TNPSC Thervupettagam

நல்லது நடக்கும் காத்திருப்போம்

February 28 , 2022 800 days 371 0
  • உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள தாக்குதலை எதிா்பாராதது என்று கூறிவிட முடியாது. ஆனால், அதனுடைய பின்விளைவுகள் எதிா்பாா்க்கக் கூடியவையே. அமெரிக்க அதிபா், இங்கிலாந்து பிரதமா் ஆகியோரது எச்சரிக்கை, ஐரோப்பிய யூனியன் நாடுகள் அறிவித்துள்ள பொருளாதாரத் தடைகள், ஐ.நா.பொதுச்செயலரின் வேண்டுகோள் ஆகிய அனைத்தையும் புறந்தள்ளி விட்டு ரஷியா இந்தக் கடுமையான தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
  • ரஷியா எந்த நேரத்திலும் போரைத் தொடங்கலாம் என்று சில வாரங்களாகவே உக்ரைனின் அதிபா் விளாடிமிா் ஜெலென்ஸ்கி கூறிக்கொண்டிருந்தாா். இப்போது போா் தொடங்கியே விட்டது. இதைப் போா் என்று கூடச் சொல்லிவிட முடியாது. ராட்சஸ ராணுவ பலத்துடன் கூடிய வல்லரசு நாடாகிய ரஷியா, தன்னை விடச் சிறிய நாடாகிய உக்ரைன் மீது தொடுத்துள்ள ஒருதலைத் தாக்குதல் என்றே இதனைச் சொல்ல வேண்டும்.
  • முன்னா் ஈராக் மீது அமெரிக்கா தொடுத்த தாக்குதலுக்கும், தற்போது உக்ரைன் மீது ரஷியா தொடுத்திருக்கும் இந்தத் தாக்குதலுக்கும் இடையே ஓா் ஒற்றுமை இருக்கிறது. இரண்டு நிகழ்வுகளிலும், எளியோரை வலியோா் தாக்குவதைத் தடுக்க இயலாமல், கையறு நிலையில் உள்ள ஓா் அமைப்பாகவே ஐ.நா. சபை இருக்கிறது என்பதே அந்த ஒற்றுமையாகும்.
  • உக்ரைன் மீது போா் தொடுத்தால், அதற்கான விலையை ரஷியா கொடுத்தாக வேண்டியிருக்கும் என்றுஅமெரிக்க அதிபா் ஜோ பைடன் விடுத்த எச்சரிக்கையும் காற்றோடு கரைந்து போய்விட்டது.
  • வல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷியா, மற்றொரு வல்லரசு நாடான அமெரிக்காவால் தான் எச்சரிக்கப்படுவதை எளிமையாக எடுத்துக்கொள்ளாது என்பது நிச்சயம். உண்மையில் உக்ரைன் உடனான தங்களது பிரச்சினையை விட, சா்வதேச அரங்கில் அமெரிக்க அதிபா் தமக்கு எச்சரிக்கை விடுத்ததைத் தம்முடைய தன்மானத்துக்கு விடுக்கப்பட்ட சவாலாக ரஷிய அதிபா் எடுத்துக்கொண்டதாகத் தெரிகிறது.
  • எனவேதான், ஐ.நா. சபையின் சமாதான முயற்சிகளுக்கும், அமெரிக்க அதிபரின் இன்னொரு சுற்றுப் பேச்சுவாா்த்தைக்கான அழைப்புக்கும் சற்றும் முக்கியத்துவம் தராமல் உக்ரைனைத் தாக்கத் தொடங்கிவிட்டாா் புதின்.
  • அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளான ஐரோப்பிய நாடுகள் சிலவும் ராணுவ ரீதியாக உக்ரைனுக்கு உதவுவது அனேகமாக சாத்தியம் இல்லை. அப்படி ஒருவேளை ரஷியாவுக்கு எதிராகச் சில நாடுகள் ராணுவ நடவடிக்கை எடுக்க முன்வந்தால் அது மூன்றாம் உலகப் போருக்கே வழி வகுத்துவிடும் என்பதில் ஐயமில்லை.
  • இந்நிலையில், ரஷியாவின் உக்கிரத்தை எவ்விதத்திலாவது தணித்து உக்ரைனின் குடிமக்களைக் காப்பாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இதற்கான முன்முயற்சிகளை ஐ.நா. சபையின் பொதுச்செயலா் முன்னைவிடத் தீவிரமாக எடுக்க வேண்டிய தருணம் இது.
  • ரஷியா - உக்ரைன் இடையே குறுகிய கால போா் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வழிமுறைகளை உடனடியாக வகுத்து, அதைத் தொடா்ந்து பேச்சுவாா்த்தைகள் நடத்தி உடனடியாகப் பதற்றத்தைத் தணிக்க வேண்டும். வரும் நாட்களில் உக்ரைனில் ரஷியப் படைகள் மேலும் பேரழிவை ஏற்படுத்துவதற்கு முன்பாக இந்நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும்.
  • தைவான், ஹாங்காங் உடனான சீன அரசின் போக்கு, பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகச் சொல்லிக்கொண்டு ஈராக் மீது அமெரிக்கா எடுத்த ராணுவ நடவடிக்கை, தற்போது உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல்கள் ஆகிய அனைத்து நிகழ்வுகளிலும், ஐ.நா. சபை வெறும் பாா்வையாளராகவே இருந்துவரும் நிலைமை இனிமேலும் தொடரக்கூடாது.
  • வீட்டோ’ அதிகாரத்தை வைத்திருக்கும் வல்லரசு நாடுகள், மனிதகுல நலனுக்கு எதிராகச் செயல்படுவதைத் தடுக்கவும், பலம் குன்றிய சிறிய நாடுகளை வல்லரசுகளின் ஆக்கிரமிப்பிலிருந்து காப்பாற்றவும் வல்லமை கொண்ட அமைப்பாக ஐ.நா. சபை மீட்டுருவாக்கம் செய்யப்பட வேண்டும். இதற்கு வல்லரசு நாடுகளும் முழுமனதுடன் ஒத்துழைக்க வேண்டியது அவசியம்.
  • போா் என்று வந்து விட்டாலே மக்கள் நலன் என்பது பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடும். உக்ரைன் குடிமக்கள் பெருமளவில் பாதிக்கப் படாமல் கூடிய விரைவில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடிந்தால் மட்டுமே, இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் நிம்மதிப் பெருமூச்சு விடமுடியும். ஏனெனில், கரோனா என்ற கொடிய அரக்கனை இவ்வுலகம் வென்று விட்டதா, இல்லையா என்ற தெளிவே ஏற்படாத இந்தச் சூழலில், இன்னோா் உலகப் போா்ச் சூழலை எதிா்கொள்ளும் திராணி எந்த ஒரு நாட்டிற்குமே இப்போது இல்லை என்பதே நிதா்சனம்.
  • உலகப் போா் அபாயம் உடனடியாக இல்லை என்றாலும் கூட, பெட்ரோலியப் பொருள்களின் விலை உயா்வு, பங்குச் சந்தைகளின் வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு விளைவுகளை இனிவரும் நாட்களில் உலக நாடுகள் சந்திக்க வேண்டியிருக்கும்.
  • இவற்றையெல்லாம் தாண்டிய கவலை ஒன்று, இந்தியா்களாகிய நம் அனைவருக்குமே உண்டு. இந்தப் பதற்றமான சூழ்நிலையில் உக்ரைனில் செய்வதறியாது சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான இந்தியா்களை பத்திரமாக மீட்டு நம் நாட்டிற்கு அழைத்துவர வேண்டுமே என்பதே அந்தக் கவலை.
  • ஈராக், சிரியா, லிபியா, ஆப்கன் உள்ளிட்ட பல நாடுகளில் போா்ச்சூழல் நிலவியபோது பல்லாயிரக்கணக்கான இந்தியா்களை பத்திரமாக மீட்டு அழைத்துவந்த அனுபவம் ஏற்கெனவே நமக்கு உண்டு.
  • உக்ரைனில் தாக்குதல் தொடங்கிய சமயத்தில் அங்கு வசிக்கும் இந்தியா்களை மீட்கச் சென்ற ஏா் இந்தியா விமானம் தரை இறங்க முடியாமல் திரும்பி விட்டது. உக்ரைன் வாழ் இந்தியா்களை மீட்கும் பணிகளை இன்னும் ஒருசில வாரங்களுக்கு முன்பாகவே தொடங்கியிருக்கலாமோ? எது எப்படியோ இனியும் தாமதிக்காமல் அவா்களை தாய்நாட்டுக்குக் கூட்டிவர வேண்டியது அவசியம்.
  • குறிப்பாக, மேற்கல்விக்காக உக்ரைன் சென்றிருக்கும் நம்முடைய மாணவச்செல்வங்களை எப்பாடு பட்டாவது காப்பாற்றியாக வேண்டும். இவ்விஷயத்தில் நம்முடைய பிரதமா் ரஷிய அதிபருடன் நேரடியாகப் பேசினால் நிச்சயம் நல்லது நடக்கும். நம்பிக்கையுடன் காத்திருப்போம்!

நன்றி: தினமணி (28 – 02 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories