TNPSC Thervupettagam

‘தமிழ்ப் பேராசிரியர்’ க.அன்பழகன்

December 20 , 2021 861 days 553 0
  • சட்டமன்றத்தில், சட்டமன்ற மேலவையில், நாடாளுமன்றத்தில், அரசியல் மேடைகளில் க.அன்பழகனின் நாவன்மையை நாடறியும். திராவிட இயக்கத்தின் மற்ற தலைவர்களுக்குச் சூட்டப்பட்ட சிறப்புப் பெயர்களைப் போல அல்லாமல் ‘பேராசிரியர்’ என்று தாம் பெற்ற கல்வித் தகுதியாலும் பணியனுபவத்தாலும் அழைக்கப்பட்டவர் அவர்.
  • சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஏறத்தாழ 13 ஆண்டுகள் பணியாற்றியவர் அவர்.
  • பேராசிரியர் மோசூர் கந்தசாமி தமிழ்த் துறைத் தலைவராக இருந்தபோது அத்துறையில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்து துணைப் பேராசிரியர் நிலைக்கு உயர்ந்தவர். கந்தசாமிக்குப் பின்பு, அத்துறையின் தலைவராக மு.வரதராசனார் பொறுப்புவகித்தார்.
  • அன்பழகன் தனது பணிக்காலத்தில் இன்டர்மீடியட், பிஏ, எம்ஏ படிப்புகளுக்கு வகுப்பெடுத்துள்ளார். ‘தில்லி நம்மை ஆள்வதுபோல சேரன் சிற்றரசர்களை ஆண்டான்’ என்பது போல இலக்கியத்தோடு அரசியலையும் மாணவர்களுக்குச் சேர்த்துச் சொல்லிக் கொடுப்பது அவர் இயல்பாக இருந்திருக்கிறது.
  • மாணவர் அரசியலில் தலைவராக இருந்தவர் ஆசிரியராகப் பணியேற்ற பின்பும் கல்லூரி வளாகத்துக்குள் அரசியல் பரப்புரைகளைத் தொடர்ந்தார். மாணவர்கள் மனனம் செய்யாமல் கருத்தூன்றிக் கற்க வேண்டும் என்றே அவர் விரும்பியுள்ளார்.
  • தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் உத்திகளிலும் அவர் நாட்டம் கொள்ளவில்லை என்று தெரிகிறது.
  • அன்பழகன் விரிவுரையாளராகப் பணியாற்றிய காலத்தில் அக்கல்லூரியில் பணிபுரிந்த மற்றொரு விரிவுரையாளர் அ.ச.ஞானசம்பந்தன். எதையும் சைவத்தின் கண்கொண்டு பார்ப்பது அ.ச.ஞா வழக்கம்.
  • அன்பழகனோ அதற்கு மாறாக பெரியாரியப் பார்வையை முன்னிறுத்தியவர். அன்பழகனின் பொன்விழா மலரில் அ.ச.ஞா.வும் ஒரு வாழ்த்துக் கட்டுரையை எழுதியிருக்கிறார்.
  • 1972-ல்வெளிவந்த அந்த மலரில் முதற்பாதி அரசியல் தலைவர்களின் வாழ்த்துகளாலும் இரண்டாம் பாதி தமிழ்ப் பேராசிரியர்களின் கட்டுரைகளாலும் நிறைந்துள்ளது. அவரோடு பணியாற்றியவர்களும் அவரிடம் பயின்றவர்களும் தங்களது நினைவலைகளை அந்தக் கட்டுரைகளில் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

குறளன்பர்

  • அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழறிஞர்கள் பலரிடம் பாடம் கேட்கும் வாய்ப்பைப் பெற்றவர் அன்பழகன்.
  • அப்பல்கலையில் அவருக்கு நாவலர் சோமசுந்தர பாரதியார், கா.சு.பிள்ளை, விபுலானந்த அடிகள், பண்டிதமணி கதிரேசனார், அ.சிதம்பரனார் ஆகியோர் ஆசிரியர்களாக அமைந்தனர்.
  • அவர்களிடமிருந்து தான் பெற்ற தமிழ்ப் புலமையைத் தன் மாணவர்களுக்கும் பகிர்ந்தளித்துள்ளார் அன்பழகன்.
  • பேராசிரியராகப் பணியாற்றிய நாட்களில் அரசியல் மேடைகளை மட்டுமின்றி இலக்கிய மேடைகளையும் அவர் அலங்கரித்திருக்கிறார்.
  • காரைக்குடி, தேவகோட்டை, பொன்னமராவதி ஆகிய ஊர்களில் நடந்த திருக்குறள் விழாக்களில் கலந்துகொண்டு வள்ளுவத்துக்கு அவர் வழங்கிய புதிய விளக்கங்கள் கொண்டாடப்பட்டதாகத் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் தமிழ்ப் பேராசிரியர் மெ.சுந்தரம்.
  • வெற்றிலை போடும் வழக்கம் கொண்டிருந்தவர் அன்பழகன். குறளின் அறம், பொருள், இன்பம் மூன்றையும் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்புக்கு உவமை கூறுவது அவரது வழக்கம். வீடுபேறு புகையிலையைப் போல, அதைத் தவிர்த்துவிடலாம் என்பது அவரது கொள்கை விளக்கம்.
  • திருக்குறளைப் படித்து அதனால் மனம்கவரப்பட்டு வள்ளுவரை வியந்து போற்றிய ஆல்பர்ட் சுவைட்சரை அடிக்கடி மேற்கோள் காட்டுவது அவரது விருப்பங்களில் ஒன்றாக இருந்துள்ளது.

இலக்கிய எழுத்தாளர்

  • தமிழ் இலக்கியம் சார்ந்து கட்டுரைகளையும் எழுதிவந்துள்ளார் அன்பழகன். சிங்கப்பூரிலிருந்து வெளிவந்த ‘தமிழ் மலர்’ நாளேட்டில், தமிழ்ப் புலவர்களைப் பற்றி தொடர் கட்டுரைகளை அவர் எழுதிவந்தார்.
  • அவர் ஆசிரியராகப் பொறுப்பேற்றும் கே.ஜி.இராதாமணாளனை துணையாசிரியராகக் கொண்டும் நடத்திய ‘புதுவாழ்வு’ இதழ் தமிழின் மீதும் தமிழ் இலக்கியங்களின் மீதும் அவருக்கிருந்த தனிப்பற்றை எடுத்துக்காட்டுவது. மு.வரதராசனின் கட்டுரைகளும் தமிழ் ஒளியின் கவிதைகளும் இவ்விதழில் வெளியாகியிருக்கின்றன.
  • ‘ஒலிக்கும் சிலம்பு’ என்ற தலைப்பில் இரா.குழூஉத்தலைவன் எழுதிய தொடர் சிலப்பதிகாரத்தின் இலக்கிய நயங்களை எளிய, இனிய நடையில் அறிமுகப்படுத்தியது.
  • தமிழாசிரியர்களுக்குக் குறைவாக ஊதியம் நிர்ணயிக்கப்படுவதைக் கண்டித்தும் தாய்மொழி வழிக் கல்வியின் தேவையை உணர்த்தியும் ‘புதுவாழ்வு’ இதழில் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. கல்வித் துறை சார்ந்து அவருக்கு இருந்த தீவிர அக்கறையையும் ஆர்வத்தையும் இவ்விதழில் வெளிவந்த இதுபோன்ற கட்டுரைகளிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது.
  • 1948 மார்ச் இதழில் வெளியான ‘களஞ்சியப் பணி’ என்ற தலைப்பிலான க.அன்பழகனின் கட்டுரை, கலைக்களஞ்சியப் பணியில் இயல்கள் ஒவ்வொன்றைக் குறித்தும் தமிழிலேயே உள்ள கருத்துகளை ஒன்றுதிரட்டிக் கொடுப்பதற்கு ஒரு பெருங்குழுவை அமைக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியது.
  • பல்துறை அறிஞர்கள் குறித்த அவரது பட்டியல், களஞ்சியப் பணியின் முக்கியத்துவத்தையும் அதில் தமிழறிஞர்கள் பங்கேற்பதில் அவருக்கு இருந்த அக்கறையையும் எடுத்துக்காட்டுகிறது.
  • தமிழிலக்கியம் குறித்தும் கல்வித் துறை குறித்தும் ஒரு தமிழ்ப் பேராசிரியராக அன்பழகன் தனது மேடைப் பேச்சுகளில் முன்வைத்த பல கருத்துகள் திராவிட இயக்க ஏடுகளின் பக்கங்களில் நிறைந்துகிடக்கின்றன.
  • அவருடைய படைப்புகள் நாட்டுடைமையாகியுள்ள நிலையில், அவை தொகுக்கப்பட்டு நூல் வடிவம் பெற வேண்டியது அவசியம்.

நன்றி: இந்து தமிழ் திசை (20 - 12 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories