TNPSC Thervupettagam

விதிவிலக்கு எதற்காக

June 3 , 2021 1067 days 508 0
  • அண்மையில் அலகாபாத் உயர்நீதிமன்றம் (ரிட் பெட்டிஷன் 12740/2020) அறிவுறுத்தியபடி, "இந்திய வங்கிகள் சங்கம்' (இந்தியன் பேங்க்ஸ் அúஸாஸியேஷன்- ஐபிஏ), தலைமை தொழிலாளர் ஆணையர் (மத்திய) புது தில்லி முன்னிலையில் ஒரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
  • அதில் பாரா 8- இல் "ஐபிஏ தனது செயல்பாட்டில் அரசாங்கக் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பொருள் இந்திய அரசாங்கத்திற்கு கூட ஐபிஏ பதிலளிக்கத் தேவையில்லை என்பதே.
  • "ஐபிஏ என்பது உறுப்பினர் வங்கிகளின் தன்னார்வ சங்கமாகும். இது அரசு நிறுவனம் அல்ல; ஒழுங்குமுறை ஆணையமும் அல்ல' என்று ஐபிஏ கூறுகிறது. மேலும் இது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வராது என்பதே ஐபிஏவின் நீண்ட கால நிலைப்பாடு.
  • இந்திய வங்கிகள் சங்கம் 1946-ஆம் ஆண்டிலிருந்து செயல்படுகிறது. தற்போது, ஐபிஏ-வில் பொதுத்துறை வங்கிகள், தனியார்துறை வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள், சொத்து புனரமைப்பு நிறுவனங்கள், கடன் மதிப்பீட்டு நிறுவனங்கள், கடன் உத்தரவாத நிதி, நிதி சேவை நிறுவனங்கள், கடன் பணியகங்கள் உள்ளிட்டவை உறுப்பினர்களாக உள்ளன.
  • ஐபிஏ தனது நோக்கங்களாக பத்தொன்பது விஷயங்களைப் பட்டியலிட்டுள்ளது.
  • உறுப்பினர்களுக்கும் வங்கித் தொழிலுக்கும் உதவிகளை வழங்குதல், பல்வேறு பொதுவான சேவைகளை வழங்குதல், வங்கிச் சேவைகள், செயல்பாடுகள்- நடைமுறைகளில் புதிய யோசனைகள் மற்றும் புதுமைகளை உருவாக்கி செயல்படுத்துதல், நடைமுறை, சட்ட, தொழில் நுட்ப, நிர்வாக, தொழில்முறை பிரச்னைகள், வங்கிகள், வங்கித் துறையின் நடைமுறைகள், வங்கித் துறையில் புதிய அமைப்புகள் அல்லது சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கான முன்கூட்டியே திட்டமிடலைத் தொடங்குவது போன்ற பல குறிக்கோள்களை உள்ளடக்கியதே இந்த நிறுவனத்தின் அடிப்படைக் கோட்பாடு.
  • ஆகவே இது வங்கித் துறையின் முழு வரம்பையும் உள்ளடக்கியது. வங்கிகள் இந்த அனைத்து செயல்பாடுகளிலும் ஐபிஏ-வின் ஆலோசனைகளையே நடைமுறையில் பின்பற்றுகின்றன.
  • இவை ரிசர்வ் வங்கியின் விதிகளுக்குப் புறம்பாக இருக்கமுடியாது என்ற நிபந்தனைக்கு உட்பட்டது. எல்லா உறுப்பினர் வங்கிகளும் ஐபிஏ-வின் ஆலோசனையை தவறாது பின்பற்றுகின்றன என்பதே நிதர்சன உண்மை.
  • ஐபிஏ இந்திய அரசு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கிக்கு வாராக்கடன் சம்பந்தமாக ஆலோசனை தெரிவிக்கிறது. வாராக்கடனை வசூலிக்க தனி வங்கியை உருவாக்கப் பரிந்துரை செய்கிறது.
  • இந்தப் பரிந்துரையின் தொடர்ச்சியாகவே மத்திய நிதி அமைச்சர், பட்ஜெட்டில் வாராக்கடன்களுக்கான தனி வங்கி தொடங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
  • வங்கித் தொழிலாளர்கள் - அதிகாரிகள் சங்கங்களுடன் ஐபிஏ ஊதிய பேச்சுவார்த்தை நடத்துகிறது. மற்றும் இரு கட்சி தீர்வுகள், கூட்டுக் குறிப்புகள் எனப்படும் ஊதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது.
  • 1966-இல் வங்கிகள் சார்பாக பேச்சு வார்த்தை நடத்தி ஊழியர் சங்கத்துடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்திய நடைமுறை இன்றளவும் தொடர்கிறது. சமீபத்தில் உடன்பாடு ஏற்பட்டது பதினோராவது இரு தரப்பு ஒப்பந்தம்.

முரண்

  • உறுப்பு வங்கிகளிடையே ஆரோக்கியமற்ற நடைமுறைகளைத் தடுப்பதற்காக "கிரெளண்ட் ரூல்ஸ் அண்ட் கோட் ஆப் எதிக்ஸ்' என்ற நெறிமுறையை உருவாக்கியது இந்த சங்கமே.
  • இது கிட்டத்தட்ட ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை அதிகாரங்கள் போன்றதே. சமீபத்தில் கரோனாவை எதிர்கொள்ள வங்கிகளுக்கான "ஸ்டாண்டர்டு ஆபரேட்டிங்' நடைமுறைகள் குறித்து வங்கிகளுக்கு ஆலோசனைகளை வழங்கியது ஐபிஏ.
  • இதுபோன்று இந்தியாவில் இயங்கும் எல்லா வங்கிகளின் செயல்பாடுகளிலும் பெரிய அளவிற்கு பங்கு உடைய ஐபிஏ, யாருடைய கட்டுப்பாட்டுக்குள்ளும் வராமல் தனிக்காட்டு ராஜாவாக உலா வருவது பெரும் அதிசயமே.
  • இது வங்கியில்லாததால் ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறையின் கீழ் வராது. அரசு அமைப்பு இல்லாததால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தாங்கள் பதில் சொல்லவேண்டியதில்லை என்பதே ஐபிஏ-வின் நிலைப்பாடு.
  • எல்லா உறுப்பினர் வங்கிகளும் அளிக்கும் நிதியில் ஐபிஏ செயல்படுகிறது. இது பல கோடி ரூபாய்களுக்கான வரவு செலவை உள்ளடக்கியது. ஐபிஏ-வின் வருடாந்தர கணக்கு வழக்குகள் பொதுவெளியில் இல்லை. ஆனால் தனியாக ஓவ்வொரு அரசு வங்கியும் ஐபிஏ-க்கு செலுத்தும் நிதி விவரங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு உட்பட்டதே.
  • கடந்த மூன்று ஆண்டுகளில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 1,09,89,909 ரூபாய் ஐபிஏ-க்கு அளித்துள்ளது. ஆனால் ஐபிஏ-வின் நிதிநிலை அறிக்கை ஸ்டேட் பேங்கிடம் கிடையாது. இதே போன்று மற்ற வங்கிகளிடமும் ஐபிஏ-வின் நிதி அறிக்கை கிடையாது.
  • பொதுத்துறை வங்கிகளிலிருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை பெரும் ஒரு சங்கத்தின் செயல்பாடுகள் எந்த அரசு நிறுவனத்தின் மேற்பார்வையிலும் வராமல் போவது எப்படி?
  • ஆர்.கே ஜெயின் எதிர் இந்தியன் பேங்க் அúஸாசியேஷன் வழக்கை விசாரித்த "சென்ட்ரல் இன்ஃபர்மேஷன் கமிஷன்' ஐபிஏ தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வருவதாகத் தீர்ப்பளித்து அலுவலரை நியமிக்க உத்தரவிட்டது.
  • ஆனால் ஐபிஏ, 2017 டிசம்பரில் தில்லி உயர்நீதிமன்றத்தை அணுகி மேற்படி உத்தரவுக்கு தடை பெற்றுள்ளது.
  • நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையும் பொறுப்புடைமையும் ஜனநாயகத்தின் முக்கிய அம்சங்களாகும். வங்கிகள் சங்கத்தின் இந்த சட்டவிரோத நடத்தைக்கு அரசாங்க இயந்திரங்கள் பார்வையாளர்களாக இருக்க முடியாது.
  • ஐபிஏ நிர்வாகக் குழுவில் உள்ள பொதுத்துறை வங்கிகளுக்கு அரசாங்கம் உரிய முறையில் அறிவுறுத்த வேண்டும். மேலும் ஐபிஏ தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வருவதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
  • பொதுத்துறை வங்கிகள் தகவல் அறியும் சட்டத்திற்குள் வரும்போது, எல்லா பொதுத்துறை வங்கிகளையும் அங்கத்தினர்களாகக் கொண்டுள்ள இந்திய வங்கிகள் சங்கம் தகவல் அறியும் சட்டத்திற்குள் வராது என்பது நகைமுரண்.

நன்றி: தினமணி  (03 – 06 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories