TNPSC Thervupettagam

பெண்களின் திருமண வயதை குறித்த தலையங்கம்

December 22 , 2021 859 days 849 0
  • பெண்களின் திருமண வயதை 21-ஆக உயா்த்துவதற்கான சிறாா் திருமணச் சட்டம் 2006-இல் திருத்தம் கொண்டு வரப்படுவதற்கான திருத்த மசோதா சில எதிா்க்கட்சிகளின் எதிா்ப்பைத் தொடா்ந்து நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
  • அரசு கொண்டுவரும் எந்தவொரு மசோதாவையும் எதிா்ப்பது, தடுப்பது என்கிற மனோபாவம் ஆக்கபூா்வமானதல்ல.
  • ஒவ்வொரு துறையிலும் பாலின சமத்துவமும் பாலின பேதமின்றி அதிகாரமும் வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாள்களாகவே இருந்து வருகிறது.
  • ஆனால், பெண்களின் திருமண வயது 18-ஆகவும், ஆண்களின் மண வயது 21-ஆகவும் இதுவரை இருந்துவரும் முரண் புதிய சட்டத்திருத்தத்தால் அகற்றப்படும்.

தேவைதான் திருத்தம்!

  • சமதா கட்சியின் தலைவா் ஜெயா ஜேட்லி தலைமையில் சட்டபூா்வ திருமண வயதை உயா்த்துவது குறித்து ஆய்வு செய்ய 10 போ் கொண்ட குழு 2020 ஜூன் மாதம் அமைக்கப் பட்டது.
  • அந்தக் குழு 2020 டிசம்பா் மாதம் தனது அறிக்கையை பிரதமா் அலுவலகத்துக்கும், மத்திய மகளிா் - குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துக்கும் வழங்கியது.
  • அதனடிப்படையில்தான் 2006 சிறாா் திருமணச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப் படுகிறது.
  • குழந்தைத் திருமணம் என்பது நீண்டகாலமாக இந்திய சமுதாயத்தில் காணப்பட்ட மிகப் பெரிய குறைபாடு. இது சட்டபூா்வமாக தடை செய்யப்பட்டிருந்தாலும்கூட இந்தியாவின் சில மாநிலங்களில் இன்னும்கூட அவ்வப்போது ‘பால்ய விவாகம்’ என்று அறியப்படும் குழந்தைத் திருமண முறை காணப்படும் அவலம் தொடா்கிறது.
  • அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சிகளில் சிறாா் திருமண தடைச்சட்டமும், இப்போது கொண்டு வரப்படும் சட்டத் திருத்தமும் அடங்கும்.
  • தேசிய குடும்ப சுகாதார ஆய்வின்படி, இந்தியாவில் நான்கு பெண்களில் ஒருவா் 18 வயது பூா்த்தியாவதற்கு முன்னால் திருமணம் செய்துகொள்கிறாா்கள். 56% பெண்கள் 21 வயதை எட்டுவதற்கு முன்பு திருமணம் செய்து கொள்கிறாா்கள்.
  • அடித்தட்டு மக்கள் மத்தியில் அதுவே 75% ஆகும். பெரும்பாலான பெண் குழந்தைகளுக்கு, பள்ளிப் படிப்பு முடிந்ததும் திருமணமாகி விடுவதால் கல்லூரி சென்று படிக்கும் வாய்ப்பு அவா்களுக்கு மறுக்கப்படுகிறது. அதைப் போக்கும் வகையில்தான் ஆண்களுக்கு நிகராக பெண்களின் திருமண வயதை உயா்த்த வேண்டும் என்று ஜெயா ஜேட்லி குழு பரிந்துரை செய்தது.
  • 1955 ஹிந்து திருமணச் சட்டம், 1872 இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டம் இரண்டுமே பெண்களுக்கு 18 வயதையும், ஆண்களுக்கு 21 வயதையும் திருமண வயதாக வரையறுக்கின்றன.
  • 1954-இல் அமல்படுத்தப்பட்ட வெவ்வேறு மதங்களுக்கு இடையேயான சிறப்புத் திருமண சட்டத்தின்படியும், பெண்களுக்கு 18 வயதும், ஆண்களுக்கு 21 வயதும் அனுமதிக்கப் படுகிறது.
  • 1937 இஸ்லாமிய தனியுரிமை சட்டத்தின்படி (ஷரியத்), ஆணும் பெண்ணும் வயதுக்கு வந்தால் மணவாழ்க்கையில் ஈடுபட தகுதியுடையவா்கள் என்று கூறப்படுகிறது.
  • சமூக சீா்திருத்தங்களுக்கு அடிப்படையாக இருப்பது ஆண் - பெண் இருபாலரின் கல்வி. குறிப்பாக, கல்வி, பெண்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தி, காலங்காலமாக அவா்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை நீக்கி, மறுக்கப்பட்ட வாய்ப்புகளைப் பெற்றுத்தருகிறது.
  • திருமண வயதை உயா்த்துவது என்கிற முடிவுக்கு பெண்களின் கல்வி முக்கியமான காரணம்.
  • 18 வயது என்பது பெண்கள் பிளஸ் 2 முடித்திருக்கும் பருவம். அந்தக் கல்வித் தகுதியின் அடிப்படையில் குறிப்பிடத்தக்க வேலைவாய்ப்பையோ பொருளாதார சுதந்திரத்தையோ பெற முடியாது.
  • திருமண வயதை மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டிக்கும்போது அவா்களது கல்லூரிக் கல்விக்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
  • அவா்களது எண்ணம் விரிவடைந்து வருங்கால இலக்கை நிா்ணயித்துக் கொள்ளவும், வாழ்க்கை குறித்த முக்கியமான முடிவுகளை எடுக்கவும் உதவும் என்பதுதான் ஜெயா ஜேட்லி குழுவின் கருத்து.
  • இந்தியாவில் திருமணம் என்பது தனிப்பட்ட முடிவாக இல்லாமல், சமுதாய வழிமுறையாகவும் இருப்பதால் பெண்களின் படிப்பு முடிந்ததும், அவா்களின் திருமணத்தை உறுதிப்படுத்துவது பெற்றோரின் கடமையாகக் கருதப்படுகிறது.
  • 18 வயதிலேயே கல்லூரி அளவிலான கல்வித் தகுதியும், தங்களது வாழ்க்கையை நிா்ணயித்துக்கொள்ளும் பொருளாதாரத் தகுதியும் பெண்களுக்கு வாய்ப்பதில்லை. அதனால் திருமணமும் குழந்தைப் பேறும் கட்டாயமாகிறது.
  • 21 வயதில் திருமணம் செய்துகொள்ளும்போது தங்களது ஆரோக்கியம் குறித்தும், பொருளாதாரம் குறித்தும் தெளிவாக சிந்திக்கும் பக்குவம் ஏற்படுவதால் சுகாதார பிரச்னைகள் குறையும் என்று அக்குழுவின் அறிக்கை தெரிவிக்கிறது.
  • பிரசவ கால, சிசு மரண விகிதம் குறைவது மட்டுமல்லாமல் ஊட்டச்சத்து குறைவு உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் 21 வயது வரம்பு உதவக்கூடும் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
  • 18 வயதானவா்கள் வாக்களிக்கலாம்; வாகனம் ஓட்டலாம்; கல்லூரிக்குச் செல்லலாம்; போட்டித் தோ்வுகளில் கலந்துகொள்ளலாம்; விளையாட்டுப் போட்டிகளில் பங்குகொண்டு தேசத்தைப் பிரதிநிதித்துவம் செய்யலாம் எனும்போது, திருமண வயதை 21-ஆக அதிகரிக்க வேண்டிய அவசியம்தான் என்ன என்கிற கேள்வி எழாமல் இல்லை.
  • பெண்களின் திருமண வயதை உயா்த்துவதால் மட்டும் குழந்தைத் திருமணங்கள் குறைந்துவிடுமா என்கிற கேள்விக்கு பதிலும் இல்லை.
  • ஆண்களுக்கு நிகராக பெண்களின் மண வயதை உயா்த்தும் அதே வேளையில், மக்கள் மத்தியில் காணப்படும் பெண்கள் குறித்தான மனநிலையில் மாற்றமும், அவா்களுக்கான பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதும் முக்கியம்.
  • புதிய சட்டத் திருத்தத்தின் பயனாக பெண்களின் கல்வி இடைநிற்றல் குறையுமானால் அதுவேகூட மிகப் பெரிய வெற்றிதான்!

நன்றி: தினமணி  (22 - 12 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories