TNPSC Thervupettagam

தேர்தல் முடிவு குறித்த தலையங்கம்

March 1 , 2022 799 days 411 0
  • தமிழ்நாட்டில் அண்மையில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தின் போது, ஒரே நாடு - ஒரே தேர்தல் அடிப்படையில் 2024-இல் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெறப் போகிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும், பல இடங்களில் பேசியது ஊடகங்களில் விவாதப் பொருளாகி இருக்கிறது.
  • பிரதமர் நரேந்திர மோடி கடந்த பல ஆண்டுகளாகவே "ஒரே நாடு ஒரே தேர்தல்' என்பதை வலியுறுத்தி வருகிறார். நமது நாட்டில் இது சாத்தியமாவது அவ்வளவு எளிதல்ல.
  • அஸ்ஸாம், கேரளம், தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுடன் புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்துக்கும் 2021-இல் தேர்தல் நடைபெற்றது.
  • பஞ்சாப், கோவா, உத்தரகண்ட் மாநிலங்களில் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடந்துள்ளது.
  • மணிப்பூரில் மார்ச் 3 வரை 2 கட்டங்களாகவும், உத்தர பிரதேசத்தில் மார்ச் 7 வரை 7 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறுகிறது. ஹிமாசல பிரதேசத்திலும், குஜராத்திலும் இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
  • மத்திய பிரதேசம், கர்நாடகம், ராஜஸ்தான், தெலங்கானா,திரிபுரா, மேகாலயம், சத்தீஸ்கர், மிúஸாரம், நாகாலாந்து ஆகிய 9 மாநிலங்களில் 2023-இல் சட்டப்பேரவைத் தேர்தலும், 2024-இல் மக்களவைத் தேர்தலும் நடைபெற உள்ளன.

ஒரே நாடு ஒரே தே‌ர்​த‌ல்?

  • மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, பல மாநிலங்களில் ஆட்சியில் உள்ளதால், அங்கெல்லாம் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளவும், 2024 தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவும் பிரதமர் நரேந்திர மோடி முதல், மத்திய அமைச்சர்கள் வரை பலரும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்கள்.
  • ஒவ்வோர் ஆண்டும் பல மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதால், அமைச்சர்களின் அரசு ரீதியான அலுவல்கள் பாதிக்கப்படுகின்றன.
  • ஒரே நேரத்தில் மக்களவைக்கும், சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெற்றால் இவர்கள் நிர்வாக ரீதியான அலுவல் களில் கவனம் செலுத்த முடியும் என்று ஒரே நேரத்தில் தேர்தலை வலியுறுத்துபவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
  • மேலும் ஒவ்வொரு தேர்தலின்போதும், வாக்குப்பதிவுக்காக பல்லாயிரம் கோடி ரூபாய் அரசின் நிதி செலவழிக்கப்படுகிறது.
  • தேர்தல் பிரசாரத்துக்காக கட்சிகள் செலவழிக்கும் தொகைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டிருந்தாலும், அவற்றை எந்தக் கட்சியும் கண்டுகொள்ளாததால் ஒவ்வொரு தேர்தலின் போதும் கட்சிகள் ஏராளமான பணத்தை செலவிடுகின்றன.
  • ஒவ்வொரு தேர்தலின்போதும், பல்லாயிரக்கணக்கான உள்ளூர் போலீஸாரும், துணை ராணுவப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
  • ஆயிரக்கணக்கில் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தேர்தல் பணிகளில் அமர்த்தப்படுகிறார்கள். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்படுவதால் அரசுப் பணிகள் பெருமளவில் பாதிக்கப்படுவதை மறுப்பதற்கில்லை.
  • ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால் போலீஸார், துணை ராணுவப் படையினர், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் மனித ஆற்றலும், கோடிக்கணக்கான மக்கள் வரிப்பணமும் விரயமாவது தடுக்கப்படும் என்பதும் ஏற்கக்கூடிய வாதமே.
  • நம் நாட்டில் 1967 வரை ஒரே நேரத்தில்தான் பேரவைக்கும், மக்களவைக்கும் தேர்தல் நடைபெற்றது. ஆனால், அதன் பின்னர் அவ்வப்போது மாநில அரசுகள் கலைக்கப்பட்டதால் சட்டப் பேரவைத் தேர்தல் நடத்தும் சூழல் ஏற்பட்டது.
  • தமிழ்நாட்டிலேகூட, 1977-இல் பதவியேற்ற எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக அரசு, விவசாயிகள் போராட்டத்தைக் காரணம் காட்டி 1980-இல் கலைக்கப்பட்டது.
  • 1989-இல் தேர்தலில் திமுக வென்று கருணாநிதி முதலமைச்சர் ஆனார். சட்டம் - ஒழுங்கைக் காரணம் காட்டி 1991-இல் அவரது அரசு கலைக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது. இதுபோன்ற சூழல்கள் ஏற்பட்டால் எவ்வளவு ஆண்டுகள் தேர்தல் நடத்தாமல் இருக்க முடியும்?
  • ஒரு தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல், கூட்டணி ஆட்சிக்கும் வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டால் என்ன செய்வது? இதுபோன்ற சூழ்நிலை பிகாரில் ஏற்பட்டது.
  • அங்கு 2005 பிப்ரவரியில் நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணியும் அமையவில்லை. எனவே, அதே ஆண்டு அக்டோபர் - நவம்பரில் மீண்டும் தேர்தல் நடைபெற்றது.
  • பதவிக் காலம் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் இருக்கையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில், மத்திய அரசோ, மாநில அரசோ தோல்வியடைந்தால் என்ன செய்வது?
  • ஜெர்மனியில், பதவியில் இருப்பவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவர் தோல்வி அடைந்தாலும், மற்றொருவருக்குப் பெரும்பான்மை கிடைக்க வில்லை என்றால் முதலாமவரே ஆட்சியில் தொடர முடியும்.
  • ஆனால், எந்த மசோதாவையும் நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்படும். இது ஆட்சியாளருக்கு மிகவும் சிக்கலைத்தான் ஏற்படுத்தும்.
  • 2024-இல் ஒரே நேரத்தில் தேர்தல் என்றால், சில மாநில அரசுகளின் பதவிக் காலத்தை நீட்டிக்க வேண்டும்; வேறு சில மாநில அரசுகளின் பதவிக் காலம் குறைந்துவிடும்.
  • மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக எந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தாலும் தீவிரமாக எதிர்ப்பது என காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, சிவசேனை உள்ளிட்ட பல எதிர்க் கட்சிகள் முனைப்புடன் உள்ளன.
  • நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மகளிருக்கு இட ஒதுக்கீடு என்ற விஷயத்தில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை என்ற காரணத்தால் அது கிடப்பில் போடப்பட்டது.
  • அதே போல, பல எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்க்கும் என்பதால் "ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டமும் நடைமுறை சாத்தியமாவது என்பது கானல் நீர்தான்.

நன்றி: தினமணி (01 – 03 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories