கண் கொண்டு அணுகுவதன் விளைவையே தற்போது நாம் கண்டுகொண்டிருக்கிறோம்.
  • 2018-2019-ம் ஆண்டுக்கு இடையில் மட்டும் கேரளத்தில் 2,062 நிலச்சரிவுகள் நிகழ்ந்துள்ளன. இதில் இடுக்கி மாவட்டத்தில் மட்டும் 1,048 நிலச்சரிவுகள் ஏற்பட்டிருக்கின்றன.
  • இதெல்லாம் சொல்லும் உண்மை என்ன? சூழலியல் நுண்மை வாய்ந்த பகுதிகளில் மக்கள் தொகைப் பெருக்கம் பெரும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது. சமவெளி மனிதர்களுக்கான தேவைகளுக்காகவும் மேற்குத் தொடர்ச்சி மலை சுரண்டப்படுகிறது.
  • சூழலியல் நுண்மை வாய்ந்த பகுதிகளில் அணைகள் கட்டுதல், சாலைகள் அமைத்தல், சுரங்கப் பணிகள் போன்றவற்றால் கிடைக்கும் பயனைவிட இழப்புகள்தான் அதிகமாக இருக்கின்றன.
  • ஒரு உதாரணம், 2018 கேரள வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்பு சுமார் ரூ.40 ஆயிரம் கோடி. 2019-2020-ம் ஆண்டில் திரிபுரா மாநிலம் தாக்கல் செய்த வரவுசெலவு அறிக்கையின் மொத்த மதிப்பே ரூ.17,530 கோடிதான் என்பதை இதனுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் இழப்பின் அளவு நமக்குப் புரியும்.

என்ன செய்ய வேண்டும்?

  • என்ன செய்யலாம்? சுற்றுச்சூழல் பாதுகாப்பை அரசும் மக்களும் வளர்ச்சிக்கு எதிரானதாகப் பார்க்காமல் வளர்ச்சியோடு ஒத்திசைந்ததாகப் பார்க்க வேண்டும். அப்படி ஒரு பார்வை உருவாவதற்குச் சூழலியர்கள் மட்டும் செயல்பட்டால் போதாது.
  • அரசியலர்களும் தங்கள் கட்சிக் கொள்கைகளுள் ஒன்றாகச் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உள்ளடக்க வேண்டும். அப்படித்தான் மக்கள் பிரக்ஞைக்குள் சுற்றுச்சூழலைக் கொண்டு வர முடியும்.
  • நம் பக்கத்து மாநிலமான கேரளத்தில்தானே என்று நாம் சும்மா இருந்துவிட முடியாது. கணிசமான அளவு நம் மாநிலத்திலும் மேற்குத் தொடர்ச்சி மலை இருக்கிறது. நம் நீராதாரங்கள் அனைத்தையும் அங்கிருந்தே பெறுகிறோம்.
  • மேற்குத் தொடர்ச்சி மலைக்கு ஒரு பாதிப்பென்றால் அது நமக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இது மேற்குத் தொடர்ச்சி மலைக்கு மட்டுமல்ல இயற்கையின் எந்த கூறுக்கும் பொருந்தும்.
  • ஆகவே, கேரள வெள்ளத்தையும் நிலச்சரிவுகளையும் நாம் செய்திகளாகக் கடந்துவிட முடியாது. கூடாது. இயற்கை பாடம் கற்றுக்கொடுத்திருக்கிறது. அதை எப்படிச் செயல்படுத்தப் போகிறோம் என்பதைப் பொருத்தே இயற்கையின் எதிர்வினை இருக்கும்.

நன்றி: அருஞ்சொல் (28 - 10 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories